கபீர்தாசரின் மகன் கமலதாசர் ராமாயண உபன்யாசம் செய்வதிலும் திறம் படைத்தவர். அவர் ராமநாம பஜனை செய்யும் பொழுது கூடியிருக்கும் மக்கள் தங்களை மறந்து விடுவது வழக்கம். அதே போல் பஜனை செய்யும் பொழுது தன் நிலை மறந்து விடுவார். பஜனை முடிந்ததும் எந்தவித சன்மானமும் பெறாமல் வீடு வந்து சேர்ந்து விடுவது வழக்கம்.
ஒரு தடவை கமலதாசர் பஜனை செய்து முடிந்ததும், அவரைப் பாராட்டிய செல்வந்தர் ஒருவர், கமலதாசரின் மேல் அங்க வஸ்திரத்தில் அவருக்குத் தெரியாமல் ஒரு தங்க மோதிரத்தைக் கட்டி வைத்து விட்டார். இது அவருக்குத் தெரியாது. வீடு திரும்பியதும், அவரது தந்தை, மேல் அங்கவஸ்திரத்தில் உள்ள தங்க மோதிரத்தை கண்டார். இதனால் மகனைக் கடிந்து கொண்டார். இது எனக்குத் தெரியாமல் நடந்து விட்டது. ராம பஜனை செய்ததற்குப் பரிசாக யாரோ இப்படி செய்திருக்கிறார்கள் போல் இருக்கிறது. இதைப் பரிசாக ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என்றார்.
மகனே, அதற்காக நான் வருத்தப்பட வில்லை. விலை மதிப்பில்லாத ராம நாமத்தை சாதாரணமாக ஒரு தங்க மோதிரத்திற்கு விற்றுவிட்டாயோ என்று எண்ணி வருந்தினேன் என்றாராம் கபீர்தாசர். ராம நாமம் மதிப்பில்லாதது. ஒரு தடவை ராம் என்று சொன்னால் அதன் மதிப்பு பத்து மடங்கு கூடும். அதையே ராம்... ராம்... ராம்.... என்று மூன்று தடவை சொன்னால் அதன் மதிப்பு ஆயிரம் மடங்கு உயர்ந்து விடும் (10*10*10=1000) அதாவது, சகஸ்ரநாமம் சொன்னதன் பலன் கிட்டும். அப்பேர்ப்பட்ட மகிமை வாய்ந்தது ராம மந்திரம் என்றாராம்.