Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராமனும் நானே! கிருஷ்ணனும் நானே!
 
பக்தி கதைகள்
ராமனும் நானே!  கிருஷ்ணனும் நானே!

இந்த காரியத்தை என்னால் செய்ய முடியும் என்பது நம்பிக்கை. இந்த காரியத்தை என்னால் மட்டும் தான் செய்ய முடியும் என்று சொல்வது ஆணவம். நம்பிக்கை - வளர்க்க வேண்டிய உணர்வு. ஆனால், ஆணவம் அழிக்க வேண்டிய உணர்வு. நம்பிக்கை ஊக்கத்தை வளர்க்கும். ஒற்றுமையை வளர்க்கும். சக்தியை வளர்க்கும், சமாதானத்தை வளர்க்கும், ஆணவம் ஆற்றலை அழிக்கும். அன்பை அழிக்கும், ஆக்கத்தை அழிக்கும், அமைதியை அழிக்கும். மகாபாரத நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது. சிவப்பரம்பொருளை நோக்கித் தவம் செய்து எப்படியும் பாசுபதாஸ்திரத்தைப் பெற்று விட வேண்டுமென அர்ஜுனன் முடிவு செய்தான். தேரில் கிளம்பிய அவன் வெகுதூரம் பயணித்த பின்னர் இராமேஸ்வரத்தை அடைந்தான். கடலில் நீராடிவிட்டு, பகலில் செய்ய வேண்டிய நித்தியக் கடன்களை முடித்துக் கொண்டு கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது அருகில் ராமநாம ஜபத்தின் ஒலி கேட்டது. அந்தச் சிறு குன்றிலேறி அர்ஜுனன் அருகில் சென்று பார்த்தான்.

அங்கே ஆஞ்சநேயர் கண்மூடிக் கொண்டு ஆழ்ந்த நிலையில் ராமா ராமா என்று ஜெபம் செய்து கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது அர்ஜுனனுக்கு. வீண் வாதத்தை விளையாட்டாக ஆரம்பித்தான் அர்ஜுனன். கிழக்குரங்கே ! நீ யார் ! உன் பெயர் என்ன? நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று அடுக்கடுக்கான கேள்விகள் அர்ஜுனனின் இயல்பிலிருந்த ஆணவத்தை அளந்து காட்டின. பதட்டப்படாமல் பதில் சொல்லத் துவங்கினார் ஆஞ்சநேயர். சேது சமுத்திரத்துக் கிடையில் கற்களால் பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்று இராவணனைக் கொன்ற இராமசந்திர மூர்த்தியின் அடிமை நான். என் பெயர் அனுமன். என்னை வாயுபுத்திரன் என்றும் அழைப்பார்கள். இராமபிரானைப் பற்றி இவ்வளவு பெருமையாகச் சொன்ன அனுமனின் பேச்சு அர்ஜுனனுக்குச் சிரிப்பை உண்டாக்கியது. அவ்வளவு பெரிய வீரதீரனாக உன் இராமன் இருந்திருந்தால் ஒரு அணை கட்டுவதற்கு அவன் ஏன் இவ்வளவு பாடுபட்டிருக்க வேண்டும்? அவன் சிறந்த வில்லாளியாக இருந்திருந்தால், தனது அம்புகளைக் கொண்டே அவன் எளிதாக இந்தப் பாலத்தை அமைத்திருக்கலாமே? என்று கேட்டுவிட்டு எகத்தாளமாகச் சிரித்தான் பார்த்தன்.

