குக்கிராமம் ஒன்றில் ஒரு கிழவரும் கிழவியும் வசித்து வந்தனர். கிழவர் மரச்சுள்ளிகளைக் கொண்டு கூடை செய்வார். மனைவி கயிறு திரிப்பாள். கூடைகள், கயிற்றை விற்று வந்த பணத்தில் அவர்கள் குடும்பம் சுமுகமாக நடந்து வந்தது. ஒரு நாள் மனைவி கணவனிடம், எனது தறியோ முறிந்து விட்டது; உங்கள் கத்தியின் பிடியும் பழையதாகிவிட்டது; அது கூடிய விரைவில் விழுந்துவிடும். நீங்கள் காட்டிற்குப் போய் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டு வந்தால் ஒரு புதிய தறியையும் செய்து கொள்ளலாம்; கைப்பிடியும் போட்டுக் கொள்ளலாம் என்றாள். கிழவர் காட்டிற்குச் சென்றார். அங்கு ஒரு மரத்தை வெட்டுவது என்று முடிவெடுத்தார். அதை வெட்டப் போனபோது திடீரென அந்த மரத்திலிருந்து ஓர் அதிசய மனிதர் தோன்றினார். தரையைத் தொடும் மீசையும், பச்சைக் கண்களும் கொண்ட அந்த மனிதர் பார்ப்தற்கே விநோதமாக இருந்தார். என் மரத்தை வெட்டிவிடாதே. அதுவும் வாழ விரும்புகிறது. உனக்கு என்ன வேண்டுமென்று சொல். நான் தருவித்துக் கொடுக்கிறேன் என்று அந்த விநாத மனிதர் கூறினார். வியப்படைந்த கிழவர் என்ன கேட்பது என்று மனைவியிடம் கேட்க வீட்டை நோக்கி ஓடி, அன்பே, நான் என்ன கேட்கட்டும்? நிறையப் பணம் தரும்படி கேட்கட்டுமா? என்று கேட்டார். பணம் நமக்கு எதற்காக? அவர் நமக்கு நிறையப் பணம் தருவதாகவே வைத்துக்கொள்வோம். அதை எங்கு வைத்துப் பாதுகாப்பது? மேலும் திருட்டுப் போய் விடுமோ என்ற பயத்தில் இரவில் நாம் தூங்க முடியாது. அதனால் பணம் நமக்குத் தேவையில்லை என்றே தோன்றுகிறது என்று பாட்டி அமைதியாகக் கூறினாள்.
ஒரு மந்தை ஆடுகள் அல்லது நிறையப் பசுக்களைக் கேட்டால்? அவற்றைப் பராமரிப்பது யார்? ஏற்கனவே ஒரு பசுவும் சில ஆடுகளும் நம்மிடம் இருக்கிறதே? அது போதாதா? ஆடும் வேண்டாம்; பசுவும் வேண்டாம். ஆயிரம் கோழிகள் கேட்டால்...? தாத்தா விடாமல் கேட்டார். அவை அனைத்துக்கும் தீனி போடுவது யார்? நம்மிடம் ஏற்கெனவே மூன்று கோழிகளும் ஒரு சேவலும் உள்ளன, அவையே நமக்குப் போதும். இப்படியாக அவர்களால் ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை.முடிவில், என்ன கேட்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று கூறிவிட்டுக் கிழவர் அதிசய மனிதரிடம் சென்றார். பெரியவரே! என்ன வேண்டும் என்று முடிவு செய்தீர்களா? என்று அந்த வினோத மனிதர் கேட்டார். ஆம் ஐயா! எங்கள் தறியும், கத்தியும் எப்போதும் புதியதாகவே இருக்க வேண்டும். எங்கள் கைகளில் எப்போதும் வ<லுவிருக்க வேண்டும். அவை எங்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கும். இவற்றை மட்டும் தந்தால் போதும் என்றார் பெரியவர் தெளிவாக. வியந்து போன வினோத மனிதர், அப்படியே தந்தேன் என்றார். அன்றிலிருந்து கிழவரும் கிழவியும் கூடை செய்து, கயிறு திரித்து வந்த வருமானத்தைக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குப் போதுமான செல்வம் கிடைத்தது. மிக மகிழ்ச்சியாக இருந்தனர்.