தசரதருக்குப் பல காலம் குழந்தைப் பேறு இல்லை. ரகுவம்சம் தழைக்க வேண்டி புத்ரகாமேஷ்டி யாகம் செய்தார். இறையருளால் பெற்ற பாயசத்தைத் தன் மனைவியர்களான கௌசல்யை, சுமித்ரை, கைகேயி ஆகியோருக்குத் தந்தார். வைகுண்டநாதனான ஸ்ரீஹரி, தமது அம்சங்களான ஆதிசேஷன், சங்கு மற்றும் சக்கரத்துடன் நான்கு மகன்களாகப் பிறந்து தசரதரின் துயர் நீக்கினார். அன்று தசரதருடன் மனைவியர் மூவரும் அமர்ந்திருந்தனர். எதிரே ராஜகுரு வசிஷ்ட மகரிஷி. குழந்தை ராமர் தந்தையின் வலது தொடையில் அமர்ந்திருந்ததைக் கண்ட மற்ற மூவரும் தசரதரின் மேல் ஏற ஆரம்பித்தனர். லட்சுமணனுக்கு மற்றொரு தொடையில் இடம் கிடைத்தது. பரதன் ஒரு தோளிலும் சத்ருக்னன் மறு தோளிலும் ஏறி அமர்ந்தனர். அப்போது ராமருக்குத் தந்தையின் தோள் மேல் அமர ஆசை வந்தது. லட்சுமணனையும் சேர்த்துக் கொண்டு தசரதரின் மார்பின்மேல் ஏற ஆரம்பித்தார். தோளில் ஏறி ஜம்மென அமர்ந்த இரு தம்பியரும் சும்மா இருப்பார்களா ! இறங்க மறுத்துவிட்டனர். ராமரும் லட்சுமணனும் தசரதரின் மார்பை இறுகப் பிடித்துக் கட்டிக் கொண்டனர். நான்கு திசைகளிலும் தசரதரைப் பிடித்துப் புதல்வன் இழுப்பதைக் கண்டு அருகே இருந்த மனைவியர் சிரித்து மகிழ்ந்தனர். தசரதருக்கு மட்டும் என்ன ! பல காலம் குழந்தை இல்லாமல் வருந்திய அவருக்கு இது ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.
இந்த அற்புதக் காட்சியைக் கண்டு வசிஷ்டரின் மனதில், ஆஹா ! இந்த ஹரியை நாமும் ஆசை தீரக் கட்டித் தழுவ மாட்டோமா என்ற ஏக்கம் தோன்றியது. எல்லாம் ஒரு கணம்தான். ராமரின் பிஞ்சுப் பாதங்களைத் தொட்டு முத்தமிட்ட வசிஷ்ட மகரிஷிக்கு, மும்மூர்த்தி வடிவில் காட்சியளித்தார் எம்பெருமான். உடனே வசிஷ்டர், ஏ பரந்தாமா ! அத்ரிமகரிஷிக்கு தத்தாத்ரேயராக அவதரித்து அருள் செய்தாய் ! அப்படி ஒரு பாக்கியத்தை எனக்கும் வழங்கமாட்டாயா? என்று பிரார்த்தித்தார். அவ்வளவுதான், இறைக் காட்சி மறைந்தது. வசிஷ்டர் தன்னிலைக்குத் திரும்பினார். சிறிது நேரத்திலேயே வசிஷ்டரின் மனதில் அட ! என்ன இது ! என் மனதில், உலகாயதமான எண்ணம் தோன்றலாமா ? என்ற வெட்க உணர்வு வந்தது. வீடு திரும்பியதும் கவலையுடன் மனைவி அருந்ததியிடம், என்னவென்று தெரியவில்லை ! இன்று நான்கு அரச குமாரர்களின் விளையாட்டைக் கண்டதும், எனக்குள் ஏன் இப்படி ஓர் எண்ணம் தோன்றியது என்று புரியவில்லை என்றார். அருந்ததியோ, தவசிரேஷ்டரே ! நானும் உங்களிடம் கூற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். சிவ - பார்வதியின் திருமணத்தைக் கண்டபோது எனக்குள்ளும் தேவி பார்வதி என் மகளாகப் பிறக்க மாட்டாளா என ஏக்கம் எழுந்தது என்றாள்.
எங்கு எது நடந்தாலும் திரிகால ஞானியான நாரதருக்குத்தான் தெரிந்துவிடுமே ! வசிஷ்டரும் அருந்ததியும் பேசியதைக் கேட்ட அவர் அங்கு சென்று, ரிஷிகளுக்கெல்லாம் மகரிஷியே ! உங்களது எண்ணம் கலிகாலத்தில் கைகூடும் என்று அருளினார். மகிழ்ச்சியில் திளைத்த வசிஷ்டரோ, நாரதரே ! உமது வாக்கு பலிக்கட்டும். ஆனால் அதுவரை எங்கு எவரிடமும் இதைப் பற்றிக் கூற வேண்டாம். அப்படி நான் பிறந்தால் எனக்குக் குருவாகத் தாங்களே வந்தருள வேண்டும் என்று வசிஷ்டர் கேட்டுக் கொண்டார். கலியுகத்தில் வசிஷ்டரும் அருந்ததியும் விட்டோபாவாகவும் அவர் மனைவி ருக்மா பாயாகவும் வந்துதித்தனர். துறவு மேற்கொள்ள எண்ணிப் பயணித்த விட்டோபாவுக்கு, பாண்டு ரங்கனே ருக்மாபாயை மணமுடிக்குமாறு கனவில் வந்து அருளினார். எல்லாவற்றையும் துறந்து வாராணசி சென்று விட்டோபா யாரிடம் உபதேசம் பெற்றாரோ, அந்த குருவான ஸ்ரீபாதசுவாமிகள் வேறு யாருமல்ல, சாக்ஷõத் நாரதரேதான். துறவறம் விட்டு மீண்டும் இல்லறத்துக்குச் செல் என்ற இறைக்கட்டளையினால் வீடு திரும்பினார். விட்டோபாவிற்கு குழந்தைப்பேறு வேண்டி, ஸ்ரீஹரியிடம் ஸ்ரீபாதசுவாமிகள் பிரார்த்தித்தார். அப்போது அவர் முன் தோன்றிய ஸ்ரீமகா விஷ்ணுவே ஸ்ரீபாதரிடம் தசரத மகாராஜாவின் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியைக் கூறி மகிழ்ந்தார். பிறகு விட்டோபாவிற்கு, சிவனின் அம்சமாக நிவர்த்திதேவன்,விஷ்ணுவின் அம்சமாக ஞானேஸ்வர், பிரம்மாவின் அம்சமாக சோபானதேவர், அம்பிகையின் அம்சமாக முக்தாபாய் ஆகியோர் பிறந்தனர்.இப்படியாக மகாவிஷ்ணு வசிஷ்டரின் ஏக்கத்தைத் தீர்த்து வைத்தார்.