முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர் நடுக்காட்டில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். கடும் தவத்தின் காரணமாக சில சித்து விளையாட்டுகள் அவருக்குத் தெரியும். அதனால் அவர் புகழ் நாடு முழுவதும் பரவியது. முனிவரைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து ஓர் இளைஞன் வந்தான். சுவாமி உங்கள் சக்தி பற்றி கேள்விப்பட்டே நான் வந்திருக்கிறேன். என்று கூறினான். முனிவர் மிகவும் மகிழ்ந்து, அவனை அருகில் அமரச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது யானை ஒன்று ஆசிரமத்தின் பக்கமாக வந்தது. அதைக் கண்ட இளைஞன், சுவாமி, தங்களால், அந்த பலம் பொருந்திய யானையைக் கொல்ல முடியுமா? என்றான். இதென்ன பெரிய காரியம்? என்று சொன்ன முனிவர், கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து, மந்திரத்தை ஜெபித்து அந்த யானை இருந்த திசை நோக்கி வீசினார்.
என்ன ஆச்சரியம், அந்த வினாடியே அந்த யானை சுருண்டு விழுந்து இறந்தது! இதை ஆச்சரியத்துடன் பார்த்த இளைஞன், முனிவரே, உங்கள் மந்திர சக்தியைக் கண்டு பிரமிக்கிறேன் என்றான். முனிவருக்குப் பெருமை பிடிபடவில்லை. கர்வத்துடன் அதை ஆமோதித்தார். உடனே இளைஞன், சுவாமி, இறந்து போன யானையை உங்களால் பிழைக்க வைக்க முடியுமா? என மறுபடியும் வினவினான். அதுவும் என்னால் முடியும். இதோ பார். என்றவாறு, மீண்டும் கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து, ஜெபித்து யானை மேல் தெளித்தார். அந்த வினாடியே யானை உயிர் பெற்று, உற்சாகமாகத் துள்ளிக் குதித்து எழுந்தது. இளைஞன், அந்த முனிவரைப் பார்த்தான். முனிவரே, நீங்கள் யானையை முதலில் கொன்றீர்கள். பின்னர் அதைப் பிழைக்க வைத்தீர்கள். இதனால் நீங்கள் பெற்ற பலன் என்ன? இதனால் என்ன ஆன்மிக வளர்ச்சியை அடைந்தீர்கள்? இந்த சித்து விளையாட்டு, கடவுளை நீங்கள் எளிதாகக் காண உங்களுக்கு உதவி புரியுமா? இறைவனின் அருளைப் பெற்ற ஒருவன், விலை மதிப்பில்லாத ஞானம், வைராக்கியம், பக்தி இவற்றை விட்டுவிட்டு சித்துகளைச் செய்ய ஆரம்பிப்பது தவறு இல்லையா? இந்த மந்திர தந்திரங்கள் எல்லாம் இறைவனுக்குப் பிடிக்குமா? கடவுளை அடைய இவையெல்லாம் தடை அல்லவா? என்றான்.
முனிவர் அதிர்ந்துபோய், அந்த இளைஞனை நிமிர்ந்து பார்த்தார். அந்த இளைஞன் அவர் பார்க்கும்போதே மாயமாய் மறைந்தான். ஆமாம். இளைஞனாய் வந்தவர் கடவுள்தான்! கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்ட முனிவர், அன்று முதல் தன் சித்து வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஆன்மீகப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.