ஒரு ஊரில் கணேஷ் என்ற பூ வியாபாரி இருந்தான். ஊரில் கடுமையான பனிக்காலம் நிலவியது. தாவரங்கள் அனைத்தும் பட்டுப் போயி காணப்பட்டன. ஆனால் கணேஷின் குளத்தில் மட்டும் ஒரே ஒரு வெள்ளைத் தாமரை பூத்திருந்தது. பூக்களே இல்லாத இந்தப் பனிக்காலத்தில் இறைவன் எனக்காகவே இந்த மலரைத் தந்திருக்கிறான். இதைக் கொண்டு என்ன செய்யலாம்? என்று அவன் யோசித்தான். இதை அரசரிடம் கொடுத்தால் நல்ல பரிசு கிடைக்கும் என்று எண்ணி அவன் அரண்மனைக்குப் புறப்பட்டான். கணேஷ் அரண்மனைவாயிலில் ஒரு பணக்காரரைப் பார்த்தான். அவர், பூ அழகாக இருக்கிறதே ! புத்த பகவான் நம்ம ஊருக்கு வந்திருக்கிறார். இதை அவருக்கு அளிக்க விரும்புகிறேன். என்ன விலை ? என்று கேட்டார். ஒரு பவுன் காசு என்று கணேஷ் சொன்னான். பணக்காரர் தன் பையிலிருந்து காசைத் தேடி எடுப்பதற்குள் அங்கே அரசர் வந்தார். அவரும் புத்தரை தரிசிப்பதற்காகப் போய்க் கொண்டிருந்தார். அட, பூ மிக அழகாக இருக்கிறதே! புத்தருக்காக இதை வாங்குகிறேன் ! என்ன விலை? அரசர் கேட்டார். ஒரு பவுன் காசுக்கு இதை விற்றாகிவிட்டது அரசே என்று வியாபாரி பதிலளித்தான். நான் பத்து பவுன் காசுகள் தருகிறேன் ! எனக்குக் கொடு ! அரசர் அதிகாரத்துடன் அவசரப்படுத்தினார். நான் இருபது காசுகள் தருகிறேன் ! பணக்காரன் கூச்சலிட்டான்.
அத்தாமரையை வாங்குவதற்கு இருவரும் போட்டி போட்டனர். விலை ஏறிக் கொண்டே போனது ! போட்டியைப் பார்த்து கணேஷ் அதிசயித்து நின்றான். புத்தருக்கு வழங்குவதற்காக இவர்கள் இப்படிப் போட்டி போடுகின்றனர். நானே இதை புத்தரிடம் அளித்தால், அவர் இன்னும் எவ்வளவு அதிகம் தருவார் என்று யோசித்தான். பிறகு கணேஷ் அவர்களை வணங்கி, இருவரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் பூவை விற்பதாக இல்லை என்று சொல்லிவிட்டு பூவை எடுத்துக் கொண்டு புத்தர் தங்கியிருந்த சோலையை நோக்கி ஓடினான். தெய்வீக ஒளி வீச விழிகளில் கருணை பொங்க, புத்தர் அமர்ந்திருந்தார். கணேஷ் அவரைப் பார்த்தான். அவருடைய அமைதியான உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சில விநாடிகள் தன்னை மறந்தான். புத்தரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி அந்த வெள்ளைத் தாமரையை அவருக்கு அர்ப்பணித்தான். என்ன வேண்டும் உனக்கு ? புன்னகையுடன் புத்தர் கேட்டார். தங்கள் பாத தூளியைத் தரிசிக்கும் உறவைத்தவிர வேறொன்றும் வேண்டாம், ஐயனே ! அமைதியாகச் சொன்னான் கணேஷ்.