கர்நாடக மாநிலம் மேலக்கோட்டை திருநாராயணபுரத்தில் கோயில் கொண்டுள்ளார் நாராயணப் பெருமாள். இவரது உற்சவமூர்த்தியை மொகலாய மன்னன் ஒருவன் அபகரித்து அரண்மனைக்கு எடுத்துச் சென்று விட்டான். தனது ஞானக்கண்ணால் இதை உணர்ந்த ராமானுஜர், அவனிடம் சிலையைக் கேட்டுப் பெற திருநாராயணபுரம் வந்தார். கோயிலில் குடியிருக்க வேண்டிய இறைவனை தாங்கள் வைத்திருப்பதால் அவருக்கு செய்ய வேண்டிய உற்சவங்கள் தடைப்பட்டு நிற்கின்றன. ஆகையால் தயவுசெய்து அந்த விக்கிரக்த்தைத் திருப்பியளித்து உதவ வேண்டும் என அந்த மொகலாய பாதுஷாவைப் பணிவோடு கேட்டுக் கொண்டார் ராமானுஜர். அந்த சிலை அப்போது பாதுஷாவின் மகளிடம் மிகவும் பத்திரமாக இருந்தது. அந்தப் பெண் அந்த சிலையை அரசனிடமிருந்து மிகவும் ஆசையாக வாங்கி வைத்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே அந்த சிலையை தன்னுடனே வைத்துக் கொண்டு நீராடும் போதும், உண்ணும் போதும், உறங்கும் போதும் அந்த சிலைக்கு முதலில் யாவும் செய்து முடித்த பின்பே தனக்கு அவற்றை செய்து கொண்டாள். ஒரு கணம் கூட அவள் அந்த சிலையைப் பிரியாமல் கொஞ்சி குதூகலித்து அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். வந்திருக்கும் வைணவப் பெரியார் மிகப்பெரிய மதத்தலைவர் என்பதும் மிகுந்த மகிமை பொருந்தியவர் என்றும் பாதுஷாவுக்குத் தெரியும். பாதுஷா பயந்தார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஐயா, தாங்கள் என்னுடன் என் மகளின் அந்தப்புரத்துக்கு வாருங்கள். அங்கு அந்தச் சிலையுடன் பேசி விளையாடி அவள் மகிழ்ந்து கொண்டிருக்கிறாள். நீங்கள் அந்த சிலையைக் கூப்பிடுங்கள். அந்த சிலை தானாக உங்களிடம் வந்தால் நீங்களே அதை அழைத்துக் கொண்டு போகலாம். எனக்கு மறுப்பேதும் இல்லை என்று ராமானுஜரடம் கூறினார். சிலை எப்படியும் அங்கிருந்து அசையாது என்பது மன்னனின் நம்பிக்கை. மன்னனைத் தொடர்ந்து மகளின் அந்தப்புரத்துக்கு ராமானுஜர் சென்றார். அழகாக அலங்காரம் செய்து, பூக்கள் சூட்டி அந்தச் சிலையை ஒரு பொன்னூஞ்சலில் வைத்து ஆட்டி, ஆனந்தமாகப் பாட்டிசைத்தாடிக் கொண்டிருந்தாள் அரசன் மகள். அந்தப்புரத்தில் மெல்லிய திரைக்குப்பின் இளவரசி அந்தச் சிலையை தாலாட்டி மகிழ்ந்து கொண்டிருந்த காட்சி ராமானுஜரைப் பரவசமாக்கியது. சிலையில் அந்தப் பெண் கண்டிருந்த தெய்வீக உணர்வு அவரை ஆச்சரியமடைய வைத்துவிட்டது. உயிருள்ள இரண்டு உணர்வுகளை எப்படிப் பிரிப்பது என்று ஒரு கணம் தயங்கினார் ஆச்சாரியார். அடுத்த கனமே சுதாரித்துக் கொண்டு, என் அன்புச் செல்வனே! பரந்தாமா, ஓடோடி சீக்கிரம் நீ என்னிடம் வந்து விடு! என்று பாசமுடன் அழைத்தார். ஒரே நொடியில் அந்த சிலை சிறு பையன் உருவமாக மாறி அவரிடம் ஓடி வந்தது.
அரசனுக்கோ, அவள் மகளுக்கோ எதுவும் புரியவில்லை. ஆனால் கையில் இறைவனுடைய சிலையுடன் மிகவும் ஆனந்தமாக உடையவர் நாராயணபுரத்தை நோக்கி நடந்து போய்க் கொண்டேயிருந்தார். பகவானின் பிரிவைத் தாங்கமுடியாத இளவரசி அவரைப் பின் தொடர்ந்து ஓடோடி வந்து கொண்டே இருந்தாள். எவ்வளவோ பேர் இளவரசியைத் தடுத்தும் எந்தப் பயனும் இல்லை. சிலையை எடுத்துக் கொண்டு ராமானுஜர் கோயிலினுள் நுழைந்தார். மதத்தின் கோட்பாடுகளை மீற முடியாதவளாகி இளவரசி கோயிலின் நுழைவாயிலிலேயே மூர்ச்சையாகி விழுந்து விட்டாள். கண்டவர் யாவரும் திகைத்தனர். மனம் உருகினர். பதைப்புற்றனர். விஷயம் கேள்விப்பட்டவுடனே ராமானுஜர் இளவரசியைக் காண ஓடி வந்தார். கையில் தான் வைத்திருந்த புனித நீரை அவள்மீது தெளித்தார். அதற்காகக் காத்திருந்தது போல் அந்தப் பெண்ணின் உயிர் கோயில் வாயிற்படியிலேயே பிரிந்தது. இறைவனிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்த அந்த இளவரசியின் நினைவாக பீபீ நாச்சியார் என்று அவர் பாசமாக அழைக்கப்பட்டு அவருக்கென்றே தனிக்கோயில் அமைக்கப்பட்டு இன்னும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. மனம் ஒன்றும்போது மதமும், ஜாதியும், எந்த மார்க்கங்களும் சற்றும் மதிப்புப் பெறுவதில்லை. ஒன்றியமனந்தான் உத்தமமாகப் போற்றப்படுகிறது.