கும்பகோணம் மகாமக குளத்தின் அருகே மளிகைக்கடை நடத்தியவர் குமரேசன் செட்டியார். அவர் மனைவி சிவகாமி ஆச்சி. கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து வந்தார். குழந்தையில்லாத அத்தம்பதியர் ஒருசிறுவனைத் தத்தெடுத்து வளர்த்தனர். சிவ சிவ என்ற நாமம் தவிர வேறு ஒன்றும் அறியாதவர் செட்டியார். அமர்ந்தாலும், எழுந்தாலும் சிவநாமத்தைச் சொல்லாமல் இருந்ததில்லை. கணவனும், மனைவியும் தங்கள் மாட்டு வண்டியில், தினமும் காவிரியாற்றில் நீராடி விட்டு, சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவர். மேலும், சிவனடியார்களுக்கு அன்னமிடுவதை அன்றாடக்கடமையாகச் செய்து வந்தனர். அடியவர்களை வரவேற்று கால் கழுவி சந்தனம், குங்குமம் கொடுத்து சாப்பாடு கூடத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். வரும் அடியவருக்கு என்ன காய்கறி பிடிக்குமோ அதையே ஆச்சி சமைத்துப்போடுவார். இதற்காக வேலையாட்கள் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. ஒருநாள் நல்ல மழை... வானம் மூடிக் கிடந்தது. வாசல் பக்கம் செட்டியார் எட்டிப்பார்த்தார். மழை பெய்ததால், அடியவர் ஒருவர் கூட அன்று வரவில்லை. செட்டியார் குடையை எடுத்துக் கொண்டு மகாமகக் குளக்கரைக்கு புறப்பட்டார். ஒரு மண்டபத்தில் சாமியார் ஒருவர், மேனி முழுவதும் திருநீறு பூசி,தேவாரம் பாடிக் கொண்டுஇருந்தார். அவரை தங்கள் வீட்டுக்கு சாப்பிடும்படி அழைத்து வந்தார்.
ஆச்சி ஓடி வந்து, சாமியாரை வணங்கினார். சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்றார். அவரிடம், ஐயா! உங்களுக்கு எந்தக் காய் பிடிக்கும் என்று சொன்னால் எனக்கு சமையலைத் தொடங்க வசதியாக இருக்கும் என்றார். உடனே சாமியார் காய்கறி பயிரிட்டுஇருந்த இடத்தை நோக்கி வேகமாக நடந்தார். தம்பதியரும் பின்னே சென்றனர். அங்கே, நிறைய முளைக்கீரை வளர்ந்திருந்தது. கீரைத் தண்டு சாம்பாரும், முளைக் கீரை கூட்டும் கூட எனக்குப் போதும், என்றார் அவர். செட்டியாரும் தாமதிக்காமல் முளைக்கீரையைப் பறிக்க ஆரம்பித்தார். ஒருவர் மட்டும் பறித்தால் நேராகும் என எண்ணி, சாமியாரும் கீரையைப் பறித்து உதவி செய்தார். சமைக்கும் போது ஆச்சி, செட்டியார் பறித்த கீரையையும், சாமியார் பறித்த கீரையையும் தனித்தனியாக வேக வைக்கத் தொடங்கினார். சாமியார் பறித்த கீரையை தனியாக எடுத்துக் கொண்டு பூஜையறையில் சுவாமிக்கு நிவேதனம் செய்தார். இதைக் கண்டதும் சாமியாருக்கு பெருமை பிடிபடவில்லை. அடியவரான தன் கை பட்ட கீரைக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்பதால், பூஜையில் வைத்துதருவதாக எண்ணிக் கொண்டார்.
சாப்பிட ஆரம்பித்ததும், ஆச்சியிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார். ஆச்சி அவரிடம், ஐயா! எனது கணவர் சிவநாமத்தைச் சொல்லிக் கொண்டே பறித்ததால் முளைக்கீரை சிவக்கீரை ஆகி விட்டது. அதனால், அதை பூஜையில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லாமல் ஆகிவிட்டது. ஆனால், நீங்களோ அமைதியாகக் கீரையைப் பறித்து கொடுத்தீர்கள். அதனால், அதை சுவாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டியதாகி விட்டது, என்றார். இதைக் கேட்ட சாமியாருக்கு, தன் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. அவர்களின் சிவபக்தியின் முன் தனது துறவறம் போலியானது என்று எண்ணி வெட்கிப் போய் விட்டார். ஒருமுறை சிவராத்திரியன்று அந்த தெய்வத்தம்பதியர் கும்பேஸ்வரைத் தரிசித்துவிட்டு வீட்டிற்கு வந்தனர். பிரசாதத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சிவகாமி ஆச்சி, பூஜை அறையிலேயே சிவசிவ என்ற சொல்லியபடியே உயிர் விட்டார். மனைவி மேல் உயிரையே வைத்திருந்த செட்டியாரும் சிவகாமி என்று கூவியபடியே சாய்ந்து கண்மூடினார். சிவராத்திரி நாளில் தம்பதியர் இருவரும் ஒரே நேரத்தில் சிவனடி சேர்ந்ததை எண்ணி அனைவரும் அதிசயித்து நின்றனர்.1938ல் கும்பகோணத்தில் வாழ்ந்த இத்தம்பதியர் செய்த அன்னதானத்தை காஞ்சிப்பெரியவர் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.