சிருஞ்சயன் என்ற ராஜாவுக்கு ஒரே ஒரு மகள். தனக்கு மகள் மட்டும் தானே இருக்கிறாள், ஆண் குழந்தை வேண்டுமென்பது ராஜாவுக்கு விருப்பமாக இருந்தது. ஒருசமயம், பல அந்தணர்களை அவன் வரவழைத்தான். ஆண்குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டுமென ஆலோசித்துக் கூறுமாறு அவர்களுக்கு பொன் பொருளும் கொடுத்தான். பெரும் செல்வத்தைப் பெற்ற அவர்கள் மகிழ்ந்தார்கள். இந்த சமயத்தில், நாரத முனிவர் சிருஞ்சயனின் அரண்மனைக்கு வந்தார். அவரை அந்தணர்கள் அன்புடன் வரவேற்றனர். சிருஞ்சயனின் கொடைத்தன்மையால் தாங்கள் வளமடைந்ததை, நாரதரிடம் தெரிவித்த அந்தணர்கள், அந்த நல்லவனுக்கு ஆண் குழந்தை பாக்கியம் கொடுங்கள், என்று வேண்டுகோள் வைத்தனர். நாரதரும் அதை ஏற்றார். பின், அவர் சிருஞ்சயனிடம் சென்று, மன்னா! அந்தணர்கள் மூலம் உன் ஆசையைப் புரிந்து கொண்டேன். உனக்கு பிறக்கும் பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று சொல். உன் விருப்பப்படியே எல்லாம் நடக்கும், என்றார். சிருஞ்சயன் அவரிடம்என் பிள்ளை புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நாடே போற்றும் வீரனாகத் திகழவேண்டும், என்றவன் சற்று தயங்கி, இன்னொன்றும் வேண்டும், என்று இழுத்தான்.
இதைக்கேட்ட நாரதர், சிருஞ்சயா! விருப்பத்தைச் சொல்வதில் என்ன தயக்கம்! தயங்காமல் உள்ளதைச் சொல், என்றார். முனிவரே! என் மகனின் கழிவுகள் அனைத்தும் தங்கமாக வேண்டும், என்றான் பேராசை யுடன். அவன் பெரும் பேராசைக்காரனாக இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாலும், அதை வெளிக் காட்டாத நாரதர்,நாராயணா! என்று பரந்தாமனின் திருநாமத்தை ஜெபித்து சிரித்தபடியே, அப்படியே அமையும் சிருஞ்சயா! என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். அடுத்த வருடமே சிருஞ்சயனுக்கு மகன் பிறந்தான். அவனுக்கு தங்கமகன் என்று பெயர் வைத்தான் சிருஞ்சயன். நாரதர் கொடுத்த வரத்தின்படி, அவன் சிறுநீர் கழித்தால் தங்கம், மலம் கழித்தால் தங்கம், எச்சில் துப்பினால் தங்கம்....என அரண்மனையில் தங்கம் குவிந்தது. அதைக்கொண்டு சிருஞ்சயன் தன் மாளிகையையே பொன்மயமாக்கி விட்டான். இப்படி ஒரு தங்கமகன் அரண்மனையில் இருப்பதைக் கொள்ளைக்காரர்கள் கேள்விப் பட்டனர். கருத்து வேறுபாடு கொண்ட பல கொள்ளைக் கும்பல்கள் இந்த விஷயத்தில் கூட்டணி அமைத்தனர். எப்படியாவது அரசனின் மகனைக் கடத்தியாக வேண்டும், அரண்மனையில் காவல் அதிகம். அதையெல்லாம் தாண்டி அவனை கடத்த வேண்டுமென்றால், நமது கூட்டணி முக்கியம். அவனிடம் இருந்து கிடைக்கும் தங்கத்தை நாம் பிரித்துக் கொள்ள சம்மதிக்க வேண்டும். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்,என கொள்ளைக்கும்பல் தலைவன் ஒருவன் பேசினான். அனைவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டனர்.
அந்தக்கும்பல்களில் தலை சிறந்த கொள்ளையர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு, கடத்தல் திட்டம் தீட்டப்பட்டது. அவர்கள் அரண்மனைக்குள் புகுந்தனர். தங்கமகனை இரவோடு இரவாகத் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டனர். மறுநாள், சிருஞ்சயன் அலறினான். வீரர்களை அனுப்பி அவன் எங்கிருந்தாலும் மீட்டு வர உத்தரவிட்டான். கொள்ளைக்கும்பலுக்கு பயம் வந்து விட்டது. வீரர்கள் நம்மைப் பிடித்தால் மன்னன் தூக்கில் போட்டு விடுவான் என பயந்தனர். உடனே ஒரு கொள்ளைக்கூட்ட தலைவன், சக தலைவர்களிடம், தங்கமகனின் உடலுக்குள் தங்கம் இருப்பதால் தான் அவனது கழிவிலும் தங்கம் வருகிறது. நாம் அவனைக் கொன்று உடலைக் கிழித்து தங்கத்தை எடுத்துக் கொள்வோமே! என்றான். திட்டம் செயல்படுத்தப்பட்டது. தங்கமகன் இறந்தானே தவிர அவனது உடலில் தங்கம் ஏதும் இல்லை. கொள்ளையர்கள் பயத்திலும் வருத்தத்திலும் தப்பிக்க எண்ணியபோது, வீரர்கள் சூழ்ந்து அவர்களைப் பிடித்து விட்டனர். தன் மகனின் உடலைப் பார்த்து சிருஞ்சயன் வருந்தினான். அவனும் பேராசையால் தன் மகனை இழந்தான். கொள்ளையர்களும் பேராசையால் மன்னனின் மரணதண்டனையை ஏற்று உயிர் விட்டனர். ஆசை ஒரு அளவுக்குள் இருக்க வேண்டும். புரிகிறதா!