ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று சொன்ன புத்தபிரான், உலகம் துன்ப மயமானது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல சுட்டிக் காட்டினார். எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுவதற்காகவும், நிர்வாணம் என்று பௌத்தம் குறிப்பிடும் மெய்யறிவில் நிலைபெற்ற பேரின்ப முக்தி நிலையைப் பெறுவதற்காகவும், ஆண்களையும் பெண்களையும் பாகுபாடின்றித் துறவற வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தார். புத்தர் பெருமான் நிறுவிய துறவியர்களைக் கொண்ட பௌத்த சங்கம், அலாதியான மகிமை பெற்ற மணிமகுடமாக உலக சரித்திரத்தில் விளங்குகிறது. புத்தபிரானின் திருவருளைப் பெற்று ஆயிரமாயிரம் மக்கள் வாழ்க்கையின் பயனை அடைந்திருக்கிறார்கள். அவர்களிலே, துறவற வாழ்க்கையை மேற்கொண்டு தெய்வத்தின் நிலையில் வைத்து பூஜிக்கும் நிலையை அடைந்த பெண்மணிகளும் இருக்கிறார்கள். பௌத்த பிக்ஷúணிகளில், மகான்களின் நிலையிலே வைத்து அன்றும் இன்றும் வழிபடப்படுபவர்களில் படாசாரா எனும் பெண்மணியும் ஒருவர். அவளுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள்.
படாசாரா என்றால் பரிபூரண நல்லொழுக்கம் கொண்டவர், கடமைகளைச் சரிவர முழு அளவில் ஆற்றியவர் என்பது பொருள். இந்தப் பெயர் அவளுக்குத் துறவற வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு கொடுக்கப்பட்டது. அவளுடைய இயற்கைபெயர் என்ன என்பது தெரியவில்லை. பண்டைக் காலத்தில், சிராவஸ்தி என்னும் புகழ்பெற்ற நகரம் இருந்தது. அந்த நகரிலே லேவாதேவி செய்து வந்த ஒரு பெரிய பணக்காரரின் குடும்பத்தில் படாசாரா பிறந்தாள். படாசாரா வளர்ந்து திருமணப் பருவம் எய்தினாள். அப்போது அவள், தனது தந்தையிடம் வேலைபார்த்து வந்த ஓர் இளைஞன் மீது மனம் கொண்டாள். இந்த விவரம் அவளுடைய தந்தைக்குத் தெரியாது. அவர் தமது போக்கில், தம்முடைய அந்தஸ்துக்கு ஏற்ற ஒரு பெரிய குடும்பத்திலே மகளைத் திருமணம் செய்து கொடுத்துச் சீரும் சிறப்புமாக வாழ வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்ந நிலையில், மனம் சங்கடப்பட்ட படாசாராவும் அவளது மனம் கவர்ந்த இளைஞனும், சிராவஸ்தி நகரத்தைவிட்டே ஓடிச்சென்று விடுவது என்று முடிவு செய்தார்கள். அதன் படியே ஒரு நாள் இருவரும் ரகசியமாக நகரத்தைவிட்டே கிளம்பித் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார்கள். கணவனும் மனைவியுமாக வாழ ஆரம்பித்தார்கள். சிறிது காலம் கடந்தது. படாசாரா கர்ப்பவதி ஆனாள். அவளுக்குப் பிறந்தகத்துக்குச் செல்லும் ஆவல் மிகுதியாக இருந்தது. ஆதலால் அவள் முதல் குழந்தை பிறக்க இருக்கும் இந்த சமயத்தில் என்னுடைய தாய்வீட்டில் இருக்க வேண்டும் என்று கணவனிடம் தெரிவித்தாள். ஆனால் அவளுடைய கணவன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. முதல் குழந்தை கிராமத்திலேயே பிறந்தது.
படாசாரா மீண்டும் இரண்டாம் முறையாகக் கர்ப்பம் தரித்தாள். அப்போதும் அவள் பிறந்த வீடு செல்லப் பெரிதும் விரும்பினாள். முன்பு போலவே கணவன் மறுப்புத் தெரிவித்தான். ஆனால் இந்த முறை, தனது தாய் வீட்டுக்குச் சென்றே ஆகவேண்டும் என்று படாசாரா பிடிவாதமாக இருந்தாள். முடிவில் கணவனும் அதற்கு ஒப்புக்கொண்டான். இருவரும் கிராமத்தைவிட்டு சிராஸ்வதி நகரத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். ஆனால் செல்லும் வழியிலே படாசாராவுக்குக் குழந்தை பிறந்து விட்டது. அந்நிலையில் தாய்க்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக ஒரு குடிசையை அமைக்கக் கணவன் நினைத்தான். அதன் பொருட்டு அவன் செடிகொடிகளைச் சேகரிப்பதற்காக, பக்கத்திலே இருந்த ஓர் அடர்ந்த காட்டுக்குள் சென்றான். காட்டில் அவனை ஒரு நாகம் தீண்டியது. அவன் அங்கேயே வீழ்ந்து உயிர் நீத்தான். பிரசவம் ஆகியிருந்த படாசாரா கணவனின் வருகையை வழிமேல் விழிவைத்து காத்திருந்தாள். நேரம் கடந்து கொண்டிருந்தது. கணவன் வந்தபாடில்லை. கணவனைத் தேடி அவளே செல்ல முடிவு செய்தாள். நடக்கக்கூடிய சக்தி இல்லாத நிலையிலும் தானே எழுந்து கணவனைத் காட்டில் தேடத் தொடங்கினாள். கணவன் அரவம் தீண்டிப் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தாள்! உலகமே இடிந்து தலையில் விழுந்ததைப் போல உணர்ந்தாள். இப்படி ஒரு துயரத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. பிறகு மூத்தக் குழந்தையை ஒரு கையில் பிடித்துக் கொண்டும், மற்றொரு கையில் சிசுவை அணைத்தபடியும் படாசாரா தந்தையின் வீட்டை நோக்கி நடந்தாள்.
