ஒரு நகர்ப்பகுதியை நல்லியக்கோடன் என்னும் மன்னன் நல்லாட்சி செய்து வந்தான். இந்த நல்லாட்சி தொடர வேண்டும். சிறு பிசகு ஏற்பட்டால் கூட, மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்ற கவலை அவனுக்கு இருந்தது. எனவே, அவன் அதிகாரிகளை அனுசரித்து வேலை வாங்கினான். மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். யார் கண் பட்டதோ தெரியவில்லை! நல்லியக்கோடன் மீது எதிரிநாட்டவர்கள் படையெடுத்தனர். எதிரிப்படைகள் இணைந்து வரும் தகவல் நல்லியக்கோடனுக்கு ஒற்றர்கள் மூலம் தெரிய வந்தது. பலநாட்டு படைகளின் முன், தன் படையின் எண்ணிக்கை குறைவு என்பதால், நல்லியக்கோடன் முருகப் பெருமானை சரணடைந்தான்.
அப்போது அசரீரி ஒலித்தது. நல்லியக்கோடா! ஒரு குளத்தில் உள்ள தாமரைப் பூக்களை பறி. அவற்றை எதிரிப்படைகளின் மீது ஏவு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது. அதை முருகனின் அருள்வாக்காக ஏற்ற மன்னன், போர்க்களத்துக்கு பூக்களுடன் போய் சேர்ந்தான். எதிரிகள் இதை பார்த்து ஏளனமாக சிரித்தனர். பூக்களை எங்கள் மீது தூவி, பாதபூஜை செய்து சரணடையப்போகிறாயா? என்று கேலியாகப் பேசினர்.மன்னன், பூக்களை எடுத்து எதிரிகள் மீது வீசினான். அவை அனைத்தும் வேலாக மாறி எதிரிப் படைகளைக் குத்திக் கிழித்தன. பூக்கள் வேலாக மாறி இவ்வாறு தங்களை துவம்சம் செய்யும் என அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் புறமுதுகிட்டு ஓடினர். வேலவன் அருளால், வேல் எறிந்து வென்ற ஊர் என்பதால் தன் தலைநகருக்கு வேலூர் என அந்த மன்னன் பெயர் வைத்தான்.