குசேலர் கண்ணனின் பள்ளிக்கூட நண்பர். 27 குழந்தைகளின் தகப்பனார். அக்காலத்தில் அந்தணர்கள் வேதம் கற்பது, யாகம், பூஜை செய்வதில் கிடைக்கும் வருமானத்தில் எளிமையாக காலம் கழிப்பர். இதனால் வறுமை அவர்களை வாட்டும். அதற்காக அவர்கள் கலங்குவதில்லை. குசேலரும் பிள்ளைகள் இருக்கிறார்களே என வருத்தப்பட்டதில்லை. ஆனால், அவரது மனைவி சுசீலைக்கு குழந்தைகள் பட்டினி கிடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், கண்ணனிடம் போய் பணம் வாங்கி வரச்சொல்லி அனுப்பினாள் ஒரு பொட்டலம் ஆவலுடன். குசேலரும் போனார். கண்ணனால் நன்கு உபசரிக்கப்பட்டார். அவலைக் கட்டாயப்படுத்தி வாங்கி சாப்பிட்டார். ஏன் தெரியுமா? பால்யவயதில் சாந்தீபனி முனிவரிடம் மனைவி, இவர்களை விறகு பொறுக்கி வர அனுப்பினாள். போகும் போது வெல்லம் கலந்த அவல் கொடுத்து பிரித்து சாப்பிடும்படி சொல்லி விட்டாள். சிறுவன் குசேலன் கண்ணனின் பங்கையும் சேர்த்து சாப்பிட்டு விட்டான். பிறர்பொருள் திருடுவது பாவம். இதனால், இப்போது திருடியதை கடவுள் கட்டாயமாக திருப்பி எடுத்துக் கொள்கிறார்.
அவர் அவலைத் தின்னவும், அவந்தியிலுள்ள குசேலனின் வீடு செழித்தது. இன்னும் ஒரு பிடி அவலை வாயில் போட்டால், கண்ணனின் செல்வம் முழுமையுமே அங்கே போய்விடும் என்பதால், ருக்மணி தடுத்தாள் என்று சொல்வார்கள். இது தவறு, பரந்தாமனையே கணவனாகப் பெற்ற அவள், அழியும் செல்வத்துக்கா ஆசைப்படுவாள். தன் கணவன் மீது குசேலன் செலுத்தும் அபரிமிதமான பக்தி, அவனுக்கு கிடைக்கப் போகும் செல்வத்தால் அழிந்து விடக்கூடாது என்றெண்ணி தடுத்தாள். அதே போல், ஊர் திரும்பிய குசேலனும் கேவலம்! பசியைப் போக்க செல்வம் வேண்டி உன்னிடம் வந்ததற்காக வெட்கப்படுகிறேன். இது எனக்கு வேண்டாம். எனக்கு முக்தி என்னும் பெருஞ்செல்வத்தைக் கொடு எனக் கதறினார். அவர் நித்ய செல்வமாகிய வைகுந்தம் சென்றார். எதிர்பார்ப்பற்ற பக்தி வேண்டும் என்பதையே குசேலன் கதை விளக்குகிறது.