Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குருவை மிஞ்சிய சீடர்கள்!
 
பக்தி கதைகள்
குருவை மிஞ்சிய சீடர்கள்!

ராமானுஜர் வைஷ்ணவத்தை நிலைநாட்டிய பெரும் ஆச்சாரியர். ராமகிருஷ்ணர், ராமானுஜர் இருவருமே விஷ்ணுவின் பிரசித்தி பெற்ற இரு பெரும் அவதாரங்கள். ராமானுஜரின் பெற்றோர்களான காந்திமதி, கேசவர் தம்பதியருக்குப் பல ஆண்டுகள் மகப்பேறு இல்லை. எனவே கேசவர் தம் மனைவியுடன் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஒரு வேள்வி நடத்தினார். அப்போது பெருமாள் கேசவரின் கனவில் தோன்றி, உலகினரை உய்விக்கத் தாமே அவரது மகனாக அவதரிக்கப் போவதாக அறிவித்தார். அவ்விதமே ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த குழந்தையிடம் விஷ்ணுவின் சின்னங்கள் இருக்க, அதற்கு ராமானுஜன் என்று பெயரிடப்பட்டது. ராமகிருஷ்ணரும் இவ்விதமே தோன்றினார். அவரது தந்தையான சுதிராம் 1835-ஆம் ஆண்டு கயைக்குச் சென்று, தம் மூதாதையர் நலனுக்காக சிராத்தம் செய்தார். இரவில் கயையிலுள்ள விஷ்ணுமூர்த்தியான கதாதரப் பெருமாள் அவன் கனவில் தோன்றி, தாமே அவரது மகனாகப் பிறப்பதாகக் கூறினார். இவ்விதம் பிறந்த குழந்தைக்கு கதாதரர் என்றே பெயர் வைக்கப்பட்டது. ராமகிருஷ்ணர், ராமானுஜர் ஆகிய இருவருமே பல குருமார்களிடம் பயின்றனர். ராமானுஜர் முதலில் காஞ்சிபுரத்தில் யாதவப்பிரகாசர் என்ற குருவிடம் வேதாந்தம் கற்றார். அவர் தீவிரமான அத்வைதி. ராமானுஜரோ தீவிர விஷ்ணு பக்தர். எனவே குருவுக்கும் சீடருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

சாந்தோக்ய உபநிஷதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷணீ - இந்த மந்திரத்திற்கு யாதவப் பிரகாசர், கப்யாஸம் என்பதற்குக் குரங்கின் பின்புறம் என்று கூறப்பட்ட நேரடிப் பொருளைக் கூறி, அந்தப் பொன்னிறமான புருஷனின் கண்கள், குரங்கின் பின்புறத்தைப் போல் சிவந்த இரு தாமரை மலர்களை ஒத்திருந்தன என்று உரை செய்தார். பகவானின் திருக்கண்களுக்கு, குரங்கின் பின்புறத்தையா உவமையாகக் கூறுவது ? அது அபசாரம் என யாதவப் பிரகாசருக்குத் தோன்றவில்லை. ஏனெனில் அத்வைத வேதாந்தத்தின்படி உயர்ந்தது, தாழ்ந்து ஆகிய அனைத்தும் பிரம்மமே! இந்த உவமையைக் கேட்ட ராமானுஜர் பதைபதைத்துப் போனார். பக்தரான அவரது காதுகள் கூசின, கண்களில் நீர் வடிந்தது.; பிறகு குருவின் அனுமதி பெற்று, ராமானுஜர் கப்யாஸம் என்பதை வேறுவிதமாகப் பிரித்து அதற்கு, சூரியனின் கதிர்களால் மலர்ந்த என்று பொருள் கூறினார். அந்த இடத்திற்கு அப்புருஷனின் கண்கள். சூரியனில் உள்ள பொன்னிறமான கதிர்களால் மலர்ந்த தாமரைகள் போல் அழகாக இருந்தன என்று பொருள் கூறினார். உடனே யாதவப்பிரகாசர், நீ கூறுவது நேரடி அர்த்தமல்ல. சுற்றி வளைத்துப் பெறப்பட்ட பொருள் என்றார். இருந்தாலும் அவர், வேதாந்தத்திற்கு விளக்கம் சொல்வதில் ராமானுஜருக்குத் தனித் திறமை இருந்ததை அறிந்தார். பிற்காலத்தில் ராமானுஜர் புகழ்பெற்ற வைஷ்ணவ ஆச்சாரியராகத் தலையெடுத்தார். அப்போது குருவான யாதவப் பிரகாசர் அத்வைதத்தைக் கைவிட்டு, வைஷ்ணவராகி ராமானுஜருக்கே சீடரானார். இது குறித்து ராமகிருஷ்ணர் இவ்விதம் கூறினார் : ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தை ஏற்றுக் கொண்டவர். அவரது குருவோ சுத்த அத்வைதி. அவர்கள் ஒத்துப் போகவில்லை. ஒருவரது வாதத்தை மற்றொருவர் நிராகரிப்பார். அது எப்போதும் நடப்பதுதான். இருப்பினும் குருவிற்குச் சீடன் தம்முடையவனே ஆவான். யாதவப் பிரகாசர் தமது சீடரான ராமானுஜரிடமிருந்து பாடம் கற்றது போலவே, அத்வைத குருவான தோதா புரியும் தமது சீடரான ராமகிருஷ்ணரிடமிருந்து பலவற்றைக் கற்றார். தோதாபுரி ஆதிபராசக்தியை ஏற்றுக் கொள்ளவில்லை. காளிதேவியின் சிலை மேல் ராமகிருஷ்ணருக்கு இருந்த பக்தியை அவர் மூடநம்பிக்கை என்று கருதினார். குருதேவர் ராமகிருஷ்ணர் காலையிலும் மாலையிலும் கைகளைத் தட்டிக் கொண்டு, இறைவனின் திரு நாமங்களை உரக்கச் சொல்வார். அப்போது தோதாபுரி, கைகளால் தட்டி சப்பாத்தி தட்டுகிறாயா, என்ன? என்று அவரைக் கேலி செய்வார். காளி தேவி தோதாபுரிக்குப் பாடம் கற்பிக்கத் திருவுளம் கொண்டாள். தோதாபுரிக்குக் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இறுதியில் அவர் கங்கையில் மூழ்கி உயிரை விடத் தீர்மானித்தார். ஆனால் என்ன அதிசயம் ! அவர் கங்கையில் இறங்கி மூழ்குவதற்குப் போதுமான நீரில்லை !

