சுப்பனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எங்காவது பஜனை பாடினால், அடடடடா... இவங்க இம்சை தாங்கலேப்பா! எப்ப பார்த்தாலும் முருகா.. ராமா.. கிருஷ்ணான்னு ஒரே கோஷ்டி கானம்! காதைப் பிளக்குது இவங்க கூச்சல்! என்று நினைப்பதுடன் சும்மா இருக்கமாட்டான். பஜனை நடக்குமிடத்திற்கு சென்று, என்னய்யா கூப்பாடு போடுறீங்க! மரியாதையா போறீங்களா! இல்லை...என் ஆட்களோட வந்து கலாட்டா பண்ணட்டுமா? என்று தடியைக் காட்டி மிரட்டுவான். அவ்வளவுதான்...பஜனைக் கூட்டம் பயத்தில் பஞ்சாய் பறந்து விடும். ஒருநாள், இவன் இப்படி மிரட்ட எல்லாரும் ஓடிவிட்டனர். முதிய துறவி மட்டும் தொடர்ந்து இறைநாமம் ஜெபித்துக் கொண்டிருந்தார்.ஏ சாமி! உனக்கு மட்டும் தனியா சொல்லணுமா! ஒருவேளை உனக்கு காது கேட்கலியோ! ஓடிப்போயிடு, இல்லே, மண்டையை பொளந்துடுவேன், என தடியை ஓங்கினான் சுப்பன்.துறவி அசையவில்லை. தம்பி! நீ அறியாமல் பேசுகிறாய். இறைநாமம் சொல்வதால் ஏற்படும் பலனை நீ அறியவில்லை. வேண்டுமானால், நீயும் பக்தியோடு சொல்லிப்பார். அந்தப் பரந்தாமனே நேரில் வந்து உனக்கு பால்சோறு ஊட்டி விடுவான் என்றார்.
சுப்பனுக்கு இதை சோதித்துப் பார்க்க ஆசை.சாமி! நீ சொன்ன மாதிரி நானும் கடவுள் பேரைச் சொல்லுவேன், நீ சொன்ன மாதிரி அந்த மனுஷன் எனக்கு சோறு மட்டும் தரலியோ! நீ அதோட காலி! என்று மிரட்டிவிட்டு அருகிலுள்ள காட்டுக்குப் போய்விட்டான்.ஒரு மரத்தின் மீது அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டான். எந்த சாமியைக் கும்பிடலாம் என யோசித்தான். சரி...பரமசிவனைக் கும்பிடுவோம் என முடிவெடுத்து நமசிவாய...நமசிவாய என சொல்ல ஆரம்பித்தான். துறவி சொன்னது போல, மானசீகமாக சொல்ல ஆரம்பித்து விட்டான். வெளியே உலகமே மறந்து போயிற்று. அப்போது ஒரு வழிப்போக்கன் வந்தான். சுப்பன் அமர்ந்திருந்த மரத்தின் கீழ் அமர்ந்து, தான் கொண்டு வந்த கட்டுசோறை சாப்பிட்டான். மீதியை பொட்டலமாகக் கட்டி பக்கத்தில் வைத்துக் கொண்டான். அப்படியே தூங்கி விட்டான். அவன் எழுந்து செல்லும்போது, சோற்றுப்பொட்டலத்தை எடுக்க மறந்து கிளம்பி விட்டான். அப்போது சில திருடர்கள் வந்தனர். அவர்களைப் பிடிக்க அவ்வூர் ராஜா பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். ஆனால், திறமை சாலிகளான அவர்கள் அரண்மனைக் காவலர்களுக்கு கடுக்காய் கொடுத்து திருட்டைத் தொடர்ந்தனர். அவர்கள் மரத்தடியில் அமர்ந்து திருடியவற்றைப் பங்கிட்டனர். அப்போது, ஒருவன் அங்கிருந்த சோற்றுப் பொட்டலத்தைப் பார்த்தான். அவர்களுக்கு பசி கடுமையாக இருந்ததால், அதைச் சாப்பிட முடிவெடுத்து கை கழுவ அருகிலுள்ள குளத்திற்குச் சென்ற சமயத்தில், ஒரு திருடன் மரத்தில் அமர்ந்திருந்த சுப்பனைப் பார்த்துவிட்டான்.
அடேய்! இதை யாரும் சாப்பிட்டு விடாதீர்கள். மரத்தில் ஒரு ஒற்றன் இருக்கிறான். இவன் ராஜாவால் அனுப்பப்பட்டவனாக இருப்பான். மரத்தில் இருந்து நம்மைக் கவனிக்கிறான். இந்த உணவில் விஷம் கலந்து வைத்து, நம்மைக் கொல்ல செய்த தந்திரமே இது. அவனைக் கீழே வரவழையுங்கள், என ஒரு கல்லைத் தூக்கி எறிந்தான். சுப்பனும் திடுக்கிட்டு விழித்து கீழே குதித்தான். அவனைத் திருடர்கள் பிடித்து, எங்களைக் கொல்ல வந்தவன் தானே நீ! நீ கொண்டு வந்த விஷ சாப்பாட்டை நீயே சாப்பிடு! இந்தா! என வலுக் கட்டாயமாக வாயில் திணித்தனர். இறைவா! நீ திருடனின் வடிவில் கூட வருவாயா! துறவி சொன்னது சரியாகி விட்டதே! இவர்கள் மூலம் உணவு தந்து என் மனதைத் திருடிவிட்டாய். உன் மகிமை அறியாமல் பக்தர்களைத் துன்புறுத்தினேனே! என்னை மன்னித்து விடு. நீ நானும் பஜனை கோஷ்டியில் ஒருவனாக இருப்பேன், என பிரார்த்தித்தான். தாங்கள் கொடுத்த உணவு அவனைக் கொல்லாததால், சந்தேகம் தீர்ந்த திருடர்கள் தங்கள் வழியில் சென்றனர். அவர்கள் அங்கு வந்து தங்கும் தகவலை ராஜாவுக்கு அறிவித்தான் சுப்பன். ராஜா தன் படையை அந்த வட்டாரத்தில் மறைவாக நிறுத்தி வைத்து திருட்டுக் கும்பலைப் பிடித்து விட்டார். தகவலளித்த சுப்பனுக்கு போதுமான நிதி வழங்கினார். சுப்பன் பணக்காரனாகவும் மாறிவிட்டான்.