மனதில் சோகம் நிரம்பியிருந்தால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்கள், தங்கள் சோகத்தை தகுந்த நபர்களிடம் கொட்டினால் தான் ஆறுதல் கிடைக்கும். ஒரு கிராமத்தில் வசித்த பெற்றோருக்கு மூன்று பிள்ளைகள். ஒருநாள் தந்தை இறந்து விட்டார். அந்தத் தாய் மூவரையும் சிரமப் பட்டு வளர்த்து ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்தாள். நன்றி கெட்ட அந்தப் பிள்ளைகள் பெற்றவளை கவனிக்கவில்லை. மருமகள்களோ அவளையே பெரும்பாலான வேலைகளைச் செய்யச் சொல்லி விட்டு, அரட்டைக் கச்சேரியில் மூழ்கி விடுவார்கள். நேரத்துக்கு சாப்பாடு கொடுக்க மாட்டார்கள். கொடுத்தாலும் வீட்டில் மிஞ்சியதே கிடைக்கும். மருத்துவ வசதி கிடையாது. ஒருசமயம், அந்தத்தாயின் உடல் குண்டாக ஆரம்பித்தது. அது ஏதோ ஒரு வகை நோய். ஆனால், மருமகள்கள் தங்கள் கணவன்மாரிடம்,உங்க அம்மா நாங்க சொன்னதையே கேட்பதில்லை. கண்டதையும் சாப்பிடுறதாலே உடம்பு பெருத்துக் கிட்டே போகுது! நீங்க கண்டிச்சு வையுங்க, என்றார்கள். உண்மை தெரியாத பிள்ளை களும் அம்மாவை கடிந்து கொண்டார்கள்.
அவள் தனக்கு ஏதோ ஒரு நோய் என்று சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. ஒருநாள், மருமகள் களின் தொல்லை தாங்க முடியாமல், வீட்டை விட்டு வெளியேறி விட்டாள் அந்தத்தாய். வழியில் பாழடைந்த மண்டபம் தென்பட்டது. களைப்புடன் போய் உட்கார்ந்தாள். மண்டபத்தில் சிவன், முருகன், பார்வதி சிற்பம் இருந்தது. அதைப் பார்த்து, முருகா, சிவா, அம்மா, என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? என் பிள்ளைகளும், மருமகள்களும் பாடாய் படுத்துகிறார்கள். சாப்பிட சோறில்லை, உடுத்த இந்தக் கந்தை தான். என்ன செய்வேன். கண் திறந்து பாரேன், என்றாள். இப்படியே அங்கு நிரந்தரமாக தங்கி அவள் அழுத அழுகையில், பாதி உடல் கரைந்து விட்டது. யாராவது அந்த மண்டபத்திற்கு தங்க வருபவர்கள் தரும் உணவை சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே தங்கினாள். சோகத்தை சுமப்பவர்கள் தங்கள் குறைகளை கடவுளிடமோ, தங்கள் பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை சொல்லும் நற்குணமுள்ள பெரியோரிடமே எடுத்து சொல்ல வேண்டும். அது மனச்சுமையைப் பெரிதும் குறைக்கும்.