சென்னை நகரத்தின் சுறுசுறுப்பான பகுதியில், சாலையோர கடை போட்டு செருப்பு வியாபாரம் செய்தான் கந்தசாமி. கடைக்கு வெளியே நின்று கூவிக்கூவி அழைப்பான். கண்டுகொள்வார் யாருமில்லை. வெறுத்துப் போனான். கடை வாடகைக்கு என்ன செய்வதென்ற நிலை. வயிற்றுக்கு கடும் திண்டாட்டம். இனியும் நம்மால் முடியாது என்று தொழிலை விட்டே ஜகா வாங்கி விட்டான். அதே கடையை வாடகைக்கு எடுத்தான் சின்னசாமி. அதே தொழிலைச் செய்ய ஆரம்பித்தான். அவனுக்கும் அதே நிலை தான்! ஆனால், மனம் கலங்கவில்லை. அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டான். காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் இந்தத் தெரு வழியாக வாக்கிங் வரும் முதல் 10 நபர்களுக்கு ஷு இலவசம் என விளம்பரம் செய்தான். அடடா! விடுவார்களா மக்கள்! ஐந்து மணிக்கே எழுந்து வந்து வரிசையில் நின்று விட்டார்கள் பெரும்பாலானவர்கள்.
அவர்களில் முதல் பத்து பேருக்கு இலவசத்தை வழங்கினான். அவர்களை அங்கேயே அணிந்து கொள்ளச் செய்தான். அவர்கள் அதை அணிந்து நடந்ததைக் கண்ட மற்றவர்கள், அதன் கவர்ச்சியில் மயங்கி காசுக்கே வாங்க ஆரம்பித்தார்கள். இலவசமாக எவ்வளவு தொகைக்கு கொடுத்தானோ, அதை இந்த ஷுவில் ஏற்றி விட்டான். விற்பனை சூடு பிடித்தது. கம்பெனிகளுக்கு அதிக அளவில் ஆர்டர் கொடுத்து நிறைய சம்பாதித்து பெரிய ÷ஷாரூம் துவங்கி விட்டான். பார்த்தீர்களா! ஆரம்பத்தில் சில வேலைகள் சிரமமாகத் தான் இருக்கும். அதற்காக. அவற்றில் இருந்து பின் வாங்கி விடக்கூடாது. எதையும் சாதித்து விட வேண்டும் என்ற உறுதி இருந்தால், வாழ்வில் மாபெரும் வெற்றி பெறலாம்.