ஓர் ஊரில் இரண்டு அந்தண சகோதரர்கள் வசித்து வந்தனர். அதிகமான படிப்பறிவு இல்லாததால் அவர்கள் வறுமையில் வாடினர். இதனால் வெறுப்புற்ற அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். செல்வத்தைத் தேடும் நோக்கத்தோடு மீனவர்களின் குடியிருக்கும் கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்தனர். சகோதரர்கள் இருவரும் பெரிய தலைப்பாகை, சந்தனப் பொட்டு, புத்தகக்கட்டு ஆகியவற்றுடன் சென்று, மீனவர் மத்தியில் தங்களுடைய சோதிடப் புலமையைச் சரமாரியாகக் காட்டினர். பாவம் ! அந்த ஏழை மீனவர் இவர்கள் இருவரையும் சிறந்த சோதிடப் புலிகள் என்று நம்பிக் கொண்டு, தங்கள் வயிற்றையும் வாயையும் கட்டிச் சேர்த்த பணத்தையெல்லாம் இவர்களுக்குக் கொடுத்ததுடன், இவர்களின் வாக்கைத் தெய்வ வாக்காகவும் நம்பத் தலைப்பட்டனர். மந்திரம் என்ன, தந்திரம் என்ன, மாந்திரிகம் என்ன என்று சகோதரர் இருவரும் தடபுடல் செய்து, ஒன்றுமறியாத அப்பாவி மீனவர்களை நன்றாக ஏமாற்றிவிட்டனர். கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே நிரம்பப் பணம் சேர்ந்துவிடவே இருவரும் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். கையில் கொஞ்சம் பணம் அதிகமாகவே, அவற்றையெல்லாம் பொற்காசுகளாக மாற்றி, ஒரு பையில் போட்டுக் கொண்டு நடந்தனர். வழியில் சென்றபோது பணமூட்டையை ஒருவர் மாற்றி ஒருவர் முறைப்படி எடுத்துச் சென்றனர். அவர்களுடைய மனநிலை மிகவும் விசித்திரமாக இருந்தது. எவனிடம் அந்த மூட்டை இருந்ததோ அவனுடைய மனதில், நானே இந்த மொத்தப் பணத்தையும் அடைந்தால் எப்படி இருக்கும் ! அதற்காக என் சகோதரனைக் கொன்று விட்டால் என்ன ? என்ற எண்ணம் தோன்றியது.
உடன் பிறப்புக்களான அந்தச் சகோதரர்கள் ஒருவரை மற்றவர் மிகவும் உள்ளன்போடு நேசித்தனர். அவர்களின் உள்ளத்தில் இருந்த ஆழ்ந்த அன்புதான் அவர்களின் மனதில் பணம் காரணமாகத் தோன்றிய பாவ எண்ணத்தைச் செயற்படுத்த முடியாமல் தடுத்து வந்தது. வீட்டின் அருகில் வந்தபோது ஒரு வேடிக்கை நடந்தது. பணமூட்டை எவன் கையில் இல்லாமலிருந்ததோ, அவன் பணப்பையை வைத்திருந்தவனிடம், அண்ணா ! என்னை மன்னித்துவிடு. என்னிடம் பணப்பை வந்தபோதெல்லாம் உன்னைக் கொன்றுவிட்டு அந்தப் பணம் முழுவதையும் நானே அபகரித்துக் கொள்ள வேண்டும் என்ற கெட்ட எண்ணமே எனக்கு வந்து கொண்டிருந்தது. எனவே அந்தப் பொல்லாத பணம் எனக்கு வேண்டாம். அதை நீயே வைத்துக் கொள் என்றான். அதைக்கேட்ட அண்ணன் தம்பியை நோக்கி, தம்பி ! என் நிலையும் அதுதான். இப்போது கூட பணப்பை என்னிடம் வந்ததும் உன்னைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றியது. இப்படி நம் இருவருடைய சகோதரப் பாசத்தையும் அழிக்கத் தூண்டும் இந்தப் பணப்பையைத் தூக்கித் தூர எறிந்து விடுவோம். அதுதான் சிறந்த வழி என்று கூறினான். வீட்டின் அருகில் குப்பைகளைக் கொட்டும் பெரிய பள்ளம் இருந்தது. அதில்தான் அவர்கள் தினமும் குப்பை கூளங்களைப் போடுவது வழக்கம். இருவருமாகச் சேர்ந்து அந்தப் பணப்பையை அதில் தூக்கி எறிந்து விட்டு, அதைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் நிம்மதியான மனதுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். தூக்கிப் போட்ட பணப்பையை எவர் கண்ணிலும் படாமல் மூடவேண்டுமே என்ற எண்ணங்கூட அவர்களுக்குத் தோன்ற வில்லை. அதே நேரத்தில், ஊரிலிருந்து சிறிது நாள் தங்குவதற்காக வந்திருந்த அவர்களது சகோதரி, வீட்டிற்குள் சமையலுக்குக் காய்கறிகள் நறுக்கி முடித்து, குப்பைகளைத் தூக்கிக் குப்பைமேட்டில் போடுவதற்காக வெளியே சென்றாள். வீட்டின் கொல்லைப்புற வழியாகச் சென்றதனால் சகோதரர் அவளைக் கவனிக்கவில்லை. அங்கே குப்பைமேட்டில் அவள் கண்ட காட்சிதான் என்ன !
ஒரு பை வாய் வழிந்து கிடந்தது. அதில் இருந்து பொற்காசுகள் சிதறிக் கிடந்தன. அவள் பொற்காசுகளைத் திரட்டி அதே பையில் போட்டுக் கட்டித் தன் புடைவைத் தலைப்பில் மறைத்து, இடுப்பில் கட்டிக் கொண்டாள். அன்று இரவே அதை ஒருவருக்கும் தெரியாமல் தன் கணவனிடம் சேர்ப்பித்து விடவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு, அவள் வீட்டிற்குள் வரத் திரும்பினாள். அதே சமயம் அவளுடைய அண்ணன்மார் இருவருள் மூத்தவனின் மனைவி ஏதோ வேலையாக வெளியே வந்தவள், தன் நாத்தி குப்பைமேட்டிற்கு அருகே நின்று கொண்டு ஏதோ செய்வதைக் கவனித்து விட்டாள். எனவே, அது என்ன என்று அறியும் ஆவலில் அவள் அருகே சென்று, இங்கே என்னம்மா செய்து கொண்டிருக்கிறாய் ? என்று கேட்டாள். நாத்தியின் குற்றமுள்ள நெஞ்சு குறு குறுத்தது. அண்ணி பொற்காசுகளைப் பார்த்து விட்டாளோ ! அப்படியானால் இதை அவள் அனைவரிடமும் கூறிவிடுவாளே ! என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியது. கையிலோ காய்கறி நறுக்கும் கூறிய கத்தி இருந்தது. சிறிதும் யோசிக்காமல் அவள் டக்கென்று அதைக் கொண்டு அண்ணியின் வயிற்றில் குத்திவிட்டாள் ! குத்தப்பட்ட மனைவியின் அலறலைக் கேட்டு அவளது கணவன் அந்த இடத்திற்கு ஓடோடி வந்தான். அண்ணனைக் கண்டதும் பயத்தால் நடுநடுங்கிய தங்கை ஓநினைத்தாள்; முடியவில்லை. கால்கள் நகர மறுத்தன. உடனே தன் அண்ணியின் வயிற்றில் பாய்ச்சிய அதே கத்தியால் ஓங்கித் தன் வயிற்றிலும் குத்திக்கொண்டு கீழே சாய்ந்தாள். இந்தக் கோரக்காட்சியைக் கண்ட சகோதரர்களுக்கு ஏற்பட்ட துயரத்தை வர்ணிக்கவே முடியாது. பெரியவன் தம்பியைப் பார்த்து, தம்பி ! பாவத்தால் ஈட்டிய பொருளைத் தூக்கி எறிந்த பிறகும் இத்தனை அனர்த்தங்கள் விளைந்து விட்டனவே ! என்று கூறிக்கொண்டு, தலையில் கை வைத்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான். பாவத்தால் சேர்க்கும் பணம் எந்த நிமிஷமும் எவருக்கும் ஆபத்தையே உண்டாக்கும். ஆகவே நேரிய வழியில் பொருள் சேர்த்து வாழ்வதே நல்வாழ்வாகும். கள் விற்றுக் கலப் பணம் சம்பாதிப்பதை விடக் கற்பூரம் விற்றுக் கால்பணம் சம்பாதிப்பது மேல்.