உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, ஏழை, பணக்காரன் என்பதெல்லாம் மனித வர்க்கம் வகுத்துக் கொண்டது தான். பக்திக்கு அப்படியில்லை என்பதே நந்தனாரீன் வாழ்க்கை சரித்திரம். நந்தனார் என்ற சிவபக்தர் சோழநாட்டிலுள்ள ஆதனூரில் பிறந்தவர். இவரது இனத்தை புலையர் என்பார்கள். நந்தனாருக்கு, தூக்கத்தில் மூச்சு விடும்போது கூட சிவ சிவ என்று தான் வரும். ஆனால், அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை கோயிலுக்குள் அனுப்பதில்லை. எனவே, மனதிலேயே சிவனை வணங்கிக் கொண்டிருந்தார் நந்தனார். கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது. யாழ்களுக்கு நரம்பு செய்து த
ருவது என திருப்பணிகளைச் செய்வார். இதில் கிடைக்கும் காசையும் தனக்கென வைத்துக் கொள்வதில்லை. இறைப்பணிக்கே செலவழித்து விடுவார். தங்கள் ஊர் அருகிலுள்ள திருப்புன்கூர் சிவபெருமான தரிசிக்க நந்தனாருக்கு நீண்ட நாள் ஆசை, ஒரு நாள் திருப்புன்கூர் கிளம்பி விட்டார். கோயிலுக்குள் செல்ல முடியாது என்பதால், வெளியே நின்றபடியே மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தெரிகிறதா என எட்டி பார்த்தார். நந்தி சிலை மறைத்தது. எதுவும் தெரியவில்லை. வெளியே நின்றபடி சிவனைப் புகழ்ந்து பாடி வணங்கினார். உருகிப் போனார் சிவபெருமான். நந்தி தேவரிடம், நந்தி! நீ சற்று விலகிக் கொள். என் பக்தன் நந்தன் வெளியே நிற்கிறான். அவன் என்னைப் பார்க்கட்டும், என்றார்.
நந்தி விலகிக் கொண்டார். வந்திருந்த பக்தர்கள் நந்தி சிலை நகர்வதைக் கண்டு பயமும், பரவசமும் கொண்டனர். ஆனால், நந்தனாருக்காக நந்தி நகர்கிறது என்பதை அவர்களில் யாரும் அறியவில்லை. நந்தனார் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். தூரத்தில் இருந்து பார்த்தபோது, சிவலிங்கம் மூலஸ்தானத்தில் ஏற்றப்பட்ட ஒளிவெள்ளத்தில் பளபளவென தெரிந்தது. விழுந்தும், எழுந்தும், உருண்டும் பரவசப்பட்டு போனார் நந்தனார். (இன்றும் இந்தக் கோயிலில் நந்தி விலகிய நிலையில் தான் இருக்கிறது) சிலர் வாதம் செய்வார்கள். நந்தியை விலகச் சொன்ன சிவன், அவரை உள்ளேயே அழைத்திருக்கலாம் அல்லவா என்று! தானாக அழைப்பதை விட, பிறரால் சகல மரியாதைகளுடன் எந்த ஒரு தீவிர பக்தனும், தனது இடத்துக்குள் வர வேண்டும் என சிவன் நினைத்தார். எனவே, பிரபலமான சிதம்பரம் கோயிலில் அந்த நாடகத்தை நடத்த அவர் திருவுள்ளம் கொண்டார். சிற்றம்பலத்தானை தரிசிக்க நந்தனாருக்கும் ஆசை, கோயிலுக்குள் போக முடியாது என்றாலும், அந்த தலத்தில் தன் கால்பட்டாலே புண்ணியம் என நினைத்தார். இன்றுபோவோம், நாளை போவோம் என நாட்கள் பல காரணங்களால் தள்ளிப்போயின. எப்படியோ ஒருநாள், அவர் அங்கு கிளம்பிவிட்டார். ஊர் எல்லையை அடையவே, கோயிலில் இருந்து வேத மந்திரங்கள் ஒலிக்கும் சப்தம் கேட்டது. பரவசமாகி விட்டார் நந்தனார். ஆங்காங்கே பக்தர்கள் கூடி நின்று நடராஜப் பெருமானின் திருஅழகு நடனக்கோலத்தையும், பொன்னம் பலத்தின் பெருமையையும் பேசிக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் கேட்ட அவர், அந்த ஊருக்குள் செல்ல தனக்கு சிறு தகுதி கூட கிடையாது என ஒரு சத்திரத்தின் திண்ணையில் அமர்ந்து விட்டனர்.
தில்லையில் கால் வைத்ததே பெரிய பேறாக அவருக்கு ஆகிவிட்டது. கூட்டம் குறையும் நேரத்தில் கோயில் வாசல் பக்கம் போய் ஒரு பார்வை பார்த்து விட்டால், தன் பிறந்த பலனை அடைந்து விடலாம் என கருதி காத்துக்கிடந்தார். தன் பக்தனின் அரிய பக்தியை மெச்சிய ஆனந்தக்கூத்தனான நடராஜர், தில்லைவாழ் அந்தணர்களின் கனவில் தோன்றினார். அந்தணர்களே! என் பக்தனான நந்தனார் ஊர் எல்லையில் என்னைத் தரிசிக்க காத்திருக்கிறான். குலத்தால் புலையன் என்றாலும், பக்தியால் அந்தணனை விட உயர்ந்தவன். நாளை செல்வோம் நாளை செல்வோம் என நினைத்து நினைத்து உருகி என்னைப் பார்க்க நீண்ட ஆண்டுகளுக்குப் பின் வந்துள்ளான். அவனை இங்குள்ள அனைவரும் திருநாளைப் போவார் என்றே மரியாதையாக அழையுங்கள். அவனை தீக்குளிக்க செய்யுங்கள். அவன் தீயில் இருந்து தங்கம் போல் மின்னும் உடலுடன் திருநீறு பூசி, முப்புரி நூல் அணிந்து, ருத்ராட்சத்துடன் வெளியே வருவான். அவனை ஊர்வலமாக என் சன்னதிக்கு அழைத்து வாருங்கள் என்றார். அந்தணர்கள் ஓடோடிசென்று நடந்ததைச் சொல்லி அவரை வரவேற்றனர். நந்தனார் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அம்பலத்தான் கனவில் அருளியதுபோலவே அனைத்தும் நடந்தேறியது. அவர் கோயிலுக்குள் சகல மரியாதைகளுடன் அந்தணர்களுடன் நுழைந்தார். ஒரு தாழ்த்தப்பட்டவனை கோயிலுக்குள் வரவழைக்க அம்பலத்தான் ஆடிய விளையாடலை எண்ணி அகம் மகிழ்ந்து அவனோடு ஒன்றிப் போனார். திடீரென ஜோதிப்பிழம்பாகி நடராஜருடன் ஐக்கியமாகி விட்டார்.