Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நன்றியை மறந்தால்...
 
பக்தி கதைகள்
நன்றியை மறந்தால்...

பாஞ்சாலதேசத்து மன்னன் புருஷதன், தன் மகன் துருபதனை அக்னிவேச்ய முனிவரிடம் பாடம் கற்க அனுப்பி இருந்தான். அந்த குருகுலத்தில் அந்தணரான துரோணரும் படித்தார். ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்களை துரோணர் எளிதில் புரிந்து கொள்வார். துருபதனுக்கு அவ்வளவு எளிதில் மண்டையில் ஏறாது. அவற்றை துரோணரிடம் கேட்டு படித்துக் கொள்வான் துருபதன். இதனால், அவன் துரோணரை தனது நெருங்கிய நண்பனாக்கிக் கொண்டான். அவர்கள் படிப்பு முடிந்து பிரியும் வேளை வந்தது. துரோணா! நீ எனக்குச் செய்த  உதவி அளவிடற்கு அரியது. ஆசிரியருக்கு ஆசிரியராய் இருந்து எனக்கு சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாய். விண்ணையும், மண்ணையும் ஒன்று சேர்த்தாலும் அதையும் விட உயர்ந்தது உன் உதவி. இதற்கு கைமாறாக, என் ராஜ்யத்தில் பாதியை உனக்கு தருகிறேன், பெற்றுக்கொள், என்றான். துரோணர் அவனிடம், நண்பனே! கைமாறு கருதி எந்த உதவியும் நான் செய்யவில்லை. அதை தானமாகவே வழங்கினேன். உன் அன்பு ஒன்றே எனக்குப் போதும், சென்று வா, என்றார். காலம் கடந்தது. துரோணருக்கு கிருபா என்ற பெண்மணி வாழ்க்கைத் துணையாக அமைந்தாள். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

பிறக்கும்போது, குதிரை போல கனைத்ததால், அஸ்வத்தாமன் என்று பெயரிட்டனர். அஸ்வம் என்றால் குதிரை. தவவாழ்வு வாழ்ந்த அந்த ஏழைப் பெண்ணுக்கு பால் சுரக்கவில்லை. குழந்தை பாலின்றி அழுதான். அதுவரை எதற்காகவும் கையேந்தாதவர் துரோணர். மகனுக்காக, நண்பன் துருபதனிடம் சென்று ஒரு பசுவை தானமாகப் பெற எண்ணி மனைவி, குழந்தையுடன் சென்றார். துருபதனோ நிலைமாறிப் போயிருந்தான். பதவிப்பித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. நண்பனை அடையாளம் தெரிந்து கொண்ட அவன், முன்பு தான் வாக்களித்த பாதி ராஜ்யத்தைக் கேட்க வந்ததாக எண்ணிக்கொண்டு, வா என்று கூட அழைக்கவில்லை. துரோணரே இதையறியாமல், தன்னை அடையாளம் தெரியவில்லை போலும் என நினைத்துக் கொண்டு துருபதா! நான் உன் நண்பன் துரோணன், நாம் படிக்கும் காலத்தில், எனக்கு பாதிராஜ்யம் தருவதாக வாக்களித்தாயே! நினைவிருக்கிறதா! நான் ராஜ்யம் கேட்டு வரவில்லை. பசியால் அழும் என் குழந்தைக்கு தட்டுப்பாடின்றி பால் கொடுக்க ஒரு பசுவைக் கேட்டு வந்தேன். தருவாயா? என்றார். இப்போது பசுவைக் கொடுத்தால், பிறகு பொன்னும் மணியும் கேட்பான், பிறகு ராஜ்யத்தைக் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவான் என தப்புக்கணக்கு போட்ட துருபதன், துரோணனா! அப்படி ஒருவனையே எனக்கு தெரியாது.

என்னோடு பலர் படித்தார்கள், அதில் நீயும் ஒருவனாக இருந்திருக்கலாம். அதற்காக, உனக்கு நான் தானம் தர வேண்டுமா! நீயாகப் போய் விடு. இல்லாவிட்டால், காவலர்களை வைத்து வெளியே தள்ளுவேன், என்றான். துரோணர் அதிர்ந்து விட்டார். அவமானம் பிடுங்கித்தின்றது.துருபதனே! எனக்கோ என் மனைவிக்கோ இந்த உலகில் எந்த தேவையும் இல்லை. குழந்தைக்காகவே பசு தானம் கேட்டு வந்தேன். நீ நட்பை மறந்து என்னை அவமதித்தாய். ஒரு துரும்பைக் கொண்டு உன் தலையைத் துண்டிக்க என்னால் முடியும். ஆனால், நான் தவம் செய்யும் அந்தணன். அந்தணர்கள் கோபிக்கவோ, தண்டிக்கவோ கூடாது. ஆனால், என் மாணவன் ஒருவன் வருவான். அவன் உன்னைத் தேர்க்காலில் கட்டுவான். என்னிடம் இழுத்து வருவான், என்று சொல்லிவிட்டு வெளியேறினார். அதன்படி, பிற்காலத்தில், அவரிடம் வில்வித்தை கற்ற அர்ஜுனன், துருபதனை இழுத்து வந்தான். அந்த நிலையிலும், துரோணர் அவனிடம் பகைமை பாராட்டவில்லை. துருபதா! இப்போது நீ எனக்கு அடிமை, உன் நாடும் எனக்கே சொந்தமாயிற்று. இருப்பினும், அதெல்லாம் எனக்கு வேண்டாம். நீ என் நண்பனாகவே தொடர்ந்து இரு, என்று அவனை அணைத்துக் கொண்டார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar