ஆயர்பாடியில் இருந்த யசோதையின் வீட்டில் கண்ணன் வளர்ந்து வந்த வேளை அது. "வெண்ணெய் என்றால் அவனுக்கு உயிர். யசோதை நிறையவே கொடுப்பாள் அவனுக்கு. ஆனால், அவன் மட்டும் சாப்பிட்டால் போதுமா? நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டுமே! எனவே, நிறைய வெண்ணெய் வைத்திருப்பவர்களின் வீட்டில் போய் கேட்பான். அவர்கள் கொடுக்க மறுத்தால் திருடுவான். "இறைவனே இப்படி செய்யலாமா? எப்படியாயினும் திருடுவது தவறு தானே என்ற கேள்வி, எல்லார் மனதிலும் எழுவது இயல்பு.
திருடுவது தவறு என்பது கண்ணனுக்குத் தெரியும். அவன் பாற்கடலிலேயே படுத்திருப்பவன். அவனுக்கு கிடைக்காத வெண்ணெயா என்ன! அப்படியானால், இப்படி ஒரு லீலையை உலகம் உய்வதற்காக அவன் நிகழ்த்திக் காட்டினான். தங்கள் தேவைக்கு மேல் பொருள் வைத்திருப்பவர்கள் ஏழைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும். அப்படி உதவாத பட்சத்தில் தான், பசி தாளாமல் திருட்டு நடக்கிறது. இதற்காக சோம்பேறிகளுக்கு உதவ வேண்டும் என்பது இல்லை. திறமையிருந்தும், தொழில் செய்யவோ, படிக்கவோ பணமில்லாத ஏழைகளுக்கு உதவலாம். வறுமை இருளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு விளக்கொளி காட்டலாம். இதனால் திருட்டு இல்லாத உலகத்தை அமைக்கலாம்.