ஒரு காட்டில் வேடன் ஒருவன், வேட்டையாடுவதற்காக மானைத் துரத்திக் கொண்டு போனான். அவன் கையில் விஷம் தோய்த்த அம்பு இருந்தது. வில்லில் அந்த அம்பைப் பொருத்தி மானைக் குறி பார்த்தான். காற்றைக் கிழித்துக் கொண்டு பாய்ந்தது அம்பு. அந்த மானுக்கு அதிர்ஷ்டம். சடக்கென நகர்ந்து தப்பித்தது. ஆனால் அந்த அம்பு, அருகில் இருந்த பழங்கள் நிறைந்த ஒரு மரத்தில் போய்க் குத்தி நின்றது. விஷம் தோய்ந்த அம்பாயிற்றே... விஷம் அந்த மரத்தில் ஏறிற்று. பழங்கள் எல்லாம் கருகிக் கீழே உதிர்ந்தன. காய்கள் வெம்பின. இலைகள் சிதறின. ஆமாம். அந்த மரமே ஒரே நாளில் பட்டுப் போயிற்று. அந்த மரத்தின் பொந்தில் ஒரு மைனா வெகுகாலமாக வசித்து வந்தது. விஷ அம்பினால் மரத்துக்கு நேர்ந்த கதியைப் பார்த்த மைனா கலங்கிப் போனது. ஆனால் வளமான வேறு மரத்திற்குச் சென்று குடியேற அதற்கு மனம் வரவில்லை. மரத்தின் மேல் உள்ள பற்றினால் நன்றி உணர்வோடு அங்கேயே இருந்தது. பழங்கள், காய்கள் இல்லாததால் மைனாவுக்கு உணவு கிடைக்கவேயில்லை. களைத்துப் போனது. ஆனாலும் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. மரம் சுகப்பட்டபோது தானும் சுகப்பட்டு, மரம் துயரப்படும் பாது தானும் துயரப்படும் மைனாவின் நேயத்தைப் பார்த்தான் தேவேந்திரன்.
மைனாவே எதற்காக இங்கே இருந்து கஷ்டப்படுகிறாய். வேறு மரத்திற்குப் போக வேண்டியதுதானே? என்றான். இல்லை, தேவேந்திரா! ஏராளமான நல்ல குணங்கள் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்தேன். இதுநாள் வரை என்னைக் காப்பாற்றியது இந்த மரம் தான். எனக்கு சுவையான கனிகளைக் கொடுத்தது. எதிரிகள் வந்தால் நான் ஒளிந்து கொள்ள இடம் தந்ததும் இதுதான். நல்ல நிலையில் இதன் நிழலில் இருந்த நான், அதற்கு ஒரு கெட்டநிலை வந்ததும் ஓடி ஒளிவது தர்மம் இல்லையே என்றது. தேவேந்திரன் மெய் சிலிர்த்துப் போனான். மைனாவே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்றான். மைனா கேட்டது, தேவர்களின் அரசனே, இந்த மரத்தைப் பழையபடி நன்கு செழித்து வளர அருள்புரிவாயாக என்றது. அப்புறம் என்ன? மரத்திற்கு மீண்டும் உயிர் வந்தது. இலைகள், காய்கள், கனிகள் என்று ஜொலித்தது மரம்! மகிழ்ந்தது மைனா. இதுபோலவே, நீங்களும் உங்களை வளர்த்தவர்களை மறக்காமல் நன்றியுடனும், மரியாதையுடனும் அவர்களிடம் இந்த மைனாவைப் போல் நடந்து கொள்ளுங்கள்.