ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் தண்டகாரண்யத்தை அடையும் முன், நர்மதையைக் கடக்க தற்கால ஹோஷங்காபாத் அருகில் வந்தார்களாம். அவர்களை வழியனுப்ப மக்கள் ஆயிரக்கணக்கில் குழுமியிருந்தனர். ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் நதியைக் கடக்க படகில் ஏறி உட்கார்ந்தனர். அம்மூவரது பிரிவைத் தாங்காது மக்கள் கண்ணீர் வடித்தனர். இதைக் கண்ட ராமர் படகில் இருந்தபடியே அவர்களை நோக்கி, சகோதர சகோதரிகளே! நாங்கள் சென்று வருகிறோம். நீங்கள் எல்லோரும் பத்திரமாக வீடு போய்ச் சேருவீர்கள் என்று கரங்கூப்பி விடைபெற்றார். படகு தென்கரை அடைந்தவுடன், மக்கள் தம் இல்லம் சென்றனர். ஆனால் கூட்டத்திலிருந்த ஒரு பகுதினர் மாத்திரம் நதிக்கரையிலேயே தங்கி விட்டனர்! ராவணன் வதம் முடித்த ராமர், புஷ்பக விமானம் மூலம் வந்தவழியே அயோத்யா திரும்பிக் கொண்டிருந்தார். தாங்கள் கண்ட நகரங்கள், மலைகள், நதிகள் இவைகளைப் பற்றி சீதாதேவிக்கு விவரமாகக் கூறிக் கொண்டிருந்த ராமர், நர்மதை வடகரையில் மக்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விமானத்தைப் பார்க்கவே, ராமர் விமானத்தை கீழே இறக்கினார்.
அங்கு மக்கள் ஏன் கூடியிருக்கிறார்கள் என்று கேட்ட ராமருக்கு, அக்கூட்டத்தின் தலைவர் முன்வந்து, ராமா, தாங்கள் நர்மதையைக் கடக்கும் முன் குழுமியிருந்த ஆண்களையும், பெண்களையும் மாத்திரம் பார்த்து அவரவர்கள் வீடு திரும்பும்படி பணித்தீர்கள். நாங்களோ நபும்ஸகர்கள் (திருநங்கைகள்). எங்களைப் பார்த்து தாங்கள் ஒன்றும் கூறாமல் போய்விட்டதால் அன்றிலிருந்து இங்கேயே தங்கி, தங்கள் உத்தரவையே நோக்கியுள்ளோம். தங்கள் சித்தப்படி நடக்க நாங்கள் என்றும் தயார் என்று கூறினார். இதைக் கேட்ட ராமர் சிரித்தவாறு, உங்கள் அன்பைப் பெரிதும் பாராட்டுகிறேன். அப்போது நீங்கள் எல்லோரும் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தபடியால் நான் சரியாகக் கவனிக்கவில்லை. அதற்காக என்னை மன்னிக்கவும். எனக்காக இத்தனை ஆண்டுகள் நீங்கள் இங்கேயே தங்கிவிட்டதால் இப்பிரதேசம் உங்களுக்கே சொந்தம். ஆகையால் என்றும் நீங்கள் இங்கேயே வசித்து வாருங்கள் என்று கூறி அயோத்தி திரும்பினாராம். இதனால்தானோ என்னவோ போபாலின் சுற்று வட்டாரங்களில் இன்றும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் தென்படுகின்றனர். ராமர் அவர்களுக்கு ஆசி அளித்த அத்தினத்தை வருடா வருடம் மிக விமரிசையாக கொண்டாடுகின்றனர். அன்று பெரிய விருந்தும், கேளிக்கைகளும் அமர்க்களப்படுகின்றன! மகாபாரதத்தில் வரும் சிகண்டி , பிருகன்னளை இவர்களிடையே வளர்ந்ததாக பெருமையுடன் கூறுகின்றனர்!