நாரத மகரிஷி திரிலோக சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். அன்று அவருக்கு பூலோகத்தைப் பார்க்க ஆசை. தனது சுயரூபத்திலேயே சென்று மக்களைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார். பெரும்பாலோனோர், யாரோ ஒருவர் தத்ரூபமாக நாரதர் போலவே வேஷம் அணிந்து, நாடகசாலைக்கு செல்கிறார் போலும், என நினைத்துக் கொண்டனர். மூன்றுபேர் மட்டுமே அவர் நிஜ நாரதர் என்பதை நம்பினர். அவர்களில் ஒருவர் பணக்காரர். அவர் நாரதரிடம், திரிலோக சஞ்சாரியே! தாங்கள் நாராயணனின் திவ்யதேசங்களான பாற்கடலுக்கும், திரு வைகுண்டத்துக்கும் சர்வ சாதாரணமாக சென்று வருபவர். மனித ஜீவன்களான நாங்கள் இறந்த பிறகும், அங்கே செல்வோமா என்பதற்கு எந்த உறுதியோ, உத்தரவாதமோ இல்லை. ஆனால், உங்களுக்கு இதன் ரகசியம் தெரிந்திருக்கும். தாங்கள் சொல்லுங்களேன், என்றார். அந்த சமயத்தில், ஒரு புலவரும், பணக்காரரின் பண்ணையில் பணிபுரியும் விவசாயக் கூலித்தொழிலாளியும் அங்கு வந்தனர். அவர்கள் நாரதரை வணங்கினர். பணக்காரர் கேட்ட கேள்வியையே அவர்களும் நாரதரிடம் கேட்டனர். அவர்களின் கடுமையான இந்த கேள்விக்கு நாரதராலேயே பதில் சொல்ல முடியவில்லை.அவர் சொன்னார்.
நீங்கள் என்னை நிஜமான நாரதர் என மனதார நம்புகிறீர்கள் இல்லையா? என்றார். ஆம்... என்றனர் மூவரும் ஒருமித்த குரலில். சரி! என்னை நம்பும் நீங்கள் மூவரும் மோட்சத்தை அடைய வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், நீங்கள் கேட்ட கேள்விக்குரிய விடை எனக்குத் தெரியாது. அந்த நாராயணனிடமே இதற்கு விடை கேட்டு வருகிறேன். அதுவரை நீங்கள் பொறுத்திருங்கள். வரும் பவுர்ணமியன்று, நிலா உதயமானதும், நீங்கள் உங்கள் ஊர் பெருமாள் கோயிலுக்கு வந்து விடுங்கள். நானும் அங்கே வருவேன், என சொல்லி விட்டு மறைந்து விட்டார். நேராக வைகுண்டம் சென்றார். பரந்தாமனின் தாமரை பாதங்களை திருமகள் பிடித்து விட, அவர் யோக நித்திரையில் இருந்தார். கண்களை மூடிக்கொண்டே, உலக நடப்பைக் கவனிப்பதே யோக நித்திரை. அவருக்கு பூலோகத்தில் என்ன நடந்தது என்பது தெரியும். நாரதர் பரந்தாமனை தரிசித்த உடனேயே, பரந்தாமன் சொல்லிவிட்டார். நாரதா! நடந்ததை நானறிவேன். நீ மீண்டும் பூலோகம் போய், அந்த மூவரிடமும், நான் ஊசியின் காதில் யானையை நுழைத்துக் கொண்டிருப்பதாக சொல், அவர்களில் யார் அதை நம்புகிறார்களோ, அவரே மோட்சத்தை அடைய முடியும் எனச்சொல்லி விடு, என்றார்.
நாரதரை எதிர்பார்த்து, மாலையிலேயே பெருமாள் கோயிலுக்கு போய்விட்டனர் மூவரும். நாரதரும் சொன்னபடியே வந்து விட, மூவரும் ஆவலுடன் ஓடினர். பக்தர்களே! நான் பகவானைப் பார்க்கப் போனேன். அப்போது, அவர், ஊசியின் காதில் யானையை நுழைத்துக் கொண்டிருந்தார். அதனால், அவருடன் பேச முடியாமல் போய்விட்டது, என்று அப்பாவி போல் சொன்னார். பணக்காரனும் புலவரும் சிரித்தனர். அது எப்படி சாமி! ஊசியின் காதுக்குள்ளே ஒட்டகம் நுழையுமா? என்ன கதை அளக்கிறீங்க! நீர் நாரதரே இல்லே! எங்க ஊர் மக்கள் சொன்னது மாதிரி, நீர் நிஜநாரதரே இல்லே, நாடகத்துக்கு வேஷம் போட்டவன்தான், என்றார்கள். தொழிலாளி அதை நம்பினான். என் பரந்தாமன் ஊசியின் காதில் யானையை நுழைக்கும் வல்லமையுடையவனா! ஆஹா, என கொண்டாடினான். நாரதர் அவனிடம், பார்த்தீர்களா! இறைவனால், எதையும் செய்ய முடியும் என நம்புபவனே அவனை அடைய முடியும். இதோ! இந்த தொழிலாளி இறைவனை நம்பினான். இவனே மோட்சமடைவான், என சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.