முக்காலமும் உணர்ந்தவரும், கல்லையும் தங்கம் ஆக்கும் வல்லமை மிக்கவருமான ஞானி ஒருவர், ஒரு ஊருக்கு வந்தார். மக்கள் தினம் தினம் அவரை தரிசித்து அவரவர் குறையைச் சொல்லி, அவை நீங்க அவரது யோசனையையும், செயலில் வெற்றிக்கு ஆசியும் பெற்றுப் போனார்கள். அந்த ஊரில் ஓர் இளைஞன் இருந்தான். அவன் உழைக்காமலே பெரும் செல்வம் ஈட்ட நினைத்தான். அவன் அந்த ஞானியைப் பார்க்கச் சென்றான். அவன் அங்கு போன சமயத்தில், ஏழை ஒருவரின் வறுமை நீங்க ஒரு சிறு கல்லை தங்கக் கட்டியாக மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஞானி. அதை அந்த வாலிபன் பார்த்தான். அவனது மனம் வேகமாக ஒரு கணக்குப் போட்டது. அவன் முறை வந்ததும் ஞானியிடம் ஐயா தங்களுக்கு இருப்பது போலவே கல்லைத் தங்கம் ஆக்கும் சக்தி எனக்கு வேண்டும் என்று மிகவும் பணிவுள்ளவன் போல் நடித்துக் கேட்டான். அவனது உள்நோக்கம் உணர்ந்த ஞானி, அவனைப் பார்த்து புன்முறுவல் செய்தார். பிறகு சொன்னார் தம்பி இந்த அற்புத ஆற்றல் எனக்கு இறைவன் அருளால் கிடைத்தது. அதை நான் பிறருக்குத் தரமுடியாது. ஆனால் வேறு ஒரு வழி இருக்கிறது... ! என்ன வழி சொல்லுங்கள்.. எவ்வளவு கஷ்டமானலும் பரவாயில்லை ! ஞானி முடிப்பதற்கு முன் பரபரத்தான் இளைஞன். ஆற்றங்கரையில் ஒரு கல் இருக்கிறது. அது அதிசயமான கல். அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும். அவர் சொன்ன மறு விநாடியே புறப்பட்டான் இளைஞன். அவன் போன திசை பார்த்து அர்த்தத்தோடு சிரித்தார் துறவி. அவர் நினைத்ததுபோவே சென்ற அதே வேகத்தில் திரும்பி வந்தான் இளைஞன்.
குருவே... ஆற்றங்கரையில் ஏராளமான கற்கள் இருக்கின்றன. அவற்றுள் அந்த அதிசயக் கல்லை கண்டுபிடிப்பது எப்படி ? நீங்கள்தான் வந்து எடுத்துத் தரவேண்டும் என்று கேட்டான். அது என்னால் முடியாது... அதனை நான் தொட்டுவிட்டால் அது உனக்குப் பயன் தராது. நீயேதான் தேடி எடுக்க வேண்டும். அப்படியானால் அதன் அடையாளத்தையாவது சொல்லுங்கள். ஆற்றங்கரையில் உள்ள கற்களில் எந்தக் கல் நீ கையில் எடுக்கும்போது வெப்பமாக இருக்கிறதோ அதுவே அதிசயக் கல். வெண்மையான அது, உன் கை பட்டதும் இளம் மஞ்சளாக மாறும். இதுதான் அடையாளம். அவருக்கு நன்றி சொல்லவும் மறந்து ஓடினான் இளைஞன். ஆற்றங்கரையில் இருந்த ஆயிரமாயிரம் கற்களில் ஒன்றை எடுத்தான். அது குளிர்ச்சியாக இருந்தது. அடுத்தது ஒன்று. அதுவும் ஜில். மறுபடி மறுபடி... மீண்டும் மீண்டும் எடுக்க எடுக்க எல்லாமே குளிர்ச்சியான கல்லாகவே இருந்தன. ஒருவேளை, அடையாளம் தெரியாமல் எடுத்த கல்லையே மறுபடி மறுபடி எடுக்கிறோமோ. அவசர அவசரமாக யோசித்தவன் ஒரு முடிவு செய்தான். அதன்படி, ஒரு கல்லை எடுத்ததும் அது ஜில் என்று இருந்தால் உடனே அதை ஆற்றுக்குள் வீசிவிடுவான். இப்போதும் எடுக்க எடுக்க குளுமையான கல்லே வந்தது அவன் கைக்கு. ஒருநாள் இரண்டுநாள் என்று ஆரம்பித்து மாதக் கணக்கில் அதே நிலை நீண்டது. கல் எடு விட்டெறி... கல் எடு விட்டெறி... கல் எடு விட்டெறி... ! ஏதோ இயந்திரம்போல் ஆகிப்போனான் இளைஞன். ஆனால் அவன் பேராசை மட்டும் குறையவே இல்லை.
எந்த முயற்சிக்கும் ஒரு பலன் இருக்கும் அல்லவா ? அதுபோலவே அந்த இளைஞனின் முயற்சிக்குப் பலனாக அந்த அதிர்ஷ்டக்கல். அதிசயக்கல் அவன் கைக்கு கிடைக்கும் நாளும் வந்தது. அன்றும் வழக்கம்போல் ஆற்றங்கரைக் கற்களை எடுத்துத் தேடத் தொடங்கியிருந்தான் இளைஞன். ஒன்று... இரண்டு... மூன்றாவதாக அவன் எடுத்தது வெண்மையா கல். அந்தக் கல்லில் வழக்கமான குளிர்ச்சி இல்லை. அது அது ஆமாம் அதுதான் எந்த அதிசயக்கல். அந்தக் கல்லை எடுத்ததும் இளைஞன் என்ன செய்தான் தெரியுமா ? ஆனந்தப்பட்டிருக்க வேண்டிய, துள்ளிக்குதித்திருக்க வேண்டி அந்த இளைஞன், தினம்தினம் கல்லை எடுத்தும் ஆற்றுக்குள் விட்டெறிந்து மனம் பழகி விட்டதன் காரணமாக அந்த அதிசயக் கல்லையும் ஆற்றுக்குள் வீசினான். எதற்காக முயற்ச்சித்தானோ அந்தப் பலன் கிடைக்க உதவி செய்திருக்க வேண்டி அவன் மனனே, எதிர்மறையாக செயல்படக் காரணம் என்ன ? மனம் இயல்பாக பழகிப்போன பாதையில் இருந்து அவ்வளவு சுலபமாக மாறாது. ஆரம்பம் முதலே நாம் நேர்மறையாகச் செல்ல மனதைப் பழக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதில் இருந்து எதிர்மறை எண்ணங்களை எடுத்துவிட்டு புதிய நேர்மறை சிந்தைனையைப் பதிக்க வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் மனமே உங்கள் வெற்றிக்கு வழிகாட்ட ஆரம்பித்து விடும்.