ஒரு கூட்டில் அண்ணன், தங்கை என இரண்டு சிட்டுக் குருவிகள் வாழ்ந்து வந்தன. சில நாட்களாக தங்கைக் குருவி மட்டும் பறக்காமல் கூட்டிலேயே இருந்தது. இதைக் கண்ட அண்ணன் குருவிக்கு மிகுந்த ஆச்சர்யம். ஏன் தங்கை இப்படி எங்கும் செல்லாமல் இருக்கிறாள் என்று கவலையுற்று ஒரு நாள் தங்கையிடம் கேட்டே விட்டான். ஏன் இப்படி பறக்காமல் இருக்கிறாய்? உனக்கு ஏதாவது நோய் பிடித்திருக்கிறதா? ஆமாம் அண்ணா, எனக்கு நோய் பிடித்துள்ளது. ஆனால் அது என்னுடைய நோய் அல்ல. மனிதர்களின் நோயை நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று அண்ணன் குருவி கூறியது. கடவுள் ஒரு நாள் என் முன் தோன்றினார். என்னை மட்டும் சாதாரணக் குட்டிக் குருவியாகப் படைத்திருக்கிறீர்களே? ஆறறிவு கொண்ட மனிதர்கள் எல்லாம் எவ்வளவு நன்றாக இருக்கிறார்கள். என்னையும் ஒரு மனிதனாகப் படைக்கக் கூடாதா? என்று வேண்டினேன். கடவுள் என்னைப் பார்த்துச் சிரித்தார். முதலில் மனிதர்களின் குணங்களை உனக்குத் தருகிறேன். அதைக் கொஞ்சம் சுமந்து பார் என்று அவர் சொன்னார். நானும் அப்படியே செய்தேன். அந்தச் சுமையால்தான் அன்று முதல் என்னால் பறக்க முடியவில்லை.
அப்படியா! மனிதர்களின் அந்தக் குணங்கள் என்னென்ன? என்று ஆவலுடன் கேட்டது அண்ணன் குருவி. கோபம், பொறாமை, பேராசை, வஞ்சனை, தீய எண்ணம், துரோகம், சுயநலம் ஆகிய மனிதர்களின் குணத்தைத்தான் கடவுள் என்னைச் சுமக்கச் சொன்னார். அண்ணன் குருவி அதிர்ந்து போனது. மனிதர்கள் இப்படியெல்லாமா இருக்கிறார்கள்? என்று நொந்து போனது. கடைசியில் தன் தங்கையிடம், கடவுள் தந்த சுமைகளையெல்லாம் நீ ஒவ்வொன்றாகக் கழற்றி தூர எறி, அதன் பின்னர் உன்னால் பறக்க முடியும் என்று யோசனை சொன்னது. தங்கைக் குருவியும் அண்ணன் சொன்னது போலவே செய்ய, தன் உடலின் எடை குறைவதைப் போல் அதற்குத் தோன்றியது. அடுத்த விநாடி அதனால் சுலபமாகத் பறக்கவும் முடிந்தது. வாழ்க்கையில் உயர்வு அடைதல் என்னும் பறக்கும் ஆசை இருந்தால் மனிதர்களின் ஏழு வகை தீய குணங்களை ஒவ்வொன்றாகத் தூக்கி எறியலாம்.