ஒரு கிராமத்தில் வசித்த சுந்தரம் என்ற அனாதை சிறுவனுக்கு அவ்வூர் பண்ணையார் மாடு மேய்க்கும் தொழில் தந்தார். சம்பளம் இருநூறு. சாப்பாடு, துணிமணி கொடுத்து விடுவார். மாட்டுக்கொட்டிலில் தங்குவான். பள்ளிக்கூடத்துக்கு பல பிள்ளைகள் போவார்கள். அவர்கள் அங்கே எதற்குப் போகிறார்கள் என்பது கூட சுந்தரத்துக்கு தெரியாது. அவனிடம் யாராவது பொய் சொன்னால் கூட, அப்படியா? என நம்பி விடுவான். சரியான அப்பாவி.ஒருநாள், மாடு மேய்த்தபடியே பாடிக்கொண்டிருந்தான். அப்போது, ஒரு பெரியவர் வந்தார். அங்கிருந்த குளத்தில் நீராடினார். தன் கையில்இருந்த பையில் இருந்த துணியை மாற்றிக்கொண்டார். மூக்கை பிடித்துக்கொண்டு சிறிதுநேரம் கண்மூடி இருந்தார். ஏதோ சாப்பிட்டார். கிளம்பிவிட்டார். இதைக் கவனித்த சுந்தரம் அவரருகே ஓடினான்.சாமி! நீங்க இதுவரை என்ன செஞ்சீங்க? கடவுளை தரிசித்துக் கொண்டிருந்தேன்,. சரி...சாமி, அவசரமா கிளம்பின உங்க பயணத்தை தடைபடுத்திட்டேன், மன்னிச்சிடுங்க. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க, . பெரியவர் அவனை ஆசிர்வதித்து கிளம்பிவிட்டார். அவர் சென்றதும், சுந்தரம் தன் ஆடைகளை கரையில் வைத்து விட்டு, குளத்தில் குளித்தான். மீண்டும் ஆடை அணிந்து கொண்டு, மூக்கை பிடித்து கண்மூடி உட்கார்ந்து பகவானே வா என்று தியானித்தான். இருட்டாக இருந்ததே தவிர கண்ணுக்குள் பகவான் தெரியவில்லை. கண்ணை சரியாக மூடவில்லையோ என்று இன்னும் அழுத்தி மூடினான். அவர் வரவில்லை.
மூக்கை சரியாக அழுத்தவில்லையோ என ஓங்கி அழுத்த மூச்சு முட்டியது. பிடிவாதக்காரனான அவன் மூக்கை விடவும் இல்லை. இதை பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமால் பார்த்து விட்டார். அநியாயமாக இவன் இறந்துவிடுவான் போலிருக்கிறதே என வேகமாக வந்துவிட்டார்.தம்பி, எழுந்திரு, நான் தான் பகவான், என்ற குரல் கேட்டு எழுந்தான்.நீர் தான் பகவான் என்பதை நான் எப்படி நம்புவது? அந்த பெரியவருக்கும் நீர் தான் காட்சி கொடுத்தீரா? இல்லை...அவர் உன்னிடம் பொய் சொன்னார். உனக்கு மட்டுமே காட்சி தந்தேன், என்ற பகவானிடம், நான் நம்பமாட்டேன், அந்தப் பெரியவர் சற்றுதூரம் தான் போயிருப்பார். அழைத்து வருகிறேன். அதுவரை இந்தமரத்தில் உம்மை கட்டிப்போடுகிறேன், என்று கட்டிவிட்டு வேகமாக ஓடினான். பெரியவரை அழைத்தான். இவனுக்கு பைத்தியமோ என நினைத்தவர், வர மறுத்தார். அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்துவிட்டான். மரத்தைக் காட்டி இவர் தானே பக வான் என்றான்.இங்கே யாருமே இல்லையே என்றார் பெரியவர். என் கண்ணுக்கு தெரிகிறார். உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்றால் எப்படி? பார்த்துச் சொல்லுங்கள், என்றான். பையனுக்கு முற்றிவிட்டது என்று நினைத்த பெரியவர் அவனிடமிருந்த தப்பிக்க, நான் தான் சரியாக பார்க்க விட்டுவிட்டேன்.
இவர் சாட்சாத் பகவானே தான், என்றதும், பெரியவரே! இனி நீங்களே என் குரு. இங்கு வரும்போது என்னை அவசியம் பாருங்கள், என்று காலில் விழுந்து வேண்டினான். அவரும் தலையாட்டிவிட்டு போய்விட்டார். திருமால் அவனிடம், அவர் என்னைப் பார்க்கவே இல்லை. பொய் சொல்லி தப்பி போய்விட்டார், என்றார். அவன் அதை நம்பவில்லை. அப்பாவியான அவனிடம், உனக்கு என்ன வரம் வேண்டும், கேள், என்றார்.நான் கண்மூடி வணங்கும்போதெல்லாம் நீர் வர வேண்டும். அது மட்டுமல்ல! என் குருநாதர் பொய் சொன்னதாக நீர் சொன்னாலும், அவரது செய்கையைப் பார்த்து தான் இங்கே உம்மை வரவழைத்தேன். எனவே, அவர் கண்மூடி தியானிக்கும்போது அவருக்கும் காட்சியளிக்க வேண்டும், என்றான். உனக்கு கிடைத்த நற்பேறு, உனக்கு உதவியவருக்கும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறாயே! உன்னை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. நீ சொன்னபடியே செய்வேன். பூலோக வாழ்வை முடித்து வைகுண்டத்தில் என்னோடு வாழும் வாய்ப்பை இருவரும் பெறுவீர்களாக, என்ற திருமால் கருடனில் ஏறி கிளம்பினார்.