காசியை பவுண்டரீகன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு ஒரு மகன். ஒருசமயம், பவுண்டரீகனுக்கு தன்னைத் தவிர வேறு யாரையும் உலக மக்கள் வணங்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. மமதை காரணமாக நாட்டு மக்களை துன்புறுத்தி, தன்னையே கண்ணனாக பாவித்து வழிபட வேண்டும் என்று உத்தரவிட்டான். இதை பக்தர்கள் ஏற்க மறுத்தனர். உண்மையான கண்ணன் பாற்கடலில் லட்சுமிதேவியுடன் சங்கு சக்கரத்துடன் துயில் கொண்டிருக்கிறான். மேலும் அவன் தற்போது மானிட பிறவியாக துவாரகாபுரியை ஆட்சி செய்து கொண்டிருக்கிறான். அந்த கண்ணன் இருக்கும் போது உங்களை நாங்கள் எப்படி விஷ்ணுவாக ஏற்றுக் கொள்ள முடியும்? என எதிர்கேள்வி கேட்டனர்.
கோபமடைந்த மன்னன் கண்ணனைப் போல வேடம் போட்டுக் கொண்டான். தலையில் மயில் இறகு செருகி, கையில் புல்லாங்குழலுடன், நீல நிறத்தை மேனியில் தடவி, சங்கு சக்கரங்களை எடுத்துக் கொண்டு கண்ணனைப் போலவே அரசபீடத்தில் அமர்ந்தான். இப்போதாவது தன்னைக் கண்ணனாக கருதி வணங்க வேண்டும் என உத்தரவு போட்டான். ஆனால், அவனது கட்டளைக்கு யாரும் அடிபணியவில்லை. கண்ணன் உயிருடன் இருக்கும் வரை தனக்கு மதிப்பு இருக்காது என கருதிய பவுண்டரீகன் கண்ணன் மீது போர்தொடுத்தான். கோபமடைந்த கண்ணபிரான் பவுண்டரீகன் மீது சக்கரத்தை ஏவி அவனது தலையை துண்டித்தார். இதைக்கண்டு வெகுண்ட பவுண்டரீகனின் மகன், கண்ணனுடன் போரிட்டான். அவனது தலையும் துண்டிக்கப்பட்டது. இறைவன் ஒருவனே, மனிதராகப் பிறந்தவர்கள் தங்களை இறைவனாக கருதிக் கொள்ளக்கூடாது. கண்ணன் மட்டுமே மன்னன். அவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை இக்கதை காட்டுகிறது.