தர்மபுத்திரர் ஏழை எளியவர்களிடம் மிகவும் கருணை கொண்டவர். வறியோருக்கு அவர் தாராளமாக தான தர்மங்கள் செய்வது வழக்கம். ஒரு சமயம் தர்மபுத்திரருக்குத் தமது ஈகைக் குணத்தையும் விருந்தோம்பும் பண்பையும் குறித்து லேசான கர்வம் தோன்றியது. அவரது உள்ளத்தில் கர்வத்தின் சாயை படிந்தவுடனேயே, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அதை அறிந்துகொண்டார். அத்துடன் தர்மபுத்திரரைத் திருத்தி நல்வழிப்படுத்த ஒரு படிப்பினையைத் தரவும் அவர் முடிவு செய்தார். சாதாரணமாக இருவரும் எங்கோ செல்வது போல, தர்மபுத்திரரை அழைத்துக்கொண்டு ஸ்ரீகிருஷ்ணர் புறப்பட்டார். அப்போது பாதாள லோகத்தை மகாபலி அரசாண்டு வந்தான். மகாபலி ஈடு இணை சொல்ல இயலாத வகையில் மகத்தான அளவில் தான தர்மங்கள் செய்து வந்தான். அவனது விருந்தோம்பும் பண்பை உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் வியந்து பாராட்டினார்கள். ஸ்ரீகிருஷ்ணர் தர்மபுத்திரரைப் பாதாள லோகத்திற்கு அழைத்து வந்தார். இருவரும் மகாபலி அரசாண்டு வந்த தலைநகரிலுள்ள பல தெருக்களின் வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள்.அப்போது தர்மபுத்திரருக்குத் தாகம் எடுத்தது. ஆகவே கண்ணனும் தர்மரும் எதிரே இருந்த ஒரு வீட்டுக்குச் சென்றார்கள். தர்மபுத்திரர் அந்த வீட்டில் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டார். அந்த வீட்டின் மாதரசி ஒரு தங்கக் கிண்ணத்தில் குடிநீர் கொண்டு வந்து தர்மபுத்திரருக்குக் கொடுத்தாள். கிருஷ்ணபரமாத்மா புன்னகையுடன் நடப்பதை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தார். தர்மபுத்திரர் நீர் அருந்தியதும் அந்த வீட்டு மாதரசியிடம், மிக்க நன்றி அம்மா. இது தங்கக் கிண்ணமாக இருக்கிறதே! இதைத் திரும்பவும் எடுத்துச்சென்று பத்திரமான ஓர் இடத்தில் வையுங்கள் என்று சொல்லிக்கொண்டே கிண்ணத்தை நீட்டினார். அதற்குப்பதிலாக அந்தப்பெண்மணி, ஐயா, ஒரு தடவை கொடுத்ததை, அது தங்கக் கிண்ணமானாலும் கூடத் திரும்பப் பெறும் வழக்கம் எங்கள் ராஜ்யத்தில் இல்லை. மேலும், ஒரு முறை உபயோகித்ததை, அது தங்கத்தால் செய்யப்பட்டிருப்பினும் வீசியெறிந்து விடுவோமே தவிர மீண்டும் பயன்படுத்தும் வழக்கமில்லை என்று கூறினாள்.
அவள் சொன்னதைக் கேட்டவுடனே அந்த நாட்டு மக்களின் செல்வச் செழிப்பையும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் புரிந்துகொண்ட தர்மபுத்திரர் மிகவும் வியப்படைந்தார். பிறகு அந்த வீட்டிலிருந்து கண்ணபிரானும் தர்மபுத்திரரும் புறப்பட்டு மகாபலியின் அரண்மனைக்குச் சென்றனர். அங்கு மகாபலியிடம்,அரசே, இன்றைய தினம் தர்மபுத்திரைத் தங்கள் ராஜ்யத்திற்கு அழைத்து வந்திருக்கிறேன். இவர் தான தர்மங்கள் செய்வதில் மிகவும் புகழ் பெற்றவர். ஒவ்வொரு நாளும் இவர் 500 பேருக்கு அன்னதானம் செய்கிறார் என்று கூறி, தர்மபுத்திரரை ஸ்ரீகிருஷ்ணர் அறிமுகப்படுத்தி வைத்தார். ஸ்ரீகிருஷ்ணர் சொன்னதை மகாபலி கேட்டாரோ இல்லையோ,உடனே அவர் தமது இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு, வேண்டாம், வேண்டாம், என்னிடம் சொல்லாதீர்கள்! அப்படிப்பட்ட ஒருவரைப்பற்றி நான் கேட்டுக்கொண்டிருக்கத் தயாராக இல்லை. இங்கு என் ராஜ்யத்தில், என்னிடமிருந்து தானம் பெறுவதற்கு நான் எவ்வளவோ முயற்சி செய்தும் ஒரே ஒருவர் கூட கிடைக்கவில்லை. இங்கே தானம் பெறறு வாழ வேண்டும் என்ற நிலையில் ஒருவர் கூட இல்லை. கொள்வாரில்லாமையால் கொடுப்பாரில்லை, நீங்களோ தர்மபுத்திரர் ஒவ்வொரு நாளும் 500 பேருக்கு அன்னதானம் செய்கிறார் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் அவரது ராஜ்யத்தில் 500 ஏழைகள் இருக்கிறார்கள் என்பது நிச்சயமாகிறது. அதிலிருந்தே அவர் எவ்வளவு அழகாக அரசாட்சி செய்கிறார் என்பது தெரிகிறதே! அப்படிப்பட்ட ஒரு பாவியைப்பற்றித் தெரிந்து கொள்ள நான் ஒரு சிறிதும் தயாராக இல்லை! என்றார். மகாபலி சொன்னதைக் கேட்ட தர்மபுத்திரர் வெட்கத்தால் தலைகுனிந்தார். இவ்விதம் தர்மபுத்திரரின் உள்ளத்தில் கர்வம் பெரிதாக வளர்வதற்கு முன்பே ஸ்ரீ கிருஷ்ணர் அதை அறவே நீக்கி தர்மபுத்திரருக்கு அருள்புரிந்தார்.