அறிந்து செய்தாலும் அறியாமற் செய்தாலும் தவறு தவறுதான். அது எப்போதும் தண்டனைக்குரியது. தப்பித்து விடலாம் என்று எண்ணுவது, தானே ஏற்படுத்திக் கொள்ளும் ஒருவிதத் தரமற்ற நம்பிக்கை. ஆணவம் தலையெடுக்கும் போது அறிவு நிலை குலைந்து போய்விடுகிறது. விஸ்வாமித்திர முனிவர் அரசராக இருந்து முனிவராக மாறியவர். பரம பதத்தில் பாம்பணைமேல் பள்ளிக் கொண்டிருக்கிறான் பரந்தாமன். அன்னை மகாலட்சுமி அவரது பாதங்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருக்கிறார். சற்றுத் தொலைவில் விஸ்வாமித்திரர் வந்து கொண்டிருக்கிறார். அருகில் முனிவர் வந்ததும் ஸ்ரீமந் நாராயணனும் மகாலக்ஷ்மியும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்து அருகில் போடப்பட்டிருந்த சிம்மாசனத்தில் அமரும்படி வேண்டிக் கொண்டனர். நாராயணா! என்று சொல்லிக் கொண்டே விஸ்வாமித்திரர் அந்தச் சிம்மாஸனத்தில் அமர்ந்தார். ஒரு விநாடி தான், சிம்மாஸனம் தலைகுப்புறக் கவிழ்ந்தது. முனிவருக்கு எதுவுமே புரியவில்லை. நாராயணனைப் பார்த்தார். முனிபுங்கவரே! தவறு நடந்து விட்டது. கவனமாக அமருங்கள் என்று பரந்தாமன் கேட்டுக் கொண்டான். மீண்டும் முனிவர் எச்சரிக்கையுடன் அந்த ஆசனத்தின் மீதமர்ந்தார். ஆனால் அந்தச் சிம்மாசனம் திரும்பவும் கவிழ விஸ்வாமித்ரர் தட்டுத் தடுமாறிக் கீழே விழுந்தார். எழுந்து நின்றார். முனிவர் பெருந்தகையே! நன்கு பார்த்து உட்காரும்படியல்லவா நான் கூறினேன் என்றார் மகாவிஷ்ணு. மூன்றாவது முறையும் அந்த ஆசனத்தை நன்கு அசைத்துப் பார்த்து ஆட்டம் எதுவும் இல்லாமல் இருக்கிறதா என்பதை முடிவு செய்துகொண்டு அடுத்த முயற்சியாக அந்த இருக்கையில் அமர்ந்தார் முனிவர். இந்தத் தடவையும் சிம்மாஸனம் கவிழ்ந்து கீழே விழுந்தார் முனிவர். அவரது கோபம் உச்சநிலை அடைந்ததது.
என்ன நாடகம் நடத்துகிறாய் நாராயணா! இதோ பார் உன்னைச் சபிக்கப்போகிறேன் என்று வெகுண்டார் விஸ்வாமித்திரர். கவனித்து அமரும்படித்தானே நான் உங்களிடம் கூறினேன். அதோ அங்கே பாருங்கள் என்று பரந்தாமன் ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கு ஓர் அழகிய சிம்மாசனத்தில் சத்தியமே வடிவமான அரிச்சந்திரன் ஆழ்ந்த தியான நிலையில் உட்கார்ந்திருந்தார். புரிந்ததா முனிவரே! சத்தியத்திற்கு முன்னால் அசத்தியம் எப்படி உட்கார முடியும்? அதனால்தான் உங்கள் சிம்மாசனமே உங்களைக் கீழே தள்ளிவிட்டது. வெகுகாலத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகள் நிழற்படம் போல முனிவரின் நினைவுக்கு வந்தது. சூரியவம்சத் தோன்றலாகிய அரிச்சந்திரன் அயோத்தியை ஆண்டு வருகிறான். இந்திரலோகத்தில் தேவர்களும், முனிவர்களும் அரிச்சந்திரனின் பெருமைகளைக் கூறிப் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். வசிஷ்டரும் தனது சீடனை நினைத்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது விசுவாமித்திரர் அவர்கள் கூறியவற்றை மறுத்து, எப்படியும் அரிச்சந்திரனை ஒரே ஒரு பொய்யாவது கூற வைக்கிறேன் என்று சபதம் செய்கிறார். மண்ணுலகில் அயோத்தியை யடைந்து பல தந்திரங்கள் செய்த அரசன் அரிச்சந்திரனை மனைவி, மகன், அரசு, மக்கள் ஆகிய யாவற்றையும் இழக்கச் செய்தார் முனிவர். முடிவில் அரவந்தீண்டி உயிரிழந்த லோகிதாசனை அடக்கம் செய்ய இடு காட்டுக்குச் சந்திரமதி வந்தபோது இறுதிச் சடங்கு செய்யத் தன் கையில் பணமில்லாமல் தவிக்க, அரிச்சந்திரன் அவளது கழுத்திலிருந்த தாலியைக் காண்பிக்க, அவன்தான் தன் கணவன் என்று அறிந்து கொண்ட சந்திரமதி கதறி அழுதாள்.