தன்னை அலட்சியமாகப் பேசிய போதும் பொறுமையாகவே இருந்த ஆஞ்சநேயரால் இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஸ்ரீராமனை எவர் இகழ்ந்து பேசினாலும் பொங்கி எழக்கூடியவராயிற்றே வாயு மைந்தன். சினம் பொங்க சிரஞ்சீவி பேச ஆரம்பித்தார். பொறுமையாகவே நான் உனக்குக் காரணத்தைப் புரிய வைக்கிறேன், கேள் அர்ஜுனா ! அம்புகளால் பாலம் அமைத்தால் எங்கள் குரங்குப் படை அந்தப் பாலத்தைக் கடக்கும் போது பாரம் தாங்காமல் பாலம் கடலில் உடைந்து விழுந்துவிடுமே. அதனால்தான் இராமபிரான் அம்புகளால் பாலம் அமைக்கவில்லை. அதென்ன ! நீ என் இராமபி ரானை விடச் சிறந்த வில்லாளியா? என்று கேட்டார் ஆஞ்சநேயர்.அம்புகளால் கட்டப்பட்ட பாலம் குரங்குகளின் பாரம் தாங்காமல் உடைந்து போய்விடுமென்றால், அவன் என்ன பெரிய வில்லாளியா? அவனது வில்வித்தையின் சிறப்புத்தான் என்ன? வில்லுக்கு விஜயன் என்னும் சொல் வார்த்தையை நீ கேள்விப் பட்டிருக்க மாட்டாயென நினைக்கிறேன். இப்போதே உன் கண்ணெதிரிலேயே நான் ஒரு அம்புப் பாலம் அமைக்கிறேன். அதன் மீதேறி, நீ எவ்வளவு வேண்டுமானாலும் குதித்துக் கும்மாளமிடு. அப்போது நீ தெரிந்து கொள்வாய். இராமனா? அர்ஜுனனா? யார் சிறந்த வில்லாளியென்று! மெல்லச் சிரித்துக் கொண்டே அனுமன் பதிலளித்தார். சரி அர்ஜுனா ! நீ பாலம் கட்டி முடித்ததும் அதில் ஏறி நான் குதிக்கிறேன். அப்பொழுது பாலம் இடிந்து விழுந்துவிட்டால் நீ என்ன செய்வாய்? வாயு புத்திரா ! உன்னுடைய பாரம் தாங்காமல் அப்படி அந்தப் பாலம் உடைந்து விட்டால், இந்த இடத்திலேயே தீ வளர்த்து அக்னிப்பிரவேசம் செய்து நான் உயிரைத் தியாகம் செய்துவிடுகிறேன். இது சத்தியம். ஆனால் நீ எதிர்பார்க்கும் விதம் அந்தப் பாலம் விழாமல் இருந்துவிட்டால் நீ என்ன செய்வாய்? என்று கேட்டான் அர்ஜுனன்.

அப்படி நீ கட்டும் அம்புப் பாலம் உடையாமலிருந்தால் நான் உன் கொடியில் இருந்துகொண்டு உனக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வேன் என்று உறுதியளித்தார் ஆஞ்சநேயர். பார்த்தனும் பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டான். காண்டீபத்தில் அம்புகள் தொடுத்து அம்பு மழையில் அதிவிரைவில் அதிசயிக்கத்தொரு பாலத்தை அர்ஜுனன் கட்டி முடித்துவிட்டான். பிறகு அனுமனிடம், இப்போது இந்தப் பாலத்தின் உறுதியை நீயே சோதித்துக் கொள் என்றான். ராமா ! ராமா ! இந்த அடிமையின் வார்த்தைக்குள் நீயே இருந்துகொண்டு உன் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்துகொள் என்றார் அனுமான். அந்தப் பாலம் மிக நீளமானது. அதன் மேல் அனுமன் ஏறவில்லை. அந்தப் பாலத்தின் ஒரு நுனியில் தன் காலின் கட்டை விரலை வைத்து அழுத்தினார். அடுத்த கணமே அந்தப் பாலம் நொறுங்கிக் கீழே சாய்ந்தது. குழந்தைகள் கட்டிய அட்டை வீடு காற்றில் சரிந்து விழுவது போல் அந்தப் பாலம் கடலில் விழுந்து அமிழ்ந்து போயிற்று. அவமானத்தால் உடல் குறுகிப் போனான், அர்ஜுனன். சிவபெருமானிடம் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெறவேண்டும் என்ற நோக்கம் நிறைவேறாமல் இப்படிக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற இப்போது அக்னிப்பிரவேசம் செய்யும்படியாகி விட்டதே என்று வருந்தினான் பார்த்தன்.  அக்னிப்பிரவேசம் செய்யத் தயாரானான். ஆஞ்சநேயர், நீ அக்னி பிரவேசம் செய்ய வேண்டாம் எனத் தடுத்தார். ஆனால் அர்ஜுனன் சபதத்தை நிறைவேற்றுவதிலேயே உறுதியாக இருந்தான். இப்போதுதான் அவனுக்கு கண்ணன் நினைவு வந்தது. கடைசியில் இந்த இழி நிலைக்கு என்னை ஆளாக்கி என்னைக் கைவிட்டு விட்டாயே கண்ணா! என்று மனமுருகிப் பிரார்த்தித்தான். அர்ஜுனனின் வேண்டுகோளுக்கிரங்கிய கண்ணன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் பூண்டு அங்கே வந்தான். அர்ஜுனா ! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்றான் கண்ணன் ஆச்சரியத்துடன். பார்த்தன் விவரங்களைக் கூறினான். பிறகு கண்ணன், அனுமனையும் அழைத்தான். போட்டி என்று நடத்தினால் அதற்கு ஒரு சாட்சி வேண்டும். அந்த நடுவர் கூறும் தீர்ப்புக்குத்தான் இருவரும் கட்டுப்பட வேண்டும். நீங்களே போட்டியின் முடிவை நிர்ணயிப்பது சரியல்ல. மீண்டும் நீங்கள் போட்டியை நடத்துங்கள். நானே நடுவராக இருந்து முடிவைச் சொல்கிறேன்.

