ஒருமுறை பூலோகத்துக்கு வந்தார் நாரதர். அருகிலுள்ள ஊரில் சிவாலயம் ஒன்றிருந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் அங்கு செல்ல முடிவெடுத்தார். கடும் வெயிலடித்தது. எனவே, வண்டியில் சென்றால் நல்லதே என தன் சக்தியால் ஒரு குதிரை வண்டியை வரவழைத்தார். வண்டியோட்டி வண்டியைக் கிளப்பினான். சற்று தூரம் சென்றதும், ஒரு மனிதன் வண்டியை நிறுத்தினான். அவன் ஏழை மட்டுமல்ல, முட்டாளும் கூட. ஆன்மிகமெல்லாம் அவனுக்கு தெரியாது. வண்டியில் இருப்பது நாரதர் என்பதை அவன் அறியமாட்டான். ஐயா! வெயில் கடுமையாக இருக்கிறது. நீர் வண்டியில் தானே போகிறீர்! உமது பாதரட்சையை எனக்கு கொடுத்தால் நடந்து செல்ல சிரமம் இருக்காது, என்றான். நாரதர் அவன்மேல் இரக்கப்பட்டு பாதரட்சையைக் கொடுத்தார். அவன் அதை அணிந்து கொண்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அதோடு விட்டானா!
பெரியவரே! நீர் மகா தர்மவான். கேட்டதும் இந்தக் காலத்தில் யார் கொடுக்கிறார்கள்? சரி சரி...வண்டியில் குடை ஏதாவது இருக்கிறதா! தலை காய்கிறது. தந்தால் சவுகரியமாக இருக்கும், என்றான். அதுவும் நியாயமான கோரிக்கை தான் என்றெண்ணிய நாரதர், குடை ஒன்றை வர வழைத்துக் கொடுத்தார். ஆஹா! இவன் என்ன கேட்டாலும் கொடுத்துவிடும் ஏமாளி போல் தெரிகிறது. இவனிடம் இந்த வண்டியையே கேட்டால் என்ன! என்று யோசித்து, பெரியவரே! உம் வீட்டில் ஆயிரம் வண்டிகள் இருக்கும். இந்த ஒன்றைக் கொடுத்தால் குறைந்தா போய் விடுவீர்! என்றான்.நாரதருக்கு கோபம் வந்து விட்டது. அடேய்! ஆசைக்கு அளவு வேண்டும். வெயிலில் இருந்து தப்பிக்க தேவையான இரண்டு பொருட்களைக் கேட்டாய். கொடுத்தேன். இப்போது, தேவையே இல்லாமல் வண்டியைக் கேட்கிறாயே! ஆசைக்கு அளவு வேண்டாமா! ஏற்கனவே, நான் கொடுத்த பொருட்கள் மறைந்து போகட்டும், என்றார். பொருட்களைக் காணவில்லை. நாரதரும் வண்டியுடன் மறைந்துவிட்டார். அளவுக்கதிமாக ஆசைப் பட்ட ஏழை முட்டாள், தன் விதியையும் வாயையும் நொந்தவனாய் வெயிலில் தொடர்ந்து நடந்தான்.