ஓர் ஊரில் அம்மா, அப்பா, இரண்டு குழந்தைகள் என ஒரு நடுத்தரக் குடும்பம் வசித்து வந்தது. கணவனும், மனைவியும் அமைதியானவர்கள்.ஆனால் இரு குழந்தைகளும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள். ஆரம்பத்தில் இயல்பாகவே குழந்தைப் பருவத்திற்கே உரியதுபோல் ஒரு குழந்தைக்கு ஏதாவது கொடுத்தால் இன்னொன்று அடம் பிடிப்பது. சின்னச் சின்ன சண்டைகள் போடுவது இப்படித்தான் இருந்தார்கள். ஆனால் போகப்போக அவர்களின் முரட்டு குணம் மோசமாகிக் கொண்டே போனது. அதனால் பெற்றோர்கள் மிகவும் கவலைப்பட்டனர். எவ்வளவோ முயற்சித்தும் அவர்களது குணத்தை மாற்ற முடியவில்லை. இப்படியே விட்டால் வளர்ந்ததும் மிகவும் தீயவர்கள் ஆகிவிடலாம், இதற்கு என்ன செய்வது? என்று வருந்தினர். அந்த சமயத்தில் அவர்கள் ஊருக்கு வந்தார் ஒரு மகான். எப்படிப்பட்ட பிரச்சனைக்கும் அவர் தீர்வு சொன்னதால் மக்கள் அவரை மரியாதையாக நடத்தினர். ஒருநாள் இந்த அப்பாவும் அந்த மகானைப் போய்ப் பார்த்தார். தன் குழந்தைகளைப் பற்றி சொன்னார். பொறுமையாகக் கேட்ட மகான் ஒரு மந்திரத்தை அவருக்குக் கற்றுத் தந்தார். அதன்படி அந்த அப்பா செய்ததில் அந்தக் குழந்தைகளின் சண்டைபோடும் குணம் மாறிப்போனது. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து செய்ல்படுவதுதான் சிறப்பானது என்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அப்படி என்ன மந்திரம் சொல்லித் தந்தார் அந்த மகான்? அதுதான் கடுகு கம்பு மந்திரம்.
குழந்தைகள் சண்டைபோட ஆரம்பிக்கும் சமயத்தில் அப்பா வீட்டின் சமையலறைக்குப் போவார். அங்கே இருந்து கொஞ்சம் கடுகையும், கொஞ்சம் கம்பு தானியத்தையும் எடுப்பார். இரண்டையும் ஒன்றாகக் கலப்பார். மும்முரமாக சண்டைக்குத் தயாராகும் தன் குழந்தைகளைக் கூப்பிடுவார். அவர்கள் இருவரிடமும் கடுகு, கம்பு கலவையைத் தருவார். குழந்தைகளே, இதில் உள்ள கடுகையும் கம்பையும் தனித்தனியாக பிரித்து எடுத்துக் கொண்டு வாருங்கள்! உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன் என்று அன்பாக சொல்லுவார். அவ்வளவு தான், சண்டை போடுவதை மறந்து குழந்தைகள் அப்பா சொன்ன வேலையை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அடிக்கடி இப்படிச் செய்ததில் அந்தக் குழந்தைகளுக்கு அதுவே பிடித்தமான விளையாட்டாகிப் போனது. சண்டைபோடும் குணமே மாறி ஒருவர் மேல் மற்றவர் அன்புகாட்ட ஆரம்பித்துவிட்டார்கள். எப்படி நடந்தது இந்த அதிசயம்? இதில் மாய மந்திரம் எல்லாம் எதுவும் இல்லை. குழந்தைகளின் மனதை திசை திருப்பும் வழிதான் அது. சண்டை போடும் எண்ணத்தில் இருந்து கவனம் திசை திரும்பியதும் மனம் புதிய விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டது. நம்முடைய மனமும் அப்படித்தான், தேவையற்ற எதிர்மறை எண்ணம் எதையாவது சுமந்து கொண்டு அதன் பாதையிலேயே போய்க் கொண்டு இருக்கும். அந்த வேண்டாத சுமையை இறக்கிவிட்டால் நேர்மறை சிந்தனை மனதை வழிநடத்த ஆரம்பித்துவிடும். மனம் குழப்பம் இல்லாமல் வெற்றிப் பாதை ஒன்றில் செல்லத் தொடங்கிவிடும். அதுவே நமக்கு போதுமானது.