தமிழில் மகாபாரத்தை எழுதிய நல்லாப்பிள்ளை, 20 வயது வரை அடிப்படை கல்வியறிவு கூட பெறவில்லை. இவரது மனைவி கூட இவரது கல்வியின்மை பற்றி கேலி செய்திருக்கிறாள். இதனால், படிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது. ஆசிரியர் ஒருவர் வீட்டில் தங்கி கற்றார். ஓயாமல் ஒழியாமல் இரவு பகலாகப் படித்தார். அரிச்சுவடியில் இருந்து தொல்காப்பியம் வரை பாடங்களை நடத்தப்பட்டன. பாடம் கேட்பதில் இருந்த ஆர்வத்தால், அன்றாட உணவைக் கூட நல்லாப்பிள்ளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. 4 ஆண்டுகள் கழிந்தன. ஆசிரியர் விரும்பும் சிறந்த மாணவராக நடந்து, நல்ல புலமை பெற்றார்.
ஒருநாள் மதியம் நல்லாப்பிள்ளை சாப்பிட அமர்ந்தார். தயிர்சாதத்திற்கு துவையல் எடுத்துக் கொண்டவர், துவையல் கசக்கிறதே! என்று தன்னையும் மறந்து கத்திவிட்டார். ஆசிரியரும் மகிழ்ச்சியில் நல்லாப்பிள்ளையை அணைத்துக் கொண்டார்.தம்பி! நீ வீட்டுக்குப் புறப்படும் நேரம் வந்து விட்டது. இதுவரை பாடத்தில் கவனத்தைச் செலுத்தினாய். அதனால், நாள்தோறும் சாப்பிடும் வேப்பிலைத் துவையலின் கசப்பு கூட உனக்குத் தெரியவில்லை. பாடங்களை முழுமையாகக் கற்றுக் கொண்டுவிட்டாய். இப்போது தான், புறவுலக சிந்தனை உனக்கு வந்திருக்கிறது. அதனால், துவையலை சாப்பிடமுடியாமல் கசப்பு தெரிகிறது, என்றார். நல்லாப்பிள்ளைக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. பாடத்தில் இருந்த கவனத்தில், அதுவரை தான் சாப்பிட்டது வேப்பிலை துவையல் என்பது கூட தெரியாமல் இருந்ததைப் புரிந்து கொண்டார். எதையும் ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதே மாணவர்களுக்கு இக்கதை உணர்த்தும் கருத்து.