திருப்பதி செல்லும் வழியில் கபிஸ்தலம் என்ற சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள நந்தி மிகவும் பெரியது. அங்கு ஒரு வளைவு உண்டு. அதனுள் சென்று பார்த்தால் ஒரு சிவ லிங்கம் இருக்கும். அதன் அருகில் ஆகாச கங்கை என்ற அருவி உள்ளது. அந்த அருவியில் நீராடி சிவபெருமானை வணங்கிய பின்தான் பெருமாளை வணங்கச் செல்வார்கள். அங்கு கபிஸ்தல ஸ்வாமிகள் என்பவர் இருந்தார். அவர் மக்களுக்கு முப்பது வருட காலம் உபதேசம் செய்தார். ஒருநாள் வெளவால் ஒன்று திடீரென அவர் காலடியில் விழுந்து சிறகுகளை இழந்து துடிக்க ஆரம்பித்தது. அதைக் கண்டு வருத்தமடைந்த அவர் தனது கமண்டலத்தில் இருந்த தண்ணீரை அதன் மீது தெளித்து அது குணமடையப் பிரார்த்தனை செய்தார். உடனே, வெளவால் குணமடைய ஆரம்பித்தது.
அதைக் கண்ட கூடியிருந்த மக்களில் சிலர் நாங்கள் அனைவரும் முப்பது வருட காலமாக இங்கு வந்து உங்கள் உபதேசங்களை கேட்டு அதை நடைமுறைப்படுத்த முயல்கிறோம். இந்த வெளவாலைப் போல எங்கள் உடல் நலம் பாதிப்படையாமலும், மனதில் சஞ்சலங்கள் ஏற்படாமலும் இருக்க நீங்கள் அருள் புரிவீர்களா? என்று கேட்டனர். அதற்கு ஸ்வாமிகள், வெளவால் எந்த எண்ணமும் இல்லாமல், தனது இயல்பான குணத்துடன் இங்கு வந்து விழுந்தது. அதற்கு என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனவே, அது குணமாயிற்று. ஆனால், நீங்களோ என் உபதேசங்களைக் கேட்கிறீர்களே தவிர, மனம் அதில் ஒட்டுவதில்லை. வேறு விஷயங்களையும், உங்கள் சொந்தப் பிரச்னைகளையுமே சிந்திக்கிறீர்கள். சுருக்கமாகச் சொன்னால் மன ஒருமைப்பாடு இல்லாமல் உபதேசம் கேட்க வருகிறீர்கள். எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் முழுவதுமாக உங்களையும் உங்கள் மனதையும் ஒன்றுபடுத்துங்கள். நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும்! என்றார். வெட்கித் தலை குனிந்தனர் மக்கள்.