நர்மதை நதிக்கரையில் அஸ்வமேத யாகம் செய்து கொண்டுஇருந்தான் மகாபலி சக்கரவர்த்தி. அவனது நோக்கம் இந்திர பதவியை அடைவது! நர்மதை நதி மிகவும் புண்ணியமானது. இந்த நதியை யாராவது பார்த்திருந்தாலும் சரி... பார்க்காவிட்டாலும் சரி...இரவில் படுக்கச் செல்லும் போதும், காலையில் எழும்போதும் நர்மதா என்று சொல்லி, மானசீகமாக வணங்கினால் போதும்! புண்ணியம் ஏராளமாய் கிடைக்கும். அது மட்டுமல்ல! நர்மதையை நினைப்பவரின் அருகில் விஷப் பூச்சிகள் அண்டவே அண்டாது. இப்படிப்பட்ட புகழ்மிக்க நர்மதை நதி தீரத்தில் மகாபலி யாகம் செய்து கொண்டிருந்த வேளையில், குள்ளமாய் வந்தார் ஒரு அந்தணர். பளிச்சென்ற முகம், பிரகாசிக்கும் உடல், பூணூல் அணிந்திருந்தார். ஒரு கையில் கமண்டலம், மற்றொரு கையில் குடை. யாக காலத்தில் யார் எதைக் கேட்டாலும் மன்னர்கள் கொடுத்து விடுவார்கள். அந்த பிராமணரை வரவேற்றான் மகாபலி. தாங்கள் யார்? அபூர்வமானவன் என்றார் பிராமணர்.
அதாவது... என்று இழுத்த மகாபலியிடம்,என்னை இதற்கு முன் நீ பார்த்திருக்க மாட்டாய், என்றார் பிராமணர். உங்கள் ஊர்...? யாதும் என் ஊரே. இந்த உலகம் முழுக்க என்று வைத்துக் கொள்ளேன்,. இளைஞராக இருக்கிறீர்களே! உங்களுக்கு தாய் தந்தை இருக்கிறார்களா? அந்தணர் கையை விரித்தார். ஓ! யாருமே இல்லாத அனாதையா இவர்? மகாபலியின் தலையில் இப்போது கர்வம் அளவுக்கு மீறியது. என்னை விட இப்பூமியில் அதிக தானம் செய்தவர்கள் யாருமில்லை. அதிலும், அஸ்வமேத யாகம் நடத்தும் இந்த வேளையில், அநாதை பிராமணருக்கு தானம் செய்யப் போகிறேன் என்றால், என்னை விட பாக்கியசாலி யார் இருக்க முடியும்? என்று மனதிற்குள் கர்வம் கொண்டவனாய், அந்தணரே! உமக்கு என்ன வேண்டும்? என்றான். தானம் செய்யும் போது, என்னை விட சிறப்பாக தானம் செய்பவர்கள் யாருண்டு என்று கர்வப்படக்கூடாது. அவ்வாறு கர்வம் கொள்பவர்கள் தானம் செய்து பலனே இல்லை.
வேறு என்னப்பா கேட்கப் போகிறேன்! என் சின்னக்காலுக்கு மூன்றடி நிலம் தந்தால் போதும்! மகாபலி யோசித்தான். ஒருவருடைய காலுக்கு மூன்றடி நிலம் கிடைத்து அதில் அவர் என்ன செய்யப் போகிறார்? சரி...நமக்கென்ன! கேட்பதைக் கொடுத்து விட்டுப் போவோம்,. அளந்து கொள்ளுங்கள் சுவாமி!. குள்ள பிராமணர் திடீரென வளர்ந்து விட்டார். பகவான் விஷ்ணுவாக விஸ்வரூபமெடுத்து! பகவானே! உலகுக்கே படியளக்கும் நீயா, இந்த சிறியேனிடம் யாசகம் கேட்டாய்? இரண்டடியால் உலகை அளந்துவிட்டாய். மூன்றாவது அடிக்காகக் காத்திருக்கிறாய். எப்படி தர முடியும்? வாக்களித்துவிட்டு, மாறுவது என்பது எவ்வளவு பெரிய அவமானம். என் தலையில் உன் திருவடியைப் பதித்து விடு! என்னை எடுத்துக் கொள்... மகாபலி உருக்கமாகப் பேசினான். பகவான் தன் திருவடியால் ஒருமுறை பூமி முழுக்க அளந்தான். அப்போது, அந்தத் திருவடியைப் பெற நாம் முயற்சிக்கவில்லை. இதோ! ஓணம் திருநாள் வருகிறது. அன்று அவனது அருட்பிரவாகம் உலகெல்லாம் பாயும். இந்த உலகிலேயே நான் தான் பெரியவன் என்ற கர்வத்தைக் களைந்து விட்டு, அவனது திருவடிக்காக காத்திருந்தால், அது நம் மீதும் நிச்சயம் படும். பிறப்பில்லா நிலையடைந்து வைகுண்டத்தில் நிரந்தரமாய் நிம்மதியாய் வாழலாம்.