கந்தவேல் முருகப்பெருமானின் தீவிர பக்தன். சூரனுக்கும் அருள்செய்த முருகனைப் போல இரக்ககுணம் கொண்டவன். கந்தவேலும், அவனுடைய மனைவி வள்ளியும் இமைப் பொழுதும் வடிவேலை மறந்ததில்லை. எல்லா உயிர்களிலும் அந்த முருகனே வாசம் செய்கிறான் என நினைப்பவன். அவன் முருகன் கோயில்களில் நடக்கும் விழாக்களின் போது இசை சொற்பொழிவாற்ற செல்வான். அந்த சொற்பொழிவு ரசனையாக இருக்கும் என்பதால், தமிழகத்தின் எந்த மூலைக்கு சென்று பேசினாலும், அதைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருவார்கள். நாத்திகர்கள் கூட அவனது சொல் நயத்துக்காகவும், தமிழ் இனிமைக்காகவும் சொற்பொழிவு கேட்க வருவார்கள். அவனது சொற்பொழிவையே கோயில் நிர்வாகங்கள் விரும்பி ஏற்பாடு செய்ததால், மற்ற சொற் பொழிவாளர்கள் பொறாமை கொண்டனர். கந்தவேலை முடக்கிப் போட்டால் தான் தங்களை பேச அழைப்பர் என்பதால், அனைவரும் இணைந்து அவனுக்கெதிராக சதி செய்தனர். ஒருமுறை, அவன் தன் தாளவாத்தியக்காரர்களுடன் சுவாமிமலைக்குச் சென்றான். இசைசொற்பொழிவு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி, சதிகாரர்கள் இணைந்து கந்தவேலைத்தாக்குவதற்கு ஒரு நபரை ஏற்பாடு செய்திருந்தனர்.
அவன் திடீரென கூட்டத்தில் இருந்து எழுந்து மேடையை நோக்கிப் பாய்ந்தான். கத்தியை உருவி, கந்தவேலை குத்த முயன்ற போது, அவன் சுதாரித்து எதிரியின் கையைப் பிடித்துக் கொண்டான். இதற்குள் மேடையில் இருந்தவர்கள் அவனை வளைத்துப் பிடித்து விட்டனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. காவலர்கள் வந்து, அவனைக் கைது செய்ய முயன்ற போது, கந்தவேல் அவர்களிடம்,அவரை ஏன் கைது செய்கிறீர்கள்? அவர் மீது எந்தத்தவறும் இல்லை, யார் உங்களை இங்கே வரச்சொன்னது? என்று கூறி, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடம், என்னைக் கேட்காமல் போலீசை ஏன் வரவழைத்தீர்கள். உங்களில் யாராவது பாவமே செய்யாமல் இருந்துள்ளீர்களா? என்று கடிந்து கொண்டான். அந்த நபரை தன் அருகில் அழைத்து, தம்பி! இவ்வாறு இனியும் செய்யாதே, என்று கூறி, நீ புறப்படு, என்றதும், அவன் கண்ணீர் மல்க காலில் விழுந்தான். தம்பி! எதற்காக அழுகிறாய்! நடப்பதற்கெல்லாம் அந்த முருகனே காரணம். த்யூதம் சலயதாம் அஸ்மி என்று ஒரு ஸ்லோகம் இருக்கிறது. எங்கும் நிறைந்த இறைவன் தான் எல்லா உயிர்களிடமும் இருக்கிறார் என்பது இதற்குப் பொருள்.
திருடர்களிடமும், கொலை காரர்களிடமும் கூட அவரே இருக்கிறார். முருகன் அருளால் எனக்கு ஏதும் நடக்கவில்லை. என்னைக் கொண்டு இன்னும் சிலகாலம் அவன் நாடகமாட இருப்பதால், இப்போதைக்கு விட்டு வைத்துள்ளான். என்றாவது ஒருநாள் என் சரீரம் அழியத்தான் போகிறது, அது இன்று போயிருந்தாலும் முருகன் சித்தமே, என்று கூறி, அவனுக்கு திருநீறு பூசினான். அது மட்டுமின்றி, அங்கு வந்த போலீஸ் அதிகாரியிடம், ஐயா! இதுபற்றி புகார் ஏதும் அளிக்க விரும்பவில்லை. முடிந்தால் இவனை தயவுசெய்து இந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக்கொண்டான். அந்த அதிகாரி கந்தவேலின் பரந்த மனப்பான்மையையும், எல்லா உயிர்களிலும் முருகன் இருக்கிறான் என்ற சொற் றொடரையும் கேட்டு நெகிழ்ந்து போனார். கத்தியுடன் வந்தவனை எச்சரித்து, இனியாவது நல்வழியில் நடந்து கொள். இந்த சொற்பொழிவாளர் சொன்னது போல் எல்லா உயிரிலும் இறைவனைக் காண், என்று சொல்லி அவனை விடுவித்தார்.