திருச்சி மலைக்கோட்டையில் அருள்பாலிக்கும் தாயுமான சுவாமியின் பெயரைக் கொண்ட தாயுமானவர் என்ற துறவி கருணை உள்ளத்திற்கு எடுத்துக்காட்டானவர். விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மனைவி ராணி மீனாட்சியம்மையின் அரசாங்கத்தில், அவரது தந்தை பதவிவகித்தவர். தந்தையின் காலத்திற்குப் பிறகு தாயுமானவருக்கும் அதே பதவி கிடைத்தது. அவர் நினைத்துஇருந்தால் அரசு சம்பளம், சுகமான வாழ்வென இனிமையாக கழித்திருக்க முடியும். ஆனால், அவரை ஆன்மிகத்திற்கென்றே ஆண்டவன் பிறப்பெடுக்க வைத்திருக்கிறானே! திடீரென ஒருநாள், அரசுப்பணியைத் துறந்தார். செல்வத்தை வெறுத்தார். மனிதனின் மானம் காக்க ஒரு கோவணம் போதுமே என அணிந்து கொண்டார். ஆன்மிக நல்லுரைகளை மக்களுக்கு வழங்கினார்.
ஒருநாள், ஒரு பக்தர்தாயுமானவர் குளிரில் நடுங்கியபடியே தெருவில் படுத்திருப்பதை பார்த்தார். மனம் வருந்தியது. தனது சால்வையை அவருக்குப் போர்த்தி ஆறுதல் பெற்றார். சிலநாட்கள் கழிந்தது. தாயுமானவரை சந்தித்தார். சால்வையைக் காணவில்லை. சுவாமி! அன்று குளிரில் நடுங்கினீர்களே என நான் தான் சால்வை போர்த்தினேன். இப்போது காணவில்லையே! என்றார். ஓ அதுவா! என்ற தாயுமானவர், அதை திருவானைக்காவலில் இருக்கும் என் அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு போர்த்தி விட்டேனே! என்றார். அம்பாளுக்கு சால்வையா? வந்தவர் குழம்பினார். அதன்பிறகு தான் தெரிந்தது. சாலையில் படுத்திருந்த ஒரு மூதாட்டி குளிரில் நடுங்குவதை கண்ட தாயுமானவர் அவளுக்கு போர்த்தியிருந்தது தெரியவந்தது. எல்லா உயிர்களிலும் அம்பிகையையே அவர் பார்த்தார். எவ்வளவு உயர்ந்த உள்ளம்! மகான்களுக்கு மட்டுமே இத்தகைய கருணை உள்ளம் சொந்தம்!