ஓர் மரப்பொந்தில் இருந்த எறும்புக் கூட்டம் அதிகாலைப் பொழுதில் இரைதேட சென்றன. காலைப் பனி மூட்டத்தால் மூடிய இலைகளை உடைய செடிகளை அவை கடந்து சென்றன. அவற்றில் ஒரு எறும்பு அந்தப் பனித் துளிகளைக் காட்டி, இவை என்ன, எங்கிருந்து வந்தவை? என்று மற்ற எறும்புகளிடம் கேட்டது. அதற்கு அவற்றில் சில, அவை பூமியிலிருந்து வந்தவை என்றும், மற்றும் சில, அவை கடலிலிருந்து வந்தவை என்றும் கூறின. இவ்வாறு கூறிய எறும்புகள் இரு அணிகளாகப் பிரிந்தன. தாங்கள் சொல்வதுதான் சரி என்று சண்டை போட ஆரம்பித்தன. அறிவும் புத்திசாலித்தனமும் உள்ள ஒரே ஓர் எறும்பு அவற்றிடையே எழுந்து நின்றது. தயவு செய்து உங்கள் சண்டையை நிறுத்துங்கள். நம்மைச் சுற்றிலும் உள்ளவைகளைக் கூர்ந்து நோக்குங்கள். எல்லாம் ஒரே பொருளை நோக்கி ஈர்க்கப்படுவதை அறிவீர்கள். அதேபோல, எல்லாமே, தன் ஆரம்ப நிலையை நோக்கியே திரும்பிச் செல்ல முற்படுகின்றன என்பதையும் அறிவீர்கள்.
நீங்கள் ஆகாயத்தை நோக்கி எவ்வளவு விரைவாக ஒரு கல்லை எறிந்தாலும், அது பிறகு பூமியை நோக்கியே திரும்பி வரும். வெளிச்சத்தை விரும்புபவை அனைத்தும் ஒரு காலத்தில் வெளிச்சமாகவே இருந்தவை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று விளக்கியது. ஆனால் அந்த எறும்புகள், தங்களுக்குள் சமாதானம் அடையாமல் மறுபடியும் சண்டையிட ஆரம்பித்தன. சூரியன் கிளம்பி வரவர, அந்தப் பனித் துளிகள் இலைகளை விட்டு அகன்று, மெல்ல மெல்ல உயர்ந்து, சூரியனை நோக்கிச் சென்று மறைந்தே விட்டன!