துறவி ஒருவர், புத்த மடாலயத்தில் தங்கி இருந்தார். அங்கு மூன்று புத்தர் சிலைகள் இருந்தன. இரவு நேரம் என்பதால் குளிர் அதிகமாக இருந்தது. துறவியால் குளிரைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவர் கண்களில் அங்கே இருந்த புத்தரின் மரச்சிலைகள் பட்டன. அதில் ஒரு மரச்சிலையை எடுத்து, தீ மூட்டி குளிர் காயத் துவங்கினார். தீ ஜுவாலையின் ஒளியைக் கண்ட மடாலய பூசாரி, ஓடோடி வந்தார். பதறிப் போனார். நீ புத்தமத துறவி என்பதால் தான் உனக்கு இங்கே தங்க இடம் கொடுத்தேன். ஆனால் நீ நாத்திகனா ? புத்தரின் சிலையை எரித்து விட்டாயே என்று திட்டினார். அப்போதும் அந்தத் துறவி, சிலையின் எரிந்த சாம்பலில் ஏதோ தோண்டிக் கொண்டிருந்தார். என்ன தேடுகிறாய் ? சாம்பலில் புத்தரின் எலும்புகள் இருக்கிறதா என்று பார்க்கிறேன் ! பூசாரிக்குக் கடும் கோபம் வந்து விட்டது. முட்டாளே, லூஸா நீ ? மரச்சிலையில் எங்கேயாவது எலும்பு இருக்குமா ? அப்படியானால் மற்ற புத்தர் சிலைகளையும் இங்கே கொண்டு வா. குளிர் அதிகமாகிவிட்டது. அதனால் என் உள்ளே இருக்கும் பகவான் குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்றார் துறவி. பூசாரிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உடனே அந்தத் துறவியைத் துரத்தி விட்டார்.
மறுநாள் காலை, பூசாரி, மடாலயத்தின் வெளியே வந்த போது, அந்தத் துறவி, சாலை ஓரத்தில் இருந்த வழிகாட்டிக் கல்லின் மீது மலர்களை வைத்துப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். பூசாரிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பைத்தியமாய்யா நீ ? இரவு என்னடாவென்றால் புத்தர் சிலையை எரிக்கிறாய். ஆனால் இப்போதோ வழிகாட்டிக் கல்லை வழிபடுகிறாய் என்றார். புன்னகைத்த துறவி, எங்கே தலை சாய்க்கப்படுகிறதோ அங்கே கடவுளும் நியமனம் ஆகிறார். என்றார். என்றைக்கு உண்மையான பிரார்த்திக்கும் கலை உங்களுக்கு வந்துவிடுகிறதோ, அன்றைக்கு நீங்கள் எந்தக் கோயிலையும் தேடப் போவதில்லை. அன்றைக்கு நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, கோயிலும் அங்கேயே இருக்கும். உங்கள் கோயில், உங்களைச் சுற்றியே சுழன்று கொண்டேயிருக்கும் அது உங்களுக்கான ஒளிமண்டலமாக மாறிவிடும். எங்கெங்கே உண்மையான பக்தன், கால் பதிக்கிறானோ அங்கே ஓர் இறை இல்லம் உருப்பெற்றுவிடுகிறது. மனதுக்குள் கடவுள் இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தால். சர்வ வல்லமை பெற்றவர்கள் ஆகிவிடுவோம்.