Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சிவபூஜையால் ராமனுக்கே படகோட்டும் பாக்கியம் பெற்ற குகன்!
 
பக்தி கதைகள்
சிவபூஜையால் ராமனுக்கே படகோட்டும் பாக்கியம் பெற்ற குகன்!

அங்குலன் என்ற வேட்டைக்காரன், பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி வாழ்ந்து வந்தான். ஒருமுறை சாகபுரம் என்ற நகரத்துக்கு அருகிலுள்ள காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். அவன். பகல் முழுவதும் அலைந்து திரிந்தான். பறவைகளோ விலங்குகளோ கண்ணில் படவில்லை. பசியும் தாகமும் எடுத்ததுதான் மிச்சம். வீட்டில் மனைவி - மக்கள் தன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பார்களே என்று நினைத்தான். வெறுங்கையோடு திரும்ப வேண்டாம் என்று முடிவெடுத்தான். காட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான். மாலைப்பொழுது முடிந்துவிட்டது. அந்த நிலையில், தான் காட்டின் மையப்பகுதியில் இருப்பதை உணர்ந்தான். தன்னால் திரும்பி நகரை அடைய முடியாத நிலையையும் புரிந்துகொண்டான். தான் இருந்த இடத்துக்கு அருகில் ஒரு குளம் இருப்பதைக் கண்டான். அதில் இறங்கி தண்ணீர் குடித்து தாகத்தைத் தணித்துக் கொண்டான். இரவில் தண்ணீர் குடிக்க விலங்குகள் ஏதாவது வந்தால் அதை வேட்டையாடலாம் என முடிவெடுத்தான். அதே நேரத்தில் புலி, சிங்கம் ஏதாவது வந்துவிட்டால்... நினைத்த மாத்திரத்திலேயே பயந்தான். அருகில் இருந்த ஒரு வில்வமரத்தின் மீதேறி வசதியாக அமர்ந்து கொண்டான். வில்வமரம் ஏகத்துக்குத் தழைத்து வளர்ந்திருந்தது. அமர்ந்திருந்த இடத்திலிருந்து குளத்தை இலக்குப் பார்த்து அம்பு எய்த முடியாதபடி தழைகள் தடுத்தன. எனவே, வில்வத் தழைகளை ஒவ்வொன்றாகப் பறித்துப் போட்டான். முதல் ஜாமம் வந்தது. ஒரு பெண் மான் தண்ணீர் குடிக்க குளக்கரைக்கு வந்தது. வேடன் அம்பை பூட்டி மானைக் குறி வைத்தான். அவன் தோல் பையிலிருந்து தண்ணீர் சிந்தியது. வில்லின் முனைபட்டு சில வில்வ இலைகளும் கீழே விழுந்தன.

அந்த மரத்தடியில் ஒரு முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் ஒன்று இருந்தது. வில்வ மரத்தில் அவன் அமர்ந்திருந்த நாள் ஒரு சிவராத்திரி நாள். அந்த நன்னாளில் வில்வ இலைகளும் தண்ணீரும் சிவலிங்கத்தின் மீது விழுந்ததால், வேடனுக்கு சிவ பூஜையின் பலன் கிடைத்தது. இந்தச் சிறு சலசலப்பில் மான், வேடனைப் பார்த்து, ஏன் என்னைக் கொல்ல விரும்புகிறாய்? என்று கேட்டது. மானே! நான் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டில் எல்லோரும் உணவின்றி பட்டினி கிடக்கிறோம். உன்னைக் கொன்றால்தான் எங்கள் பசி அடங்கும் என்றான் வேடன். என்னைக் கொன்றால்தான் உன் குடும்பத்தின் பசி தீரும் என்றால், நான் பெரும் பாக்கியசாலி. எதற்கும் உதவாத இந்த உடம்பின் இறைச்சி, உனக்குப் பயன்படுகிறது என்றால் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், எனக்குச் சில குட்டிகள் இருக்கின்றன. என்னை இழந்தால் அவை துன்பம் அடையும். நான் மீண்டும் காட்டுக்குச் சென்று, என்னுடன் பிறந்த பெண் மானிடம் என் குட்டிகளை ஒப்படைத்துவிட்டு, உன்னிடம் திரும்பி விடுவேன். பின்னர் நீ என்னை இரையாக்கிக் கொள்ளலாம் என்றது மான். உன்னை எப்படி நான் நம்புவது? கையில் கிடைத்த உன்னை விட்டுவிட்டால் நான் முட்டாளாகி விடுவேனே என்றான் வேடன். மான் அவனிடம் பல சமாதானங்களைச் சொல்லவே, மனம் மகிழ்ந்து மானைப் போகவிட்டான். முதல் ஜாமம் முடிந்தது. காட்டுக்குச் சென்ற மான் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அதன் உடன்பிறந்த இளைய பெண்மான் அதனைத் தேடி வந்தது. மானைக் கண்ட வேடன் வில்லை வளைத்தான். முன்பு போலவே வில் நுனி பட்டு சில வில்வ இலைகள் சிதறின. பையிலிருந்து நீரும் கொட்டியது. அவை லிங்கத்தின் மீது விழுந்தன. அதனால் இரண்டாம் காலத்தில் சிவபூஜை செய்த புண்ணியம் வேடனுக்குக் கிடைத்தது. இந்த இளைய மானும் வேடனிடம், என் உடல் உனக்கு உபயோகமானால் மகிழ்ச்சியே! எனக்குச் சில கடமைகள் உண்டு. அதை முடித்துவிட்டு திரும்ப வருகிறேன் என்று கூறி, வேடனிடம் விடைபெற்றுச் சென்றது.

