உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள தாரிகம் என்ற ஊர் வழியாக, சுவாமி விவேகானந்தர் ரயில் பயணம் செய்து கொண்டிருந்தார். பசி கடுமையாக இருந்தது. யாரிடமும் யாசகமும் கேட்பதில்லை, பணத்தைக் கையால் தொடுவதும் இல்லை, யாராவது தானாக முன்வந்து கொடுத்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற சத்தியம் பூண்டிருந்தார் சுவாமிஜி. அவர் எதிரே இருந்த ஒரு வாலிபன், சுவாமிஜி பசியில் வாடுவதைப் புரிந்து கொண்டான். அவனிடம் நிறைய உணவு, தண்ணீர் இருந்தது. கொடுக்க மனமில்லாத அவன், சுவாமிஜியைக் கேலியும் செய்தான். உழைக்க மனம் இல்லாதவர்கள் தான், காவி கட்டி துறவி வேடம்போடுகிறார்கள். இதெல்லாம் என்ன பிழைப்போ! என்றான். சுவாமிஜி ஏதும் சொல்லவில்லை. அடுத்த ஸ்டேஷனில் ரயில் நின்றது.
ஒருவன் அவசரமாக ஓடிவந்தான். சுவாமிஜி! இதைச் சாப்பிடுங்கள், என்று ரொட்டியும், தண்ணீரும் கொடுத்தான். அவரை விவேகானந்தர் முன்பின் பார்த்ததில்லை. ஐயா! நீங்கள் யாரென்றே எனக்கு தெரியாது. வேறு யாருக்கோ சேர்க்க வேண்டிய உணவை என்னிடம் தருகிறீர்கள் என நினைக்கிறேன். சரியாகத் தேடிப்பாருங்கள். நீங்கள் தேடிவந்த நபர், வேறு பெட்டியில் இருப்பார், என்றார். அந்த நபர் சிரித்தபடியே,இல்லை சுவாமிஜி! நான் உங்களுக்கு தான் உணவு கொடுத்தேன். நேற்றிரவு ஸ்ரீராமர் என் கனவில் தோன்றி, தங்கள் உருவத்தைப் பலமுறை காட்டி, இவருக்கு உணவளி என்று சொன்னார். அந்த நம்பிக்கையில் தான் உணவுடன் வந்தேன். தங்களையும் பார்த்து ராமனின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன், என்று சொல்லிவிட்டு, வேகமாகச் சென்று விட்டார். எதிரே இருந்தவன் தலை குனிந்தான். பக்தனைப் பகவான் சோதிப்பானே ஒழிய கைவிடமாட்டான்.