எந்தச் சூழ்நிலையிலும் தனது உண்மையையும், நேர்மையையும் மாற்றிக் கொள்ளாத அரிச்சந்திரனுக்கு இறுதியில் இறைவனே காட்சி அளித்து, அவனையும், அவன் மனைவியையும் மகனையும் வாழ்த்தி அருளிச் சென்றார். மண்ணுலக வாழ்க்கை முடிந்து அரசர் அரிச்சந்திரர் இப்போது வைகுண்டத்தில் ஆனந்தமாக இருக்கிறார். அவருக்கு இவ்வளவு இன்னல்கள் கொடுத்த தங்களுக்கு இங்குள்ள இந்தச் சிம்மாசனம் எப்படி உட்கார இடங் கொடுக்கும்! இது ஞான சிம்மாசனம். அதனால்தான் தங்களை உட்காரவிடாமல் திரும்பத் திரும்ப கீழே தள்ளியது என்றார் பரந்தாமன். செய்த தவறுக்கு மிகவும் வருந்தினார் மகாமுனிவர். செய்வதறியாது தவித்த அவர் நாராயணனைத் தொழுது, நான் செய்த இந்தப் பெரும் பிழைக்கு எந்த விதம் நான் பிராயச்சித்தம் செய்வது என்று கேட்டார். முன்பு தாங்கள் அரிச்சந்திரனையும் அவன் மனைவி சந்திரமதியையும் பிரித்தீர்கள். அதற்குப் பிராயச்சித்தம் வேறொரு ஆணையும், பெண்ணையும் நீங்கள் சேர்த்து வைக்க வேண்டும் என்றார் திருமால். ...தேவ இரகசியம் ஒன்றைச் சொல்கிறேன். சீக்கிரமே அயோத்தியில் சூரிய வம்சத்தில் நான் இராமனாக அவதரிக்கப்போகிறேன். அப்போது மகாலட்சுமியும், மீதிலையில் சீதையாகப் பிறக்கப் போகிறார், எங்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் எங்கள் குலகுருவாகத் தாங்கள் வந்து விடுங்கள் என்றார் ஸ்ரீமந் நாராயணன். ரமாத்வாவின் மலரடி பணிந்து வரப் போகும் சீதாராம கல்யாணத்தை விஸ்வாமித்ரர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். காலம் கரைந்தது. விஸ்வாமித்ரர் செய்யவிருந்த பெரிய யாகம் ஒன்றிற்கு, அதைத் தடுக்க முனைந்த அரக்கர்களிடமிருந்து யாகத்தைக் காப்பாற்ற, தசரத மகாராஜாவின் அனுமதியுடன் இராம லக்ஷ்மணர்களை அவர் அழைத்துச் சென்றார். யாகம் முடிந்து அயோத்தி திரும்பும் போது மிதிலையில் நடக்கவிருந்த சீதையின் சுயம்வர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவதனுஸை முறித்து சீதையின் கரம் பற்றிய இராமனின் திருமணத்தை விஸ்வாமித்திரரே நடத்தி வைத்தார். ஒன்றிற்கொன்று இணைப்பு நிகழ்ச்சிகளாகவே ஒவ்வொன்றையும் இறைவன் உருவாக்கியுள்ளான்.