உடனே தோதாபுரி, இது எல்லாம் வல்ல மகாமாயையின் திருவிளையாடல் ! என உணர்ந்து சக்தியை ஏற்றுக் கொண்டார். காளி கோயிலுக்குச் சென்று வணங்கினார். இவ்விதம் குருவான தோதாபுரி, சீடரான ராமகிருஷ்ணரிடமிருந்து பிரம்மமும் சக்தியும் ஒன்றே ! என்பதை உணர்ந்தார். ராமகிருஷ்ணர், ராமானுஜர் ஆகிய இருவருமே விக்கிரக ஆராதனையை மிகவும் ஆதரித்தவர்கள். ராமானுஜர் நிலை நாட்டிய வைஷ்ணவ சமயத்தில் விஷ்ணுவின் விக்கிரக வழிபாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருமலை ஸ்ரீநிவாசர் போன்ற மூர்த்தியர் வைகுண்டத்ததிலிருந்து நேரடியாக பூலோகத்திற்கு வந்திறங்கிய அர்ச்சாவதாரங்களாகப் போற்றப்படுகின்றனர். ஓர் இறைவனின் அவதாரம் மறைந்த பிறகு, அவரது சக்தியும் அருளும் திவ்ய மூர்த்தங்கள் மூலம் தேக்கி வைக்கப்பட்டு, பின் வரும் தலைமுறைகளுக்கு சேர்க்கப்படுகின்றன. 19-ஆம் நூற்றாண்டின் இந்து விக்கிரக ஆராதனையை வெளி நாட்டினர் இகழ்ந்தனர். அப்போது ராமகிருஷ்ணரோ விக்கிரக வழிபாட்டின் பயனை விளக்கி மூர்த்தங்கள் வெறும் சிலைகள் அல்ல; அவை ஆன்மிக விழிப்புணர்வுடைய இறைவனின் திருவுருவங்களே என்று நிலைநாட்டினார். மக்களிடம் பக்தியைப் பரப்புவதே சாதி வேற்றுமைகளைக் களைவதற்கான வழி என்று ராமகிருஷ்ணர் கூறினார். உண்மையான பக்தர்கள் சாதி வேற்றுமைகளைப் பார்ப்பதில்லை. வைஷ்ணவத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ராமானுஜர் முக்கியமான இடத்தை அளித்தார். ராமானுஜரின் காலத்திற்குப் பிறகே, ஆன்மிகத்தின் கதவு அனைவருக்கும் திறக்கப்பட்டது என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar