வேலைக்காரன் செய்யும் தவறுக்கு எஜமானனே பொறுப்பு. ஏனெனில், அவன் அவரால் சரிவர வழிநடத்தப் படவில்லை. ஒருமுறை அந்தணர்கள் சிலர் காட்டிற்கு வந்தனர். உலக அமைதி கருதி யாகம் ஒன்றைச் செய்வதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டனர். ஒரு குறிப்பிட்ட நாளில், வயோதிக அந்தணர் ஒருவரை தர்ப்பை பறித்து வருமாறு அனுப்பினர். அவர் அந்தநாளில் மவுன விரதம் இருப்பார். அப்போது, ஒரு அரக்கன் வந்தான். அவன் யார் தெரியுமா? விபீஷணன். ராவணனின் தம்பி. ராமபிரானால், இலங்கையின் அரசனாக முடிசூட்டப்பட்டவன். ஒருநாள், அவன் தனது பணிகளின் இடையே ஓய்வெடுப்பதற்காக அந்தக் காட்டிற்கு வந்தான். அப்போது தான் வயதான அந்தணர் தர்ப்பை பறித்துக் கொண்டிருந்தார். அவரிடம் விபீஷணன், ஐயா! நட்ட நடுக்காட்டில் தர்ப்பை பறித்துக் கொண்டிருக்கிறீரே! எதற்காக? என்றான். அந்தணர் மவுன விரதத்தில் இருந்ததால், அமைதியாக பணி öŒ#தார். விபீஷணன் என்ன தான் ராமபக்தன் என்றாலும், ராஜா என்ற அகம்பாவம் இருக்குமல்லவா! போதாக்குறைக்கு பிறவியால் அவன் அரக்கன் தானே! மீண்டும், நான் மரியாதையுடன் உம்மிடம் கேட்டும் நீர் எனக்கு பதில் சொல்லவில்லை.
உம்...இப்போதாவது சொல்லும்! எதற்காக, நடுக்காட்டுக்குள் தர்ப்பை பறிக்கிறீர்? என்று ஆவேசமாகக் கேட்டான். முதியவரோ தன் விரதம் சரிவர இருக்க வேண்டுமென விரும்புபவர். தன் நிலையை உணர்த்த இயலாமல், வாயில் கை வைத்து மவுனவிரதம் இருப்பதை உணர்த்தினார். விபீஷணனோ, தன்னை அவர் வாயைப் பொத்திக்கொண்டு போகச் சொல்கிறார் போலும் என தவறாகக் கருதிக்கொண்டு, அவரை எட்டி உதைத்து விட்டான். அப்படியே சுருண்டு விழுந்து இறந்து விட்டார். அந்தணரைக் கொன்றது பெரும் பாவமாயிற்றே! விபீஷணன் வருத்தத்துடன் நிற்க, மற்ற அந்தணர்கள் தங்கள் சகாவைத் தேடி வந்து விட்டனர். அங்கே நிற்பது விபீஷணன் என அறியாமல் நடந்ததைக் கேட்டறிந்தனர். ஒரு அந்தணர் மவுனவிரதம் இருக்கிறார் என்பதை அறியாமல் கொன்று விட்டாயே என்று திட்டினர். அவர்கள் அவனைக் கட்டி இழுத்துச் சென்றனர். ஒரு பெரிய பள்ளம் தோண்டி உள்ளே தள்ளி பாறையை உருட்டி விட்டனர். பாறைகள் அவன் உடல் மீது பட்டு நொறுங்கின. அப்போது ஸ்ரீராமபிரான் அவ்வழியே வந்தார். உள்ளே விபீஷணன் கட்டப்பட்டு கிடப்பதைக் கண்டு நடந்ததை அந்தணர்களிடம் கேட்டறிந்தார். ராமபிரானே! அந்த அரக்கனைக் கொல்லுங்கள்.
உங்கள் பாணத்துக்கு யாரும் தப்ப முடியாது, என்றனர். ராமபிரான் தலை குனிந்தபடியே, அந்தணர்களே! மன்னிக்க வேண்டும். அவன் எனது சேவகன் விபீஷணன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவன் இலங்கையை ஆளவும், அதுவரை ஆயுள்பலமும் அவனுக்கு அருளியிருக்கிறேன். மேலும், எஜமானான நானே, அவன் செய்த துன்பத்துக்கு காரணகர்த்தா ஆவேன். எனவே, அவன் செய்த தவறுக்காக என்னை தண்டியுங்கள், என்றார். அந்தணர்கள் ராமனின் கடமை உணர்வு கண்டு பெருமைப்பட்டனர். அவன் அந்தணரைக் கொன்ற பாவம் தீர பரிகாரம் செய்தாலே போதுமானது, என்று பரிகாரத்தையும் கூறினர். ராமபிரானே பரிகாரத்தைச் செய்தார். பின்னர் விபீஷணனை விடுவித்தார். தான் செய்த தவறுக்கு ராமனிடம் மன்னிப்பு கேட்ட விபீஷணன் வெட்கத்தால் தலை குனிந்தான்.