கண்ணனின் யோசனையை இருவரும் ஏற்றுக் கொண்டனர். கண்ணனின் துணையைக் கோரிப் பார்த்தன் மனமுருகிப் பிரார்த்தித்துக் கொண்டான். அம்புகளைக் கொண்டு அழுத்தமான பாலமொன்றை அமைத்தான். பிரம்மசாரியாக வந்த கண்ணன் தனது சக்கராயுதத்தைப் பாலத்தின் நடுவிலிருக்கச் செய்தார். முதன் முறை இதே பாலத்தைத் தனது காலின் கட்டைவிரலால் அழுத்தி நொறுங்கச் செய்ததை எண்ணிப் பெருமிதத்துடன் ஆணவமும் கலக்க அனுமன் தனது காலின் கட்டைவிரலால் ஒரு ஓரத்தை அழுத்தினார். பாலம் அசையவில்லை. பாலத்தின் மீதேறி குதித்தார். பலங்கொண்ட வரையில் பாலத்தை உதைத்தார். தனது விசுவரூபமெடுத்து பாலத்தின் மீதேறிக் குதித்தார் ஆஞ்சநேயர். பாலத்திற்கு எந்தச் சேதமும் நேரவில்லை. நன்கு உறுதியாகவே இருந்தது. தோல்வியை ஒப்புக்கொண்டு அனுமன் கீழே குதித்தார். இப்போது அந்தப் பிரம்மச் சாரியின் வடிவில் இராமன் காட்சி தந்தார். வாயுபுத்திரன் மெய் சிலிர்த்தார். முன்னொரு சமயம், திரேதாயுகத்தில் இராமபிரான் கூறிய சில வார்த்தைகள் அனுமனுக்கு ஞாபகம் வந்தன. துவாபரயுகத்தில் நான் உனக்குக் கண்ணனாகவும் காட்சி தருவேன் என்று பகவான் கூறி இருந்தார். இந்த நினைவு வந்தவுடன் இராமபிரான் கண்ணனாக மாறி ஆஞ்சநேயருக்குக் காட்சி தந்தார். வாயுபுத்திரன் வணங்கினார். கண்ணன் அவரை அன்போடு தழுவிக் கொண்டு, ஆஞ்சனேயா, இராமனும் நான் தான். கிருஷ்ணனும் நான்தான். உங்கள் மனோபாவங்கள் ஒன்று சேரவே நான் இந்த விளையாட்டில் ஈடுபட்டேன். பார்த்தா ! முதலில் நீ இராமனை இகழ்ந்து பேசினாய், என்னை மறந்தாய், நீ கட்டிய பாலத்தை என்னையே பிரார்த்தித்துக் கொண்டிருந்த அனுமன் தன் கால் பெருவிரலால் அழுத்தியே தகர்த்து விட்டான். அடுத்த தடவை என்னை நினைத்தே பாலத்தைக் கட்டினாய். வெற்றி பெற்றாய்! என்றான் கண்ணன். ஆஞ்சநேயா ! அர்ஜுனனைப் போலவே நீயும் முதலில் என் உதவியை முழுமையாக நம்பியே போட்டியில் வெற்றி பெற்றாய். இரண்டாவது முறை உன் திறமையை மட்டுமே நம்பித் தோல்வியடைந்தாய். அழைத்தால் மட்டும் என் அன்பு கிடைக்கும் என்பதற்கு நீங்கள் இருவருமே எடுத்துக்காட்டாகி விட்டீர்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar