சித்திரகேது என்ற ராஜாவுக்கு குழந்தை இல்லை. அவரும் பல ராணிகளைக் கல்யாணம் செய்து பார்த்தார். அந்த பாக்கியத்திற்கு வழியே இல்லை. ஒருமுறை ஆங்கிரஸ் முனிவர், ராஜாவின் அவைக்கு வந்தார். அவரிடம் தனது குறையைச் சொன்னார் ராஜா. இந்த முனிவர் யார் தெரியுமா? நவக்கிரக மண்டலத்தில் குரு எனப்படும் பிரகஸ்பதி இருக்கிறாரே! அவரது தந்தை. குழந்தை பாக்கியத்தை தரும் சக்தி குருவுக்கே இருக்கும்போது, அவரது தந்தைக்கு இராதா என்ன! சித்திரகேதுவுக்கு சீக்கிரமே குழந்தை பிறக்கும், என அருள்பாலித்தார். அவரது அருள்வாக்குப்படி, மூத்தராணி கர்ப்பவதியானாள். அழகான ஆண்குழந்தை பிறந்தது. இதைப் பார்த்து மற்ற ராணிகளுக்கு பொறாமை உண்டாகி விட்டது. இந்த மகாராஜா, இனி மூத்த ராணியையும், மகனையும் தான் கவனிப்பார். நம்மைப் புறந் தள்ளி விடுவார் என்று எண்ணினர். இதன் விளைவாக குழந்தையைக் கொன்றுவிட்டனர்.
ராஜாவும், ராணியும் கிடைத்த குழந்தையும் இல்லாமல் போயிற்றே என இன்னும் வருந்தினர். அப்போது, அரண்மனைக்கு வந்த ஆங்கிரஸ் முனிவரிடம், தங்கள் நிலை பற்றி அழுதனர். இறப்பு சகஜம் என்று எடுத்துச் சொல்லியும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. அப்போது அங்கு வந்த நாரதர், குழந்தையை விட்டுப் பிரிந்த ஜீவாத்மாவை வரவழைத்தார். ஆங்கிரஸர் அதனிடம், நீ மீண்டும் குழந்தையைச் சேர். ராஜாவும் அவர் மனைவியும் பிள்ளைப் பாசத்தால் வருந்துகின்றனர், என்றார். அதற்கு ஜீவாத்மா, நான் இப் பிறப்பில் இவர்களுக்கு பிள்ளை, முற்பிறப்பு ஒன்றிலோ இவர்களுக்கு தந்தையாக இருந்தேன். இந்த உறவுகள் எல்லாம் ஜீவன் உடலில் இருக்கும் வரை மட்டுமே! பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுபடவே நான் விரும்புகிறேன். எனவே, இந்த உடலைச் சேர நான் விரும்பவில்லை என்றது. அப்போது தான் ராஜா, வாழ்வின் உண்மைநிலையைப் புரிந்து கொண்டார். அதன்பின் அவர் பாசத்திற்கு இடம் கொடாமல், தாமரை இலை தண்ணீர் போல் வாழ்ந்தார்.