திருமகள் நாதனின் திருப்பவளமாய் தித்தித்திருக்குமோ ! என்று ஆழிச் சங்கினைக் கேட்கிறாள் ஆண்டாள். ஆனால், அந்த வெண் சங்கை விடவும் அதிகமாக புரு÷ஷாத்தமனின் புன்சிரித்த இதழ்களோடு உறவாடிய பெருமைக்கு உரியது அவனது புல்லாங்குழல். அது அவனது கரம்வந்த கதை தெரிந்து கொள்வோமா? புரு÷ஷாத்தமனுக்கு புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள் செய்த தவம்தான் என்ன? அதைத் தெரிந்து கொள்ள நாம் ராமாயண காலத்திற்குப் போகவேண்டும். அருஞ்சுவைக் கனிகளை நல்கும் பழமரத் தோட்டம். அங்கே தானாகவே தன் மடிமீது உதிர்ந்த பழங்களை எடுத்துக்கொண்டு மதங்கமாமுனி ஆசிரமத்திற்கு வந்தாள் அந்த மூதாட்டி, சபரி. ஆசிரமம் முழுவதும் பல பகுதிகளிலிருந்து குழுமிய பல மாமுனிகள் இருந்தனர். பிரமித்த அன்னை, மரியாதை நிமித்தமாக வாயிற்படியிலேயே தயங்குகிறாள். உள்ளே அவர்களின் அமுத மொழிகள் தெளிவாக கேட்கிறது.மதங்க முனிவரை நோக்கி, ஒரு மகனீயர், முனிவரே அடுத்த வாரம் நமது பகுதிக்கு குறிப்பாக உங்களது ஆசிரமத்திற்கு ராமபிரான் வருகிறாராமே..! கேட்பதற்கு எவ்வளவு மகிழ்வாக இருக்கிறது தெரியுமா? கொஞ்சம் விவரமாகக் கூறினால் நாங்கள் அனைவரும் மகிழ்வோம் என்றார். ஆமாம் சிரேஷ்டரே, நானே சொல்ல வேண்டுமென இருந்தேன். உரிய கனிகளையும் பூக்களையும் சபரியை சேகரிக்கச் சொல்லலாம் என்றிருந்தேன் எனச் சொல்லி முடிக்குமுன் வாயிலில் இருந்த சபரியைப் பார்த்துவிட்ட ஒரு முனிவர், பெருமானே, அன்னைக்குப் பன்னூறு வயது.
நீங்கள் நினைத்தவுடன் வந்துவிட்டார் பாருங்கள் என்று கூறிவிட்டு, தாயே நீங்கள்தான் சுவைமிகுந்த அருங்கனிகளை ராமனுக்காக சேகரிக்க வேண்டுமாம். முனிவர் பெருமாளின் சித்தம். சம்மதந்தானே? என சபரியிடம் கேட்டார். என்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்! பார்வை வேண்டாமெனச் சொல்லும் குருடரும் உண்டோ. நாளையே சேகரிக்கத் தொடங்குகிறேன்! சொன்ன சபரியன்னை மகிழ்ச்சியுடன் கனிகளைச் சேகரிக்கத் தொடங்கினாள். அவளுக்கு மனத்திலே ஐயம். சேகரித்த கனிகள் சுவை குன்றியிருப்பின் என்ன செய்வது. உடனே ஒரு முடிவெடுத்து விட்டாள். ஒவ்வொரு கனியையும் கடித்து சுவை மிகுந்திருப்பின் சேமிப்பாள். அன்றேல் நீக்கிவிடுவாள். ஆயிற்று ஒரு வாரத்திற்கும் மேல். அருங்கனிகள் காதலினால் கொய்தவையல்யாவா! உண்மையான பாசத்தில் உறவாடிய பழங்களல்லவா... எனவே புத்தம் புதியன போல தூய்மையில் ஜொலித்தது. ஆயிற்று! அப்பொன்னாளும் பூத்தது. பெம்மான் சீதாராமன் ஆசிரமத்திற்கு எழுந்தருளினான். உரியவர்களுக்கு உரியமுறையில் உரியன செய்தபின், தொண்டிற் தூயவள் சபரியின் பக்கம் திரும்பினான். அவனது கருணை பொழியும் கண்களைக் கண்டு மனம் நெகிழ்ந்தாள் சபரி. அவள் மட்டுமா... அண்ணலும்தான். தவமே உருக்கொண்டு சபரியாய் வந்தவளைக் கண்டான். மெல்ல வாய் திறந்தான். தவத்தின் சாறே... தூய்மையின் துவக்கமே... தாயே, உன்னில் நான் அன்னை கவுசல்யை, கைகேயி மற்றும் சுமித்திரையைக் காண்கிறேன். வசிட்டரே பெண்ணுருக் கொண்டதாய் உணர்கிறேன் என்றெல்லாம் பெற்ற மகனிலும் பரிவு மிகக் கொண்டு ஏற்றனவெல்லாம் பேசினான். ஏற்றத்தின் எல்லை மொழிந்தன கேட்டு உருகினாள் உத்தமி.
