இறைவன் எல்லாருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கிறான். அவனை கூட்டாக வழிபட்டால் மிகவும் மகிழ்வான். கேட்டதெல்லாம் தருவான். கிராமத்து பெரியவர் தனவேலன் கஷ்டப்படும் ஏழைகளைப் பார்த்து மனம் பதைப்பார். ஐயோ! அவர்கள் சாப்பிட்டார்களோ இல்லையோ என்று துடிப்பார். அவர் பெரிய பணக்காரர் என்பதால், பகல் முழுக்க அவர் வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும். ஏழைகள் அவர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு போவார்கள். தன் காலத்துக்குப் பின்னாலும் ஏழைகளின் பசி தீர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு தோட்டத்தில் பழ மரங்களை நட்டார். தோட்டத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக ஒரு பெரிய சுவர் எழுப்பினார். காலம் அதிகமாகி விட்டதால், மக்கள் அந்த தோட்டத்துக்குள் பழமரங்கள் இருப்பதையே மறந்து விட்டனர். ஒரு கட்டத்தில், மரங்களின் அடர்த்தியால் இருள் சூழ்ந்திருந்த அந்த தோட்டத்தில் பேய்கள் உலவுவதாக புரளி கிளம்பியது. மக்கள் அந்த சுவர் பக்கமே வருவதில்லை. இதுவும் ஒரு வகையில் பெரியவருக்கு நல்லதாக போயிற்று. மரங்கள் செழித்து வளர்ந்தன. மா, பலா, வாழை, ஆரஞ்சு, அன்னாசி என விதவிதமான பழங்கள் பழுத்து தொங்கின.பேய் பிசாசு புரளியை நம்பாத சிலர் கஷ்டப்பட்டு மதில் சுவரில் ஏறினர்.
ஒருவன் பாதி ஏறியதுமே பிடி தவறி கீழே விழுந்தான். இருப்பினும் மீசையில் மண் ஒட்டாத கதையாக, தோட்டத்தில் பேய் இருப்பது நிஜம் தான்! கருப்பான ஒரு உருவம் என்னை தள்ளிவிட்டது, என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான். இப்படி எல்லாரும் வரிசையாய் விழுந்து ஆளுக்கொரு பேய்க்கதையை சொல்லி விட்டு தப்பிக்க, ஒரே ஒருவன் மட்டும் மதில் மேல் ஏறி விட்டான். உள்ளே பார்த்தால் ஏராளமான மரங்களில் கனிகள் பழுத்து தொங்கியதைப் பார்த்தான். இவன் ஏறுவதற்கு முன்பே, உள்ளூர்வாசிகள் சிலர் உள்ளே குதித்து அங்கிருந்த கனிகளை உண்பதைப் பார்த்து இவர்கள் எப்போது எப்படி உள்ளே வந்தார்கள் என ஆச்சரியப்பட்டான். உள்ளே நின்றவர்களிடம், ஐயா! இதற்கு காசு உண்டா? என்றான். இல்லை, எல்லாமே இலவசம் என்றனர் அவர்கள். மதில்மேல் இருந்தபடியே கையில் சிக்கிய பழங்களைப் பறித்து சாப்பிட்டான். வெளியில் சென்றவர்களை கூவி அழைத்து, ஐயா! வாருங்கள், உள்ளே கனிகள் பழுத்து தொங்குகின்றன. எல்லாரும் சாப்பிடலாம், மேலே ஏறுங்கள், என்று கூவினான். அவர்களோ, இவனுக்கு பித்து பிடித்துவிட்டதோ என்று கண்டுகொள்ளாமலே சென்றனர். சிலர் நாளைக்கு வருகிறேன், என்றனர். சிலர் அடுத்தமாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி தப்பித்தனர்.
மதில் சுவருக்குள் மூழ்கியிருக்கும் தோட்டத்தைப்போல் தான் இறைவனும் மறைவாக இருக்கிறார். அவரைக் காண வாருங்கள் என மதில்சுவரில் ஏறி அமர்ந்த மனிதனைப் போல மகான்கள், இளைஞர்களை அழைக்கின்றனர். ஆனால், இளைஞர்களோ, இப்போது இறைசிந்தனை எதற்கு? 40 வயது ஆகட்டுமே! சஷ்டியப்த பூர்த்தி நடக்கட்டுமே! பக்தி என்பதே அறுபதுக்கு மேல் வர வேண்டியதல்லவா! என காலத்தை தள்ளுகின்றனர். தோட்டத்துக்குள் பசித்தவர்களுக்கு இனிய கனிகள் இலவசமாக கிடைத்ததை போல, ஒழுக்கம், கட்டுப்பாடு, மனிதநேயம் ஆகிய நற்குணங்களாகிய கனிகள் கிடைத்தும் அவற்றைப் பெற மறுக்கின்றனர். வெளியே இருக்கும் மதில்சுவரில் ஏறிய சிலர் வழுக்கி விழுந்து பேய் பிசாசு தள்ளியதாக காரணம் சொன்னது போல, தியானம், யோகா ஆகிய இறைவனை அடையும் முறைகள் கடினமானவை எனக்கருதி பின்னோக்கி ஓடுகின்றனர். மதிலில் ஏற முயல்பவர்களையும் பயமுறுத்துகின்றனர். காகம் தன் உறவுகளை அழைத்து இணைந்து உண்பது போல, மகான்கள் தங்களுடன் இணைந்து இறைவனை அறிய அழைக்கின்றனர்.கிடைத்ததை கதவைச் சாத்திக் கொண்டு தனியே உண்ணாதீர். சேர்ந்து புசிக்கலாம் என்கிறார் தாயுமானவர். அதுபோல, வழிபாட்டில் அனைவரும் இணைவோம். நல்ல சமுதாயம் அமைய பாடுபடுவோம்.