இந்த அரசியல்வாதி அநியாயமாக கொள்ளையடித்து சேர்த்திருக்கிறார். இதற்கு இறைவனும் துணை போகிறானே, என்று புலம்புவோர் ஒருபுறம். அவனுக்கு மட்டும் பங்களா, கார், ஏசி என இறைவன் கொடுத்துள்ளான். எனக்கு பழையசாதம் சாப்பிடக்கூட விதியில்லையே, என புலம்புவோர் மறுபுறம். மூன்று சகோதரர்கள் ஒரு காட்டுப்பாதையில் சென்றனர். ஒருமுனிவரைப் பார்த்தனர். அவர்களை ஆசிர்வதித்த அவர், ஆளுக்கொரு தர்ப்பையைக் கொடுத்து, இதையில் தலையில் வைத்துக் கொண்டு நடக்க வேண்டும். எந்த இடத்தில் விழுகிறதோ, அந்த இடத்தில் உங்களுக்கு தேவையான பொருள் கிடைக்கும், என்றார். சகோதரர்கள் நடந்தனர். மூத்தவனின் தர்ப்பை ஓரிடத்தில் விழவே, அங்கு தோண்டினர். உள்ளே வெள்ளி இருந்தது.
முடிந்தளவுக்கு எடுத்துக் கொண்டு அவன் திரும்பி விட்டான். இரண்டாமவன் தலையில் உள்ளது கீழே விழவே, அங்கு தங்கமே கிடைத்தது. அவன் தன் தம்பியிடம்,நீயும் இந்த தங்கத்தை எடுத்துக் கொள், என்றான். அவனோ, முதலில் வெள்ளி, இப்போது தங்கம். நான் இன்னும் கொஞ்சம் போனால் இன்னும் உயர்ந்த பொருள் கிடைக்கும், என்று நடந்தான். தர்ப்பை விழுந்த இடத்தை தோண்டினால், செப்புக்கட்டிகளே கிடைத்தது. எனவே, அவன் மீண்டும் தங்கம், வெள்ளி கிடைத்த இடத்துக்கு ஓடினான். அங்கே எதுவுமே தென்பட வில்லை. செப்புக்கட்டிகளையாவது அள்ளுவோம் என திரும்பினால், அவையும் மாயமாகி இருந்தன. அவரவர்க்கு இறைவன் என்ன தர விரும்புகிறானோ அதுவே கிடைக்கும். அடுத்தவர்களை விட உயர வேண்டுமென்ற பேராசைப்பட்டால் இருப்பதையும் இழந்து விடுவோம்.