முன்னொரு காலத்தில் மிகச் சிறந்த ஞானம் கொண்ட ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவரது சிறப்பு என்னவென்றால். அவருக்கு கோபம் வராது. ஆமாம், யார் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் சினமே அவரை நெருங்காது. ஒரு புன்னகை மட்டுமே பிறக்கும். எவ்வாறு முனிவரால் அப்படி இருக்க முடிகிறது? என்பதை அறிந்து கொள்ள விரும்பினான் சீடன். அவனால் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கடைசியில் முனிவரிடமே அந்த ரகசியத்தைக் கேட்டான். முனிவர் அதற்கும் புன்னகைத்தார். மகனே, ஓர் ஏரியில் இருக்கும் காலியான படகில் அமர்ந்து நான் தியானம் செய்வது வழக்கம். அப்படி ஒருநாள் நான் கண் மூடி தியானத்தில் இருந்தபோது, நான் அமர்ந்திருந்த படகை வேறு ஒரு படகு வந்து முட்டியது. எனக்கு கடும் கோபம். இப்படி முட்டாள்தனமாக மோதியது யார் என்று எரிச்சலுடன் கண் விழித்துப் பார்த்தபோது, எனக்கு சிரிப்பு தான் வந்தது. காரணம், மோதியது ஒரு வெற்றுப் படகு. காற்றில் அசைந்து அசைந்து வந்து நான் அமர்ந்திருந்த படகு மீது மோதியிருக்கிறது. என் கோபத்தினை அந்த வெற்றுப் படகு மீது காட்டுவதால் என்ன பயன்? அன்று தான் முடிவெடுத்தேன். யாராவது என்னைக் கோபப்படுத்தினால் இதுவும் ஒரு வெற்றுப் படகுதான் என்று நினைத்துக் கொள்வேன்.
என்னையறியாமல் கோபம் மறைந்து, புன்னகை பிறந்துவிடும். சீடனுக்கு அந்த விநாடியே ஞானம் பிறந்தது. அதே முனிவர் ஒரு நாள், பக்திச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சைப் பிடிக்காத ஒருவன், முனிவர் மீது கோபத்தில் கல்லை எறிந்தான். முனிவர் வழக்கம் போல் அதற்கும் சிரித்தார். வெற்றுப் படகு. ஆனால் கூடியிருந்த பக்தர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எரிச்சலுடன் அந்தக் கல் வீசியவனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர். முனிவர், அவனை அடிக்க வேண்டாம் என்று கூறியவாறு, தன்னிடம் அவனை அழைத்து வருமாறு கூறினார். மேடைக்கு அழைத்து வரப்பட்டான். முனிவர் ஏதாவது மந்திரம், மாயம் போட்டு தன்னைத் தாக்கி விடுவாரோ என்று பயத்தில் நடுங்கினான். ஆனால் முனிவர் என்ன செய்தார் தெரியுமா? அதே மாறாத புன்னகையுடன், ஓர் ஆப்பிளை எடுத்து அவனிடம் கொடுத்தார். பக்தர்களுக்குத் தாங்கவில்லை. கல் வீசிய அவனுக்குப் போய் பழம் தருகிறீர்களே? என்று புலம்பினார்கள். முனிவர் திருவாய் மலர்ந்தார். தன் மீது கல் வீசுபவனுக்கு ஐந்தறிவு உடைய மரமே கனிகளைத் தரும்போது நான் தந்தால் தப்பா என்ன? முனிவர் சொல்லி முடித்ததும் கல் வீசிய மனிதன் ஒரு மலரைப் போல முனிவரின் கால்களில் விழுந்தான்.