காருண்யனே, நீ பிறந்த மண்ணில் என்னைப் போன்றவர்க்கு ஏதப்பா குறை? இம்மாமுனிவர்களின் மத்தியிலே, மதுராமம் உனது நினைவினிலே மீண்டும் மீண்டும் வாழ்தற்கு எண்ணற்ற மானிடப் பிறவி வேண்டுமய்யா எனக்கூறிக் கொண்டே கண்களிலே நீர் பெருகத் தடாலென தன் மேனியினை அண்ணலின் பொற்பாதங்களிலே விரித்தாள். பின் என் தெய்வமே சுவை மிகுந்த கனிகளையே உனக்குக் காணிக்கையாக்க வேண்டும் என்று ஓர் உந்துதலில், நீயுண்ண வேண்டியதை, நான் ருசி பார்த்து வைத்துள்ளேன். எச்சிற் கனியைப் படைத்ததனால் அபச்சாரம் செய்து விட்டேன் எனத் தழுதழுக்க அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அண்ணல் அக்கனிகளை உண்டு கொண்டிருந்தான். கண்களை லேசாக மூடிக்கொண்டு, இது போன்ற சுவைமிகுந்த கனிகளை இதுவரை என் வாழ்வினிலே உண்டதேயில்லையே எனப் பாராட்டு மொழிகளைப் பொழியத் தொடங்கி விட்டான். இருப்பினும் நானுண்ட எச்சிலை ஆண்டவன் நீயுண்பதா? என வருந்தினாள் சபரி. நானிங்கு வந்ததே மாமுனிவர்களின் அருளமுதைப் பருகவும் அன்பில் விளைந்த உன் எச்சிற் கனிகளை உண்ணவும்தான் எனப் பலவாறு ராமபிரான் உரைத்தும் பெருமாட்டி மனம் ஆறவில்லை. முடிவில் ஸ்ரீராமன் ஓர் அரிய வரத்தினை ஆறுதல் வாக்காக உதிர்த்தான்.தாயே, நானே இம்மண்ணில் கண்ணனாகப் பிறப்பேன். நீயே எனக்குத் தீங்குழலாக ஆவாய். என்னோடு பிரியாது எப்பொழுதும் இருப்பாய். அத்தோடன்றி எச்சிற் கனிகள் கொடுத்து தூய அன்பின் அர்த்தத்தை உணர்த்திய உனக்குப் பரிசாக, அப்பிறவியில் புல்லாங்குழலாக விளங்கப்போகும் பாக்கியம் கிட்டும். உனது திவ்ய தேகத்தில் எனது மூச்சுக்காற்று உலா வரும். தேவகானத்தை உன் மூலம் இப்பிரபஞ்சம் கேட்டு மகிழும். இப்பிறவியில் என்னையே நினைத்துச் சரணடைந்த நீ, என் நினைவு நீங்காத பல பிறவிகள் வேண்டிய நீ வேய்ங்குழலாக என்னோடு இருப்பாய். யுக யுகாந்தரமாய் பக்தர்கள் என்னை வணங்கும் பொழுது உன்னையும் வணங்குவர். உன்னையும் பாடுவர். நீ வேறு நான் வேறல்ல. ஆம், என்னை முற்றிலும் சரணடைந்தவர்கள் என்னைப் பிரிவதில்லை. நானும் பிரிவதில்லை. இதோ... இப்போதும் புரு÷ஷாத்தமன் திருக்கரத்தில் புல்லாங்குழல் தவழ்கிறது. அவன் மூச்சுக்காற்றை சுவாசித்து தேமதுர இசையை வெளிப்படுத்துகிறது. அது சொல்வது, இறைவனைச் சரணடையுங்கள்.. நீங்களும் அவனை விட்டு நீங்கா வரம் பெறுவீர்கள்! என்பதாகவே எதிரொலிக்கிறது.