நேரம் கடந்தது. இரவின் இரண்டாம் ஜாமம் முடிந்து மூன்றாம் ஜாமமும் வந்தது. நீர் குடிக்கச் சென்ற இரண்டு பெண் மான்களும் திரும்பாததைக் கண்டு, ஆண் மான் குளத்துக்கு வந்தது. அதைக் கண்ட வேடன் வில்லை வளைத்தான். அப்போது அந்த மான், என் துணை மான்களைத் தேடி வந்தேன். எங்கள் குட்டிகள் எங்களைக் காணாமல் தவிக்கின்றன. உனக்கு உணவாவதற்குமுன் குட்டிகளை உரிய இடத்தில் ஒப்படைத்து விட்டுத் திரும்ப வருவேன். இது சத்தியம். சத்தியத்தால்தான் இந்த உலகம் செழித்திருக்கிறது. சிவன் மீது ஆணை! உடனே திரும்பி வருவேன். எனக்கு அனுமதி கொடு என்றது. வேடனும் விரைவில் வரும்படி கூறி அனுமதி தந்தான். காட்டில் மூன்று மான்களும் சந்தித்துக்கொண்டன.  வேடனுக்கு உணவாகப் போகிறேன் என்று ஆண் மான் புறப்பட்டது. இறுதியில் மூன்றும் சேர்ந்து வேடனுக்கு உணவாக முடிவெடுத்தன. குட்டிகளை உச்சிமோந்து அன்பு பாராட்டி தம் கூட்டத்தில் ஒப்படைத்துவிட்டு, வேடன் இருக்கும் குளத்துக்கு விரைந்து சென்றன. சிறிது நேரம் சென்றது குட்டிகள். தம் தாய் தந்தையர் வேடனுக்கு இரையாகப் போவதை அறிந்தன. பெற்றோரை இழந்து நாம் மட்டும் உயிர் வாழ்வது முறையல்ல. பெற்றோருக்கு நேர்வது நமக்கும் நேரட்டும் என்று வேடன் இருக்கும் இடத்தை நோக்கி அவையும் தேடிச் சென்றன. மான்கள் கூட்டமாக வருவதைப் பார்த்தான் வேடன். வில்வ மரத்திலிருந்து கீழே குதித்தான். முன்பு போலவே வில்வ இலைகள் லிங்கத்தின் மீது விழுந்தன. நீரும் சிந்தியது. சிவராத்திரியின் நான்காம் கால பூஜைப்பலனும் வேடனுக்குக் கிடைத்தது. மான்கள் ஒரே குரலில் தங்களை ஏற்றுக்கொள்ளும்படி வேடனிடம் கூறின. அவற்றின் சத்தியவாக்கைக் கண்ட வேடன் மனம் மாறினான். ஐந்தறிவுள்ள இந்த விலங்குகளிடம் சத்தியம், நேர்மை ஆகிய குணங்கள் இருக்கும்போது, ஆறறிவு படைத்த மனிதனாகிய நான் மட்டும் ஏன் கொலைகாரனாக இருக்க வேண்டும் என்று சிந்தித்தான். சிவராத்திரியில் முறையாக பூஜை செய்யாதபோதும், அவனுக்கு சிவ புண்ணியம் கைவந்ததால் ஞானம் பிறந்தது. பொழுது புலர்ந்தது. சிவனின் அருட்காட்சி அவனுக்குக் கிடைத்தது. மான்கள் பேரின்ப நிலையை அடைந்து சிவலோகம் சென்றன. அந்த வேடன்தான் மறுபிறப்பில் குகன் என்ற பெயரில் கங்கைக்கரையில் பிறந்தான். ராமபிரானுக்குப் படகோட்டும் பேறு பெற்றான் என சிவ மகா புராணம் விளக்குகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar