வயதானதால் கூனியான கிழவி த்ரிவக்ரை, கூடை நிறையப் பூக்கள் மற்றும் அரைத்த சந்தனத்துடன் தினமும் அதிகாலை நேரத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு மதுரா நகரில் உள்ள அரண்மனைக்குப் புறப்படுவாள். இது அவளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பணி! அரண்மனையை அடைந்ததும், மகாராஜா கம்சனிடம் பூக்களையும் சந்தனத்தையும் கொடுத்துவிட்டு, வீடு திரும்பி வந்து மறுபடியும் கதவை மூடிக் கொள்வாள். அதன் பின் கதவு திறக்காது. எத்தனையோ முறை விளையாட்டாகச் சிறுவர்களும், உண்மையாகவே கம்சனின் காவலர்களும் தட்டிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், கதவு திறந்ததில்லை! அந்த வீட்டுக்குள் அப்படி என்ன இருக்கிறது? தினமும் கிழவிக்குப் பூக்களும் சந்தனமும் எப்படி கிடைக்கிறது? என்பது எவருக்கும் தெரியாத ரகசியம். பலரும் த்ரிவக்ரையிடம் கேட்க முயன்றனர். எவரையும் அவள் ஒரு பொருட்டாக மதிக்காததால், அவள் எவரது கேள்விக்கும் பதில் சொன்னதில்லை. அவ்வளவு ஏன்... மகாராஜா கம்சனே கேள்வி கேட்டபோதும் அவள் பதில் சொன்னதில்லை. இவ்வளவு வாசனை நிறைந்த மலர்களும் கமகமக்கும் சந்தனமும் வேறு எங்கும் கிடைக்காததால், கம்சனும் அதன்பின் அவளைத் தொந்தரவு செய்வதில்லை.
அந்தக் கிழவியின் ஆயுள் குறித்தும் மதுரா மக்களிடையே மிகுந்த கருத்து வேறுபாடுகள் உண்டு. தங்களுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே அவள் கிழவியாக இருப்பதாகவும், நெடுங்காலமாக இப்படி அரண்மனைக்குச் சென்று சேவை செய்து வரும் அவள் வயது எப்படியும் ஆயிரத்தைத் தாண்டும் என்றும் மதுராவில் உள்ள பெரியவர்கள் சொல்வார்கள். த்ரிவக்ரையை பொதுமக்கள் எவரும் அலட்சியம் செய்வதில்லை. அவளும் எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பணியைத் தொடர்ந்தாள். யாராலும் அசைக்கக்கூட முடியாத சிவ தனுசை, சிறுவன் கிருஷ்ணன் முறித்து விட்டான்... தன்னைக் கொல்ல வந்த யானையைப் பந்தாடி விட்டான்... தாக்க வந்த கம்சனின் வீரர்களை கிருஷ்ணனின் சகோதரனான பலராமன், பரலோகத்துக்கே அனுப்பிவிட்டான் என்கிற செய்திகள் காட்டுத்தீ போல மதுரா நகரில் பரவின. இப்படிப்பட்ட வீரச் சிறுவர்களைப் பார்க்கும் ஆவலில் மக்கள் அவர்களைத் தேடி வந்தனர். அப்போதும் மதுரா நகரின் எல்லா வீட்டுக் கதவுகளும் திறந்து கிடக்க... மூடியிருந்த ஒரே வீடு த்ரிவக்ரையினுடையது மட்டுமே. கிருஷ்ணா... நேராக அரண்மனைக்குப் போய் நம்மை அழைத்த கம்சனின் கதையை முடிக்கலாம்! என்று அழைத்தான் பலராமன்.
அதைவிட நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமை ஒன்று இருக்கிறது அண்ணா. நீங்கள் செய்த பாவத்துக்கான பரிகாரமும் இதில் அடங்கி இருப்பதால், தாங்களும் கண்டிப்பாக என்னுடன் வர வேண்டும்! என்று ஆரம்பித்தான் கண்ணன். பாவமா? நான் அப்படி எதையும் செய்ததாக நினைவில்லையே கண்ணா! இன்னும் சொல்லப் போனால் இதுவரை இந்த மதுரா நகருக்கே நான் வந்ததில்லை. பின் எப்படி பாவம் செய்திருக்க முடியும்! என்று ஆச்சரியத்துடன் கேட்டான் பலராமன். அண்ணா, இது விதியின் விளையாட்டு! என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். அங்கு வந்தால் உங்களுக்கே புரியும்! - பதிலளித்து நகர ஆரம்பித்தான் கண்ணன். பலராமனும் பின்தொடர்ந்தான். வழிநெடுகத் தங்களைப் பார்த்து உற்சாகமாகக் குரல் கொடுத்த மக்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டே நடந்தான் கண்ணன். அந்தத் தெருவில் ஒரே ஒரு வீடு மட்டும் மூடப்பட்டிருந்தது. அதுதான் த்ரிவக்ரையின் வீடு. மனதுக்குள் காதல் மணியடித்தது. அந்த வீட்டை நெருங்கி, அதன் கதவைத் தட்ட முயன்றான் கண்ணன். அவர்களைச் சூழ்ந்து நின்ற மக்கள் கூட்டம் பக்கென்று சிரித்தனர். கண்ணா... இது வீண் வேலை! அது யாருக்காகவும் திறக்காத கதவு. சிவ தனுசு போல் உன்னால் உடைக்கவும் முடியாது! என்று குறும்புக்கார இளம்பெண் ஒருத்தி சொன்னாள். இந்த வீட்டில் இருப்பவரிடம் பாவ மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறான் கண்ணன்! என நினைத்த பலராமன், வேகமாக முன்வந்து அந்தக் கதவைத் தட்டினான் அப்படியும் அந்தக் கதவு திறக்கவில்லை.
கோபப்பட்ட பலராமன், பலம் கொண்ட மட்டும் தட்டிப் பார்த்தான். பலனில்லை. ஆவேசத்தில் கதவை எட்டி உதைத்தான். திறக்கவில்லை. கடைசியாக, கதவை உடைக்க முயன்ற பலராமனைத் தடுத்தான் கண்ணன். அண்ணா, இது காதல் கதவு. தட்டினால் திறக்காது. தொட்டால்தான் திறக்கும்! என்றவாறு கதவின் மீது ஆசையுடன் கை வைத்தான் கண்ணன். மெள்ளத் திறந்தது கதவு. நீர் நிறைந்த கண்களுடன் அவர்களை வரவேற்றாள் த்ரிவக்ரை. ஊர்மக்கள் திறந்த வாய் மூடாமல் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க... கண்ணனும் பலராமனும் உள்ளே நுழைந்ததும் கதவு மறுபடியும் மூடிக் கொண்டது. வருடக் கணக்கில் காக்க வைத்து விட்டேனா?! என்று குறும்புடன் சிரித்தான் கண்ணன். யார் இது? என்று தெரியாமல் விழித்தான் பலராமன். ராமா! உன் காதலுக்காக இன்னும் எத்தனை யுகங்கள் ஆனாலும் சுகமாகக் காத்திருப்பேன்.. ஒரு தவம் போல் பார்த்திருப்பேன்! என்று த்ரிவக்ரை சொன்னதும் பலராமனுக்குப் பளிச்சென்று விஷயம் புரிந்தது. கண்ணா...! இவள் ராவணன் சகோதரி சூர்ப்பணகையா! ராம யுகத்தில் இருந்து உன் காதலுக்காகக் காத்திருக்கிறாளா? என்றபடி த்ரிவக்ரையின் காலடியில் விழுந்தான் பலராமன். பிறகு, என்னை மன்னியுங்கள். உங்கள் காதலைப் புரிந்து கொள்ளாமல், உங்களுக்கு மாபெரும் தண்டனை அளித்து விட்டேன்! என்றவாறு கண்ணீர் சிந்தினான். பலராமனின் கண்ணீர்த் துளிகள் தன் உடலில் பட்டதும், அழகான இளமங்கையின் தோற்றம் பெற்றாள் த்ரிவக்ரை. எழுந்திருங்கள் லட்சுமணா... நான் ராட்சத குலத்தில் பிறந்ததால், காதலை வெளிப்படுத்தத் தெரியாமல் தவறு இழைத்து விட்டேன். தவறு என்னுடையதுதான்! என்றாள் த்ரிவக்ரை.
கம்சனுக்கு மட்டும்தானா... எனக்கு மலர்களும் சந்தனமும் கிடையாதா? என்று கண்ணன் ஆவலோடு கேட்டான். அதற்காகத்தானே காத்திருக்கிறேன்! என்றவள் கைகளை விரித்து, ராம்...ராம்... என்று சொன்னாள். உடனே வானில் இருந்து பூமாரி பொழிந்தது. அந்த யுகத்தில் நான் ராமனாக அவதாரம் எடுத்ததால், சீதையைத் தவிர வேறு எவரையும் மனதால்கூட நினைக்க முடியாத நிலை. இப்போது நான் மனிதனும் கடவுளும் கலந்த அவதாரம். அதனால் என்னை கண்ணா என்றே நீ அழைக்கலாம்! நீங்கள் கண்ணனாகவோ, பாற்கடலில் வாசம் செய்யும் பரந்தாமனாகவோ இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை வனத்தில் நான் சந்தித்த ராமனுக்காகத்தான் காத்திருக்கிறேன்; இனிமேலும் காத்திருப்பேன். உங்களை வேறு பெயர் சொல்லி நான் அழைக்கமாட்டேன்! என்று சொல்லி அன்புடன் சந்தனத்தை எடுத்து கண்ணனின் கன்னத்தில் பூசினாள் த்ரிவக்ரை. அடுத்த கணமே ஸ்ரீராமனாக மாறி நின்றான் கண்ணன். தான் இனியும் அங்கிருப்பது சரியல்ல என்று நினைத்த பலராமன். கண்ணா! நான் ஊரைச் சுற்றிப் பார்க்கிறேன். நீ வந்து சேர்! என்று கிளம்ப முற்பட்டான். லட்சுமணா, எங்கேயும் போகாதே, நானும் சீதையும் இருந்த குடிலை எப்படி கவனமாகக் காவல் காத்தாயோ அதேபோல் இப்போதும் செய்.ஒரு பெண்ணின் காதலை நோகச் செய்த உன் பாவம் தீரும்! என்று கண்ணன் சொல்ல, வெளியே லட்சுமணனாக நின்றான் பலராமன். அவன் பின்னாலேயே கண்ணன் வெளியே வந்தான். என்ன கண்ணா, ராமனாக இருந்த நீ அதற்குள் வந்து விட்டாய்? என்று அவசரம் அவசரமாகக் கேட்ட பலராமன், யதேச்சையாக உள்ளே பார்த்தான்; அதிசயப்பட்டான். அங்கே... ஸ்ரீராமனுக்கு அன்புடன் அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் த்ரிவக்ரை. நல்ல வேலை செய்தாய் கண்ணா... அவள் காதலின் புனிதத்தின் முன் வேறு எப்படியும் தப்பிக்க முடியாது. இனி யுகம் யுகமாக அவள் காதலிக்கட்டும்! என்று சொல்லிவிட்டு பலராமன் நடக்கத் தொடங்கினான். கண்ணனும் தன் கடமை முடிந்த திருப்தியில் கம்சனைப் பார்க்கக் கிளம்பினான்.