ஒரு நகரின் எல்லைப் புறத்தில் இளம் சந்நியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். ஆடம்பரத்தினாலோ ஆரவாரத்தினாலோ இறைவனை அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த அவர், எளிமையும் பக்தியுமே இறைவனை அடைய உதவும் சாதனங்கள் என்பதை நன்றாக அறிந்திருந்தார். தினமும் கடும் தியானம் மேற்கொண்ட அவர் ஞானமுதிர்ச்சி பெற்று, ஒரு மகானுக்குரிய உயர்ந்தநிலையை அடைந்தார். பூலோகத்திலுள்ள சாதாரண மனிதன் தனது இடைவிடாத ஆத்மசாதனைகளாலும், சுயநலமற்ற எண்ணத்தினாலும் இறைபக்தியில் உயர்ந்து நின்றதைக் கண்டார் லோக சஞ்சாரியான நாரதமுனிவர். அவர் தேவர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார். தேவர்கள் அந்த மகானுக்கு சில அபூர்வமான சித்திகளை தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டனர். அவர்கள் அனைவரும் பூலோகம் வந்து மகானை சந்தித்தனர். மகான் அவர்களை அன்புடன் வரவேற்று பல உபசாரங்கள் செய்தார். இதைப்பார்த்த தேவர்கள் மேலும் மகிழ்ந்தனர்.
மாமுனிவரே! உமது பரிசுத்தமான மனதையும், வாழ்க்கையையும் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்கிறோம். உம்மை மனதார பாராட்டுகின்றோம். எங்களின் மகிழ்ச்சியின் அடையாளமாக தங்களுக்கு சில அபூர்வமான சித்திகளை தருகின்றோம். அவற்றைக்கொண்டு நீங்கள் உலக மக்களுக்கு மிகுந்த நன்மை செய்யலாம். உதாரணமாக நீங்கள் நோயுற்றவர்களை தொட்டால் அவர்கள் உடனே குணமடைந்து விடுவார்கள். இது யாருக்மே கிடைக்காத அபூர்வசித்தி. இதை தாங்கள் அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார். அந்த மகான் தேவர்களிடம், அன்புமிக்க தேவர்களே! நீங்கள் தரும் இந்த வரத்தை மறுப்பதற்காக வருந்துகிறேன். நோயுற்றவர்களை காப்பாற்றும் பொறுப்பு என்னுடையதல்ல. அதை இறைவன் கவனித்துக் கொள்வான், என்றார். தேவர்கள் எவ்வளவோ வற்புறுத்தினர். இந்த சித்தி வேண்டாம் என்றாலும் வேறு ஏதாவது பணமோ, பொருளோ பெற்றுக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு மக்களுக்கு உதவுங்கள் என்றனர். எதுவும் வேண்டாமென மகான் மறுத்து விட்டார். அவரது மன உறுதியைக்கண்டு தேவர்கள் மகிழ்ந்தனர். அன்பரே! தாங்கள் எங்களுடைய மனமகிழ்ச்சிக்காவது ஏதாவது ஏற்றுக்கொள்ளுங்கள். என்ன வேண்டும் என்பதை நீங்கள் சொல்லுங்கள் என்றனர். அதற்கு அந்த மகான் இறைவனுடைய அருள் மட்டுமே எனக்கு போதும். அதை பெறுவதற்கு நீங்கள் உதவிசெய்தால் நான் மிகவும் மகிழ்வேன் என்றார்.
தேவர்கள் அதற்குரிய ஏற்பாட்டை செய்வதாக அவருக்கு வாக்களித்து விட்டு, இவ்வளவு நல்ல மனிதராக இருக்கும் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் செழிப்படையும். நோயாளிகள் குணமடைவார்கள். இன்னும் அதிசயங்கள் எல்லாம் நடக்கும். ஆனால் நாங்கள் கொடுக்கும் இந்த வரத்தை சற்று நேரத்தில் நீங்கள் மறந்துவிடுவீர்கள். உங்களை அறியாமல் நீங்கள் போகும் இடமெல்லாம் நன்மையே நடக்கும், என்றனர். பின்னர் அவர்கள் மறைந்து விட்டனர். அதன்பின் அந்த மகான் சென்ற இடமெல்லாம் மழை கொட்டியது. பட்ட மரங்கள் பூத்து குலுங்கின. வறண்டு போன அருவிகள் நீரை சுரந்தன. வறண்ட பூமி செழித்தது. நோயாளிகள் குணமடைந்தனர். மனநோயாளிகள் அமைதி பெற்றனர். ஊனமுற்றவர்கள் நடக்க ஆரம்பித்தனர். பேசாதவர்கள் பேசினர். அந்த சந்நியாசியோ இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் போக்கில் சென்று கொண்டே இருந்தார். மக்கள் அவரை தங்கள் மனதிற்குள் புகழ்ந்தனர். அந்த மகான் அதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக வாழ்க்கையை நடத்தினார்.