இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது. ஆனால், பூலோகத்தில் இல்லை. வைகுண்டம்தான் அந்த ஊர். இங்கே விரஜா என்ற நதி ஓடுகிறது. காவிரியின் நடுவில் ஸ்ரீரங்கமும், தாமிரபரணிக் கரையில் ஸ்ரீவைகுண்டம் என்னும் ÷க்ஷத்ரமும் இருப்பதுபோல, நிஜ வைகுண்டம் விரஜா நதியைச் சார்ந்து மைந்து உள்ளது. இங்குள்ள நந்தவனத்தில் பகவான் விஷ்ணு தினமும் லட்சுமியுடன் நடமாடுவார். அங்கே நறுமணம் கமழும் பலவண்ண பூச்செடிகள் இருக்கும். பத்து பூச்செடிகளைத் தாண்டினால் ஒரு துளசிச் செடி இருக்கும். விஷ்ணுவுக்கு துளசியை மிகவும் பிடிக்கும். எனவே, துளசியின் அருகில் போய் நின்று கொள்வார்.
இதைப் பார்க்கும் மற்ற பூக்கள்நாம் அழகும், நறுமணமும் கொண்டிருந்தாலும் நம்மை பகவான் பார்க்க மறுக்கிறானே! அவன் கழுத்தை நாம் ஏன் அலங்கரிக்க வேண்டும்? என பொறாமைப்படுவதில்லை. மாறாக, இந்த துளசி இங்கிருப்பதால் தானே பகவான் அதைப் பார்ப்பதற்காக இங்கே வருகிறார். அதனால் தானே நாம் அவரைத் தினமும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. போதாக்குறைக்கு, மகாலட்சுமியும் உடன் வருகிறாள். அவளது திவ்ய தரிசனம் யாருக்கு கிடைக்கும்! இந்த லட்சுமி நாராயண தரிசனம் நமக்கு என்றும் கிடைக்க காரணமான துளசியை நெஞ்சார பாராட்டுவோம், என பாராட்டி மகிழ்ந்தன. மனிதர்களும் இப்படித்தான் நினைக்க வேண்டும். தங்களை விட உயர்ந்தவர் அருகில் இருந்தால், அது தங்களுக்கு கிடைத்த பேறாக கருதி, அவரிடம் விஷய ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், இந்த பூமியில் போட்டி பொறாமைக்கு இடமில்லை.