வழியிலே ஓர் ஆறு குறுக்கிட்டது. இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஒரே சமயத்தில் ஆற்றைக் கடக்க முடியாது. அதனால் மூத்த குழந்தையை கரையிலே நிறுத்தி விட்டு, பிறந்த சிசுவுடன் மறுகரையை அடைந்தாள். அங்கே இருந்த கல்லின் மீது சில தழைகளையும், கொடிகளையும் பரப்பி சிசுவை அதன் மீது வைத்து மூடினாள். பிறகு மூத்த குழந்தையை எடுத்து வர கரையை நோக்கிப் புறப்பட்டாள். பாதி ஆற்றைக் கடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு பெரிய பருந்து மறுகரையில் இருந்த சிசுவை நோக்கி வேகமாகப் பாய்ந்து இறங்கியதைக் கண்டாள். படாசாராவின் மனம் பதைபதைத்தது. அவள் பருந்தை துரத்துவதற்காக இரண்டு கைகளையும் தூக்கித் தூக்கி ஆட்டினாள். அவளுடைய சைகையைக் கண்ட முதல் குழந்தை தன்னை தாய் அழைப்பதாக நினைத்து தண்ணீரில் இறங்கிவிட்டது. படாசாராவால் இரு குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை. தன் கண் முன்னால் ஒரு குழந்தை தண்ணீரில் செல்வதையும், மற்றொரு குழந்தையை பருந்து தூக்கிச் செல்வதையும் கண்டு பிரமை பிடித்ததுபோல் நின்றாள். வேறுகதி இல்லாத நிலையில் அவள் மனம் தனது தந்தையின் வீட்டை நோக்கி நடந்தாள். அங்கே முதல்நாள் பெய்த மழையில் அவள் வீடு இடிந்து போயிருந்தது. ஊர்க்காரர்கள் வீடு இடிந்து விழுந்ததில் அவளுடைய பெற்றோர்களும், சகோதரனும் இறந்து விட்டதாக கூறினார்கள். படாசாராவுக்கு தலை சுற்றியது. முழு உலகமும் சுழலுவதைப் போல மூளை குழம்பியது. அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. புலம்பினாள், சிரித்தாள், அழுதாள். அழுக்கேறிய கிழந்த ஆடையுடன் ஊரைச் சுற்றிக்கொண்டு இருந்தாள். இந்த நிலையில் ஒரு நாள், அவளுடைய முற்பிறவியின் பயனாக பகவான் புத்ததேவரின் கிருபை அவளுக்குக் கிடைத்தது.
ஒரு சமயம் புத்தபிரான் குழுவில் இருந்த மக்களுக்கு அறபோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அவர், படாசாராவைப் பார்த்தார். அந்த தயாளமூர்த்தி அவளை சுயநிலைக்கு மீளுமாறு கருணை செய்தார். பைத்தியம் தெளிந்த படாசாரா தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் அவரிடம் கூறினாள். மகளே! இதைப் போல உற்றார் உறவினர்களை இழந்து நீ கண்ணீர் பெருக்கியது முன்ஜென்மங்களில் எத்தனை முறைகளோ! மகனோ மகளோ வேறு எந்த உறவினராலோ ஒருவருடைய துன்பத்தைப் போக்க முடியாது. துன்பங்கள் இல்லாதது, பந்தங்கள் இல்லாதது, பிறவிகள் இல்லாதது, ஒப்புயர்வற்றது-நிர்வாணப் பேறு பெற்ற நிலையே ஆகும் என்று வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளை எடுத்துச் சொன்னார். படாசாராவின் மனம் தெளிந்தது. அவள் வாழ்க்கையில் பட்ட அனைத்து துன்பங்களையும் மறந்து பக்குவநிலைக்கு வந்தாள். அதன் விளைவாக அவள் பிக்ஷúணியாக பௌத்த சங்கத்தில் சேர்ந்து துறவற வாழ்க்கையை மேற்கொள்ளும் பேறு பெற்றாள். முதலாவது பிக்ஷúணியாக துறவொழுக்கத்தை முழு அளவில் மேற்கொண்டாள். அர்ஹத் என்று பௌத்தம் குறிப்பிடும் பரிபூரணம் அடையப்பெற்ற மகான்களில் ஒருவராகவும் ஆனாள். அவளுடைய பரிபூரண நல்லொழுக்கத்திற்காகவும், உயர்ந்த கடமை உணர்வுக்காகவும் பௌத்த சங்கம் படாசாரா என்ற பெயரை அவளுக்கு வழங்கியது. பகவான் புத்தரே பல சமயங்களில் அவளை புகழ்ந்து பேசியிருக்கிறார். தானும் தெய்வமாகி பிறரையும் தெய்வநிலைக்கு உயர்த்திய படாசாராவுக்கு பௌத்த சங்கத்தின் வரலாற்றிலே என்றென்றும் புகழிடம் உண்டு.