கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்! துருபதன் மகள் திரௌபதி. ஜனகன் மகள் ஜானகி. பாஞ்சாலன் மகள் பாஞ்சாலி என்பதைப் போல, கேகய மன்னன் மகள் என்பதால் கைகேயி என்று பெயரே தவிர, கைகேயிக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுவல்ல. கேகய தேசத்தின் மன்னர் அச்வபதி. தலைசிறந்த தர்மவான். எல்லாக் கலைகளிலும் மிகுந்த அனுபவசாலி. வைச்வானர என்பது வித்தைகளில் மிகவும் தேர்ந்த வித்தை. அதில் அவர் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் சரஸ்வதி தேவியை உபாசிக்கும் பக்தர். ஒரு நாள் பூஜையை முடித்து எழுந்தார் மன்னர் அச்வபதி. எதிர்பாராத விதமாகக் கையில் வீணையுடன் பால வடிவத்தில் சரஸ்வதிதேவி தரிசனம் தந்தாள். ஆனந்தத்தின் எல்லையை அடைந்த மன்னர், அம்பிகையை வலம் வந்து துதித்தார். தன் உள்ளத்தில் இருந்ததை வெளிப்படுத்தினார். அம்மா! உனக்குச் சமமான குழந்தையை எனக்குத் தந்தருள வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்! என வேண்டினார்.
சிரித்தாள் சரஸ்வதி. எனக்குச் சமமாகவா.. சரிதான்! நானேதான் உனக்குப் பெண்ணாக அவதரிக்க வேண்டும். நீ ஒன்று செய். ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று ஸாரஸ்வத இஷ்டீ என்ற யாகம் செய். நான் அந்த யாகத் தீயில் தோன்றி, உனது வீட்டில் உன் குழந்தையாகவே வளர்வேன்! என்று சொல்லிவிட்டு மறைந்தாள் சரஸ்வதி. ஐப்பசி மாத பவுர்ணமியில் சரஸ்வதி சொன்ன ஸாரஸ்வத இஷ்டீ யாகத்தை முறைப்படி செய்தார் அச்வபதி. கௌதம முனிவர், முனிவர்களுக்குத் தலைவராக இருந்து யாகத்தை நடத்தினார். மாலை நேரம். யாக அக்னியில் இருந்து சரஸ்வதிதேவி வெளிப்பட்டாள். தங்க மயமான பாத்திரத்தில் நிறைந்திருந்த அவிர்பாகத்தை (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) சுட்டிக் காட்டியபடி, அச்வபதி மன்னா! உனது அபரிமிதமான அன்பின் காரணமாக இந்த அவிர்பாகம் மிகவும் இனிமையாக உள்ளது. இதை நான் மட்டும் ஏற்றால் சரியாகாது. இதோ, இங்குள்ள தேவர்கள் அனைவருக்கும் இந்த அவிர்பாகத்தைப் பங்கிட்டுக் கொடு! அப்போதுதான் எனக்கு திருப்தி <உண்டாகும்! என்றாள்.
அவிர்பாகம் அங்கிருந்த தேவர்களுக்கெல்லாம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. தங்களுக்குக் கிடைத்த அவிர்பாகத்தை (சாதத்தை) சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்தார்கள் தேவர்கள். இது ஏன்? சிவபெருமானுக்கு அவிர்பாகம் தராமல் அவரை விலக்கிவிட்டு யாகம் செய்த தட்சனும், அதில் கலந்து கொண்ட தேவர்களும் அவமானப்பட்டு, சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நேரம் அது. எனவே, தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பாவம் தீர்வதற்கு அச்வபதி மன்னர் தங்களுக்குத் தந்த அவிர்பாகத்தை சிவபெருமானுக்குச் சமர்ப்பித்தார்கள். ஐப்பசி மாதத்தில் சிவ பெருமானுக்கு நாம் செய்யும் அன்னாபிஷேகத்துக்கு இதுவே மூலாதாரமாக அமைந்துள்ளது. யாகத்தில் அச்வபதி மன்னருக்கு தரிசனம் தந்த தேவி, அவரது பிரார்த்தனைக்கு இணங்கி ஒரு மானிடப் பெண்ணாக, கேகய ராஜனான அச்வபதிக்கு மகளாக அவரிடம் வந்தாள். இவளே கைகேயி. இவளுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சரஸ்வதி. நாளடைவில், தன் தந்தை பார்த்து வந்த வேலையை தானே பார்க்க ஆரம்பித்தாள் சரஸ்வதி. அது என்ன வேலை? அச்வபதி மன்னர் வேதத்திலும் கலைகளிலு<ம் மிகுந்த திறமைசாலி என்பதால், போன ஜென்மத்தின் பலாபலன்களைக் கண்டறியும் சக்தி அவருக்கு உண்டு. பிரச்னை என்று தன்னை நாடி வருபவர்களுக்கு, அவரவர் பூர்வ ஜென்மத்தையும், அதனால் ஏற்படும் சுக துக்கங்களையும் <உணர்ந்து இன்னது செய்யலாம், இன்னது செய்யக் கூடாது என்று சொல்லி நல்வழி காட்டுவார். இதுதான் வைச்வானர வித்தை. அதனால் அரசர்கள் பலர் வந்து தங்கள் அல்லல்களைத் தீர்த்துக் கொண்டு போவார்கள்.
இந்த வேலையைத்தான் சரஸ்வதியும் செய்ய ஆரம்பித்தாள். அடுத்தவர் குறை தீர்க்கும் பணியை சரஸ்வதி செய்யட்டும். அவளைத் தேடி அயோத்தி மன்னர் வரப் போகிறார். நாம் அவரிடம் போகலாம். அயோத்தி மன்னர் தசரதருக்குக் குழந்தை இல்லை, ம்...! இதற்கு என்ன செய்யலாம்? சரி! நாமும் கேகய மன்னர் அச்வபதியிடம் போய் வழி கேட்க வேண்டியதுதான்! என்று தீர்மானித்த தசரதர், கேகய நாட்டுக்குக் கிளம்பினார். தசரதரை வரவேற்றாள் சரஸ்வதி. மன்னா! என்ன காரியமாக வந்தீர்கள்? என்றாள். பெண்ணே! மழலைச் செல்வம் இல்லாத மனக்குறைதான் எனக்கு. அதற்காக அச்வபதியைப் பார்க்க வந்தேன் என்றார் தசரதர்.
சரஸ்வதி வழி சொன்னாள். அதில் தசரதரின் பூர்வ ஜென்ம வரலாறே இருந்தது. தசரதர் திகைத்தார். மன்னா! போன பிறவியில் நீங்கள், உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானாக இருந்தீர்கள். காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என மூன்று மனைவிகள் இருந்தார்கள். நீங்கள் இந்தப் பிறவியில் தசரதராகப் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் மூன்று மனைவியரும் இந்தப் பிறவியிலும் உங்களை மணந்து கொள்வதற்காக அரசிகளாகப் பிறந்திருக்கிறார்கள். அதில் காயத்ரிதான் உங்கள் முதல் மனைவி கௌசல்யாதேவி. சாவித்ரி. சுமித்ராதேவி. நான் சரஸ்வதி. நீங்கள் என்னையும் மணம் செய்து கொண்டால், உங்கள் தோஷங்கள் நீங்கும். மேலும், சாட்சாத் மஹாவிஷ்ணுவே <உங்கள் பரம்பரை பூஜா விக்கிரமாக ஸ்ரீரங்கநாதர் என்ற பெயரில் விளங்கி வருகிறார். அவரை பூஜை செய்யுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். திருமணம் குறித்து என் தந்தையிடம் பேசுங்கள்! என்றாள். மனக் கவலை தீர மருந்தைத் தெரிந்து கொண்ட தசரதர், அச்வபதி மன்னரைச் சந்தித்தார். நடந்ததை விவரித்தார். அச்வபதியும் ஒப்புக் கொண்டார். சரஸ்வதிக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தது. இந்த சரஸ்வதி, கேகய இளவரசி என்பதால் கைகேயி என அழைக்கப்பட